சௌந்தர மகாதேவனின் “தண்ணீர் ஊசிகள்” கவிதை நூலுக்கு சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. வண்ணதாசன் அவர்களின் வாழ்த்துரை தண்ணீர் ஊசிகள் ........................................ ஏற்கனவே நமக்குத் ‘தண்ணீர்ச் சிற்பம்’ தெரியும். இது ‘தண்ணீர் ஊசிகள்’. நிலம் கிழிந்தால் நீர் தைக்கும். நிலத்தை யார் கிழிக்கிறார்கள் என்பதொரு பெரும் கேள்வி. சௌந்தர மகாதேவன் தையல்காரர். திருநெல்வேலியின் அத்தனை தெருக்களிலும் தன் தையல் இயந்திரத்தைத் தள்ளிக்கொண்டே போயிருக்கிற ஒருவர். வெயிலறிந்தவன் எப்போதும் மழை அறிவான். நிலம் அறிந்தவன் நீர் அறிவான். அறிந்திருக்கிறார். முதல் கவிதையிலே சொல்லிவிடுகிற வெளிப்படை. கவிதை என்பது அவருக்கு நினைவின் அடையாளம். நிறைய வாழ்ந்தவருக்கு நிறைய நினைவுகள். நிறைய அடையாளங்கள். நிறையக் கவிதைகள். சின்னத் தாத்தா, திம்மராஜபுரம் காந்திமதி அக்கா,(எங்களுக்கு எல்லாம் திம்மராஜபுரம் என்றால் ஜோதிவினாயகம் தான்), நீலகண்டன் பிள்ளை, முப்பிடாதியக்கா, விபூதிப் பாட்டி, மருதையாத் தாத்தா, மயிலக் கோனார், தட்டாக்குடித் தெரு சரசுப் பெரியம்மை, தெப்பக்குளத் தெரு செண்பகத்தக்கா, சுப்பாராய...