ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானி : பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

டிசம்பர் -4 ந.பிச்சமூர்த்தி நினைவுநாள் ஓட்டோடு ஒட்டிஉறவாட மனமில்லாமல் ஓட்டைவிட்டு ஒதுங்கி நிற்கும் புளியம்பழம் போல் வாழ்க்கையை ஒட்டியும் ஒட்டாமலும் முன்னிறுத்திப் பார்க்கின்றன ந.பிச்சமூர்த்தியின் இன்சுவைக் கவிதைகள். தொலைந்ததைத் தேடும்போதுதான், தொலைத்தும் தேடாத பலவும் கிடைப்பதைப் போல் ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளுக்குள் கவித்துவம்,மனிதம், நம்பிக்கை ஆகியவற்றைத் தேடும்போது நாம் தேடினாலும் கிடைக்காத பல பொக்கிஷங்கள் காணக் கிடைக்கின்றன. காணாமல்போனவனைத் தேடிப்போனவனும் காணாமல்போன கதையாய் ந.பிச்சமூர்த்தியைப் படிக்கும் வாசகன் அவர் கவிதைவெளிக்குள் காணாமல் போகிறான். அறிமுகமாகாத இடத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவன் அந்த இடத்தைவிட்டகல அவசரமாய் நுழைவாயிலைத் தேடித் தவிப்போடும் தயக்கத்தோடும் நகர்கிற உணர்வை ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன. மகாகவி பாரதியின் வசனகவிதை வடிவமுயற்சிகளும், வால்ட்விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’ ந.பிச்சமூர்த்தியின் புதுமைமுயற்சிகளுக்குக் காரணமாக அமைந்தன. யாப்பின் அழகில் இலயித்துக் கவிதைகள் படைத்த ந.பிச்சமூர்த்தி, வ...