சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர்- 3
எவரெஸ்ட்டும் நமக்கு எட்டும் தூரத்தில்தான்
...................................................................................................

மகத்தான சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகள்
முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி,9952140275
முடியாதென்ற முடிவு முடமாக்கும் நம் வாழ்க்கையை,
முடியுமென்ற தீர்வு திடமாக்கும் நம் சாதனையை. முடியாதென முனகுகிறவனுக்கு விடியாது
எந்நாளும். பாசி பிடித்த படிக்கட்டு வழுக்குவது மாதிரி அவநம்பிக்கை பிடித்த
துயரமனம் வாழ்வை வழுக்கித் தள்ளும்.
எதையும் எதிர்கொள்ளும் வலிமை படைத்த
மாற்றுத்திறன் படைத்த சாதனையாளர்கள் நம்மை சில நேரங்களில் வியக்க வைக்கிறார்கள்,
சில நேரங்களில் தங்கள் வேகத்தாலும் விவேகத்தாலும் நம்மை இயக்கவும்வைக்கிறார்கள்.
கை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத சாதனை படைத்த மகத்தான மாற்றுத்திறனாளிகள்
சமூகத்தின் நம்பிக்கை அடையாங்களாகத் திகழ்கிறார்கள்.
அலகிலா விளையாட்டு இந்த
வாழ்க்கை, போராட மறுப்பவர்களை அது திண்டாட வைத்துவிடுகிறது.
இன்னல்களின்
சன்னல்களிலிருந்து பார்க்கும்போது
பிரமாண்டமான வாழ்க்கை நம் கண்களுக்குப் புலப்படாது. தன்னோடு சவால்விடும்
தன் உடலோடு, சமூகம்தரும் சவால்களையும் மனஉறுதியோடு எதிர்கொள்பவர்களை நாம்
மரியாதையோடுதான் பார்க்கவேண்டும்,அவர்களின் முயற்சிகளை நாம் ஊக்கப்படுத்த
வேண்டும்.
அவர்களைப் போன்று சாதனைபடைத்துக் காலமாய் மாறியவர்கள் ஒருபோதும்
‘காலமாவதில்லை’. அவர்கள் இறந்தாலும் நம்மோடு இப்போதும் இருக்கத்தான்
செய்கிறார்கள்.
சவால்களைக் கண்டு அஞ்சுபவர்கள் உயிரோடு இருந்தாலும் மனத்தால்
அவர்கள் மரித்துப் போகிறார்கள். ஏமாற்றங்களை எழுச்சியோடு எதிர்கொள்கிறவர்களுக்கே ஏற்றமும்
எழுச்சியான மாற்றமும் வரும்.
“உன் உதவி உனக்கிருந்தால் நீ உலகை வெல்லலாம்” என்று
சொல்லி அவர்கள் மற்றவர்களுக்கு வாழ்ந்து காட்டியாய், முன்மாதிரியாய்
வாழ்கிறார்கள். அவர்களில் சிலர் இதோ நம் காகிதப் பக்கத்தில்..
+2 சாதனையாளர் டெயன்னா பெரோரா
நிறுத்துப் பார்க்கவேண்டியவை நிறைய இருந்தாலும்
நிறுத்திப் பார்க்கிறோம் நிறையவே சோகத்தை. சோகத்தைத் தன் முயற்சியால் எதிர்கொண்ட
மாற்றுத்திறன் மாணவி நம்மை வியக்க வைப்பவர். பிறவியிலேயே மேகுலர் டி ஜெனரேஷன்
எனும் கண்பார்வைக் குறைபாடுடைய காரைக்காலைச் சார்ந்த +2 மாணவி டெயன்னா
பெரோராவைக்
கண்பார்வைக் குறைபாட்டினைக் காரணம் காட்டிப் பள்ளிநிர்வாகம் தனித்தேர்வராகத்
தேர்வை எதிர்கொள்ள அறிவுறுத்திப் பள்ளியைவிட்டு வெளியேற்றியது. தன் காதுகளையே
கண்களாக மாற்றித் தந்தை தாய் உதவியோடு இரவுபகலாகப் பாடங்களைக் கேட்டுப் படித்து
பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் மாணவி டெயன்னா பெரோரா 1159 மதிப்பெண்கள் பெற்றுச்
சாதனை படைத்தார்.
இந்தச் செப்படி வித்தை எப்படி நிகழ்ந்தது? சாதனையாளர்களெல்லாம்
சோதனைகளுக்குச் சோதனை தந்த சோதனையாளர்களே. சங்கடங்கள் இல்லாமல் சாதனைகள் இல்லை
என்பதை மாணவி டெயன்னா பெரோரா வாழும் சான்றாக நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறார்.
பரதக் கலைஞர் சுதாசந்திரன்
மல்பெரி இலைகளுக்கு ஆசைப்பட்டு மரணித்துப்
போகும் பட்டுப்புழுக்களாய் நாம் இனியும் மாறத்தான் வேண்டுமா?
கவலைப் பிள்ளைகளின்
சவலைப்பிள்ளைகளாய் நாம் ஏனிருக்க வேண்டும்? தமிழகத்தின் புகழ்பெற்ற பரதநாட்டியக்
கலைஞரான சுதாசந்திரன் 1981 ஆமாண்டு திருச்சியில் பெரும் விபத்தைச் சந்தித்தார்.
வலதுகால் அறுவைசிகிச்சையில் அகற்றப்பட்ட நிலையிலும் அவர் கலங்கவில்லை. தனக்கு வந்த
எதிர்பாராத சவாலைத் துணிச்சலோடு
எதிர்கொண்டார்.ஜெய்ப்பூரில் செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டு
முன்பிருந்தே ஊக்கத்தைவிட அதிகமாய் செயல்பட்டார்.
1984 இல் மயூரி என்ற
திரைப்படத்தில் நடனமாடும் பாத்திரத்தைச் சவாலாக ஏற்று நடித்தார், சரித்திரம்
படைத்தார். 1986 இல் தேசியவிருதினை வென்றார். ஐரோப்பியா,கனடா,மத்திய கிழக்கு ஆசிய
நாடுகளில் பரதநாட்டிய நிகழ்சிகளை நடத்தி உலகப்புகழ் பெற்றார்.
தமிழ்த்தொலைக்காட்சித் தொடர்களில் இன்றும் நடித்துவருகிறார். இருக்கைக்குக் கீழே
இறக்கைகளை மாட்டிக் கொண்டு இரவும் பகலும் பறந்து கொண்டிருக்கும் இவரைப் போன்ற
மாற்றுத்திறன்கொண்ட சாதனையாளர்களே உண்மையில் பூமியின் சாதனைப் புத்திரிகள்.
ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன்
புயலோடு நெருங்கிவரும் காற்றழுத்தத்
தாழ்வுமண்டலம் சில நேரம் சுனாமிச்சுவடிகளைத் தந்து கடலையும் கலங்க வைக்கத்தான்
செய்கிறது.
அப்படித்தான் நடந்தது, பொறியியல் பட்டதாரி ராமகிருஷ்ணன்
வாழ்க்கையிலும். நான்காமாண்டுப் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்த ராமகிருஷ்ணன்
கடற்படை அதிகாரிக்கான எழுத்துத்தேர்வில் வென்று உடற்தகுதித்திறன் தேர்வில்
கயிறுஏறும் பயிற்சியில் இருந்தபோது கீழே தவறிவிழுந்தார்.
முதுகுத்தண்டுவடம்
பாதிக்கப்பட்டு புனே மற்றும் பெங்களூர் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டார்.
எதுவும் பயனளிக்கவில்லை. கழுத்துக்குக் கீழே அனைத்து உறுப்புகளும் செயல்இழந்தன.
செயல்படாத உறுப்புக்களோடு என்ன செய்துவிட முடியும்? என்று நொறுங்கிப் போன இளைஞன்
ராமகிருஷ்ணனுக்கு நம்பிக்கை தந்தவர் அவருக்குச் சிகிச்சை தந்த மருத்துவர் டாக்டர்
அமர்ஜித். “இறைவன் படைப்புக்கு ஆழமான பொருள் உண்டு, யாரையும் அவன் காரணமில்லாமல்
படைப்பதில்லை. உன் வழிகாட்டலுக்கு ஆயிரக்கணக்கான மனிதர்கள் காத்திருக்கிறார்கள்,
எனவே கவலையைவிட்டு உன் சொந்த ஊரான ஆய்க்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லத்தை
நம்பிக்கையோடு தொடங்கு” என்று சொன்னார்.
அதை வேதவாக்காக ஏற்றுக்கொண்ட ராமகிருஷ்ணன்
தென்காசிக்கு அருகில் ஆய்க்குடியில் தனக்கு நம்பிக்கை தந்த டாக்டர் அமர்ஜித்
பெயரால் 32 ஏக்கரில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமர்சேவா சங்கத்தைத் தொடங்கினார்.
ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மாற்றுத்திறனாளிகளுகான தொழில்நுட்பப்
பயிற்சிப்பள்ளி என்று உருவாக்கி ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும்
உன்னத மனிதராகத் திகழும் ராமகிருஷ்ணன் சக்கரநாற்காலியில் அமர்ந்து சாதித்துக்
கொண்டிருக்கிறார்.
மலைத்து நின்றால்
எதுவும் குலைத்துவிடும் நம்மை. வீறுகொண்டு எழுகிறவன் நாட்களே வீரவரலாறாய்
எழுதப்படும் என்றும். மலை குலைந்தாலும் நிலை குலையாத ராமகிருஷ்ணனைப்போன்ற லட்சிய
மனிதர்களைக் காணும்போதெல்லாம் நாமும் உற்சாகமடைகிறோம்.
பேராசிரியர் ஸ்டீபன் ஹோக்கிங்
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில்
பேராசிரியராகப் பணியாற்றும் ஸ்டீபன் ஹோக்கிங் 21 வது வயதில் அமையோட்ரோபிக்
லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் எனும் நரம்புத்தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுக் கைகால்கள்
செயல்இழந்து, பேசும்திறனையும் இழந்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.
கணினியின் உதவியோடு தான் சொல்வதை மற்றவர்களுக்குப் புரியவைக்கும் திறனை
வளர்த்துக்கொண்டார்.
உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர் ஆய்வுகளைக்
கைவிடவில்லை.அண்டவியல், குவாண்டம் ஈர்ப்பு
என்ற துறைகளில் இவர் ஆய்வுசெய்து சொல்லியுள்ள ஆய்வுமுடிவுகள் விஞ்ஞானிகளால்
முக்கியமனதாகக் குறிப்பிடப்படுகிறது. உலகின் ஆய்வறிஞராக அவர் மாறிப்போனார்.
அவர்
எழுதிய ‘நேரத்தின் சுருக்க வரலாறு’ எனும் நூல் உலகப்புகழ் பெற்றது. அவர்
எந்தநிமிடத்திலும் தன் குறைகுறித்து வருந்தியதோ தன்னை நொந்துகொண்டதோ இல்லை. சிறைக்கம்பிகளுக்குப்
பின்னா சிட்டுக்குருவிகள் இருக்கும்?
விட்டுவிடுதலையாகி விரிவானில் சிறகடித்த
சிந்தனைப் பறவையவர். சமவெளிகளில் சாதாரணமாய் ஓடும் நீர்தான், அருவியாய் விழும்போது
ஆர்ப்பரிப்போடு கொட்டித்தீர்க்கிறது. உடல் குறையை வென்ற பேராசிரியர் உலகின்
அறிஞர்கள் மனதையும் தன் ஈடுஇணையற்ற உழைப்பால் வென்றார்.
கரங்களின்றி விமானம் ஓட்டிக் கின்னஸ் சாதனை செய்த ஜெசிக்கா காக்ஸ்
அமெரிக்க நாட்டின் அரிசேனா நகரில் பிறந்தபோதே
கைகள் இல்லாத குழந்தையாகப் பிறந்த ஜெசிக்கா காக்ஸ் வானில் பறக்க ஆசைப்பட்டார்.
அவர் இளமைக் காலத்தில் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் மற்றும் பயிற்சிகளின் மூலம்
2008 ஆண்டு விமான ஓட்டிக்கான உரிமம் பெற்றார்.
பத்தாயிரம் அடி உயரம் பறக்கும் இலகு
ரக விமானத்தை மிகத்திறனோடு ஓட்டிச் சரித்திரத்தில் இடம்பெற்றார்.
தன்னம்பிக்கையோடு
பேசிக் கேட்போரை எழுச்சியடையச் செய்யும் ஜெசிக்கா காக்ஸ் மாற்றுத்திறனாளியாய்
விமானம் ஓட்டியவர் என்ற சிறப்பின் மூலம் கின்னஸ் சாதனையாளர் பட்டியலில்
இடம்பெற்றார்.
நம்பிக்கையோடு ஓடிய சாதனனையாளர் டெர்ரி பாக்ஸ்
கனடாவைச் சார்ந்த உலகப்புகழ் பெற்ற தடகளவீரர்
டெர்ரி பாக்ஸ் புற்றுநோயில் தனது வலதுகாலை
இழந்தார். நம்பிக்கையோடு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் ஆய்வுகள்
நிகழ்த்துவதற்காக 1980 இல் கனடாவில் நம்பிக்கை நெடுந்தொலைவு நிகழ்வில் ஒற்றைக்
காலோடு 143 நாட்கள் ஓடினார்.
காலைப் பாதித்த புற்றுநோய் அவரது நுரையீரல்வரை பரவி
எலும்புப் புற்றுநோயால் 143 வது நாளில் 22 வது வயதில் இறப்பைச் சந்தித்தார்.
ஒற்றைக்காலில் அவர் நிகழ்த்திய சாதனையின் விளைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும்
ஆய்வுகளுக்காக அதன்பின் அறுபதுநாடுகள் பங்கேற்ற நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயம்
நடத்தப்பட்டு 500 மில்லியன் கனடிய டாலர் நிதி திரட்டப்பட்டது.
துயரம் வேண்டாம்
உடல் உறுப்பை இழத்தல் குறையன்று,உற்சாகத்தை
இழப்பதே உண்மையில் குறை. ஒரு நாள் வாழ்வாயினும் உற்சாகமாய் பறந்து பின் இறந்து
போகும் ஈசலைப்போல் இருக்கும் மனிதர்கள், துயரங்களைத் தாண்டி இந்த உலகில்
உற்சாகமாய் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு உயரத்தில் வைத்தாலும் பள்ளத்தை
நோக்கியே பாய்கிற தண்ணீர் போலல்லாது, கீழ்த் தாழ்த்தி வைத்தாலும் வான்நோக்கி
உயர்ந்து சுடர்விடும் அக்கினிச்சிறகு போல் உயரப்பறத்தலே உயர்ந்த தத்துவம் என்பதை
உணர்ந்த மாற்றுத்திறனாளிகள் சாதிக்கிறார்கள்.
தன் சூழ்நிலைகளைக் குற்றம் சொல்லியே
பிறர்மீது பழிபோட்டு வாழாமல் உடல், உள்ளக் குறைகளை மனதில் வைக்காமல் உறுதியோடும் உற்சாகத்தோடும் எதிர்கொள்கிறவர்களையே
வரலாறு வாழ்த்துத் தெரிவித்து வரவேற்கிறது. மகிழ்ச்சியும் மலர்ச்சியும் கசந்த
வாழ்வை வசந்த வாழ்வாக்கும் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் பிறருக்கு முன்மாதிரியாய்
திகழ்கிறார்கள். அவர்களுக்கு என்றும் மீளாத்துயரங்கள், தாளாக்கொடுமைகள்
வருவதேயில்லை. வாழ்க்கைச் சுவரின் வசந்த சித்திரம் நாம், சாணியடித்தா அதைச்
சங்கடப்படுத்துவது?
எனவே இனி யாரையும் பார்த்து யாரும் நொந்துகொள்ளவேண்டாம். கத்திக்
கதறுகிறவனை நோக்கிக் கத்தியை வீசத்தான் செய்கிறது வாழ்க்கை.
எதையும் தாங்கும்
வலிமையோடு எதையும் எதிர்கொள்வோம். எவரெஸ்ட்டும் நமக்கு எட்டும் தூரத்தில்தான்.
எனவே புன்னகையோடு எதிர்கொள்வோம் இந்த இனிய வாழ்வை.
Comments
Post a Comment