தமிழ் நம் தடையகற்றும் அடையாளம்

உலகத் தாய்மொழி நாள் சிறப்புக்கட்டுரை ( பிப்ரவரி 21) http://www.dinamalar.com/news_detail.asp?id=1717447 பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275 தாயிடமிருந்து நாம் கற்றமொழி, தாயாக நம்மைப் பெற்ற மொழி நம்மருமைத் தமிழ்மொழி. “தமிழ்..தமிழ்” என்று தொடர்ந்து சொன்னால் “அமிழ்து அமிழ்து” என்று நம் காதுகளில் தேனாய் ஒலிக்கிறது. உலகமொழிகள் ஆறாயிரத்திலும் சிறந்தமொழி நம் அன்னைத் தமிழ்மொழி. எளிமையும் இனிமையும் நீர்மையும் கொண்ட உலகின் ஒப்பற்ற மொழி நம் தமிழ்மொழி. திராவிடமொழிகளின் தாய் பலநூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மொழிகளான கிரேக்கமும் எபிரேயமும் இலத்தீனும் இன்று பேசுவதற்கு அதிக மக்களின்றித் தவித்துக் கொண்டிருக்கப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் தாய்மொழியான தமிழ் இன்றும் இணையத்தின் இதயத்தில் இதமாய் வீற்றிருக்கிறது. திராவிடமொழிகளின் தாயாகத் திகழும் நம் தமிழ்மொழி சொல்வளமும் பொருள்வளமும் மிக்கதாக இன்றும் இளமையோடும் இனிமையோடும் திக...