சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி மதியம் கொளுத்தும் வெயில் பாபநாசம் நோக்கிப் பயணித்தேன். காருக்குறிச்சி தாண்டியதும் முகத்தில் சில்லென்ற காற்று.வெயிலையும் மீறி முகத்தில் அறைந்தது.நெல்வாசம் நாசியை வருடியது. பாபநாசத்தில் வெயில் வறுத்தெடுத்தது. பாபநாசம் கோவிலுக்கு எதிரே சலசலத்தபடி தாமிரபரணியின் கம்பீரம் கல்மண்டபங்களுக்கிடையே தெளிவாகத் தெரிந்தது. முத்துநகர் வாசகர் வட்டமும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியும் இணைந்து நடத்திய தாமிரபரணிக் கவிஞர்கள் கருத்தரங்கில் கல்யாண்ஜி கவிதைகள் குறித்துப் பேச அழைக்கப்பட்டிருந்தேன். எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் மிக உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார். கவிஞர் நெல்லை ஜெயந்தா முன் வரிசையில். கல்யாண்ஜி கவிதைகள் குறித்துப் பேசியதில் மகிழ்ச்சியே! புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, இன்னொரு கேலிச் சித்திரம், உறக்கமற்ற மழைத்துளி , நிலா பார்த்தல் , கல்யாண்ஜி கவிதைகள் , மணல் உள்ள ஆறு, கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள் , என் ஓவியம் உங்கள் கண்காட்சி, நொடிநேர அரைவட்டம் ஆகியன கல்யாண்ஜியின் உயிர்த்துடிப்பு...