காலம் எழுதிய கம்பீரஎழுத்து: சி.சு.செல்லப்பா
பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி(தன்னாட்சி), ரஹ்மத் நகர்,திருநெல்வேலி mahabarathi1974@gmail.com 9952140275 எல்லோரும் எழுதுகிறார்களே நாம் எழுதினால்என்ன என்ற எண்ணம் தோன்றியதோ என்னவோ..சின்னமானூர் சுப்ரமணியம் செல்லப்பா என்கிற உயிரெழுத்தை உரிமையோடு எழுதிப்பார்த்தான் காலம் எனும் கம்பீர எழுத்தாளன். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள வாடிப்பட்டியில் 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 இல் பிறந்து, வத்தலகுண்டு அக்ரஹாரத்தின் கோவில்தெருவில் வசித்த சி.சு.செல்லப்பா, பின்னர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். எழுத்தையே வாழ்க்கையாகவும், வாழ்வையே எழுத்தாகவும் கொண்டுவாழ்ந்தவர். ஜீவனாம்சம், சுதந்திரதாகம் என்பன அவர் எழுதிய அருமையான நாவல்கள். வாடிவாசல் அவரது குறுநாவல். தன் தந்தையைக் கொன்ற காளையை அடக்கிய மகனின் கதையை வாடிவாசல் கதையில் உணர்ச்சிப் பெருக்கோடு சி.சு.செல்லப்பா எழுதியுள்ளார். சி.சு.செல்லப்பாவிடம் ஐம்பதுகளிலேயே அருமையான நிழற்படக்கருவி இருந்தது. ...