ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

 செப்டம்பர்- 5 ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை

          
பாடம் நடத்துபவர் ஆசிரியர், பாடமாய் நடப்பவர் நல்லாசிரியர்.

வழிகாட்டியாய் திகழ்பவர் ஆசிரியர், வாழ்ந்துகாட்டியாய் வாழ்பவர் நல்லாசிரியர். பெற்றெடுத்ததற்காகப் பெற்றோருக்கு நன்றி சொல்லும் நாம், எழுத்தறிவித்ததற்காக அகிலம் போற்றும் ஆசிரியர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிறோம். தாய் ஈன்று புறந்தந்து தந்தையைக் காட்டுகிறாள், தந்தை, அறிவின் ஊற்றாயிருக்கும் ஆசிரியரை அடையாளம் காட்டுகிறார், 

அந்த உன்னதமான ஆசிரியரே தெய்வத்தை நமக்குத் தெரியப்படுத்துகிறார்.
அறியாமை இருளை அகற்றி அறிவு தீபத்தை ஏற்றிவைக்கும் நற்பணியை ஆசிரியர்களே செய்கிறார்கள். ஏணி, தோணி, அண்ணாவி, நார்த்தங்காய் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே இருக்கின்றன. ஏணி அனைவரையும் ஏற்றிவிட்டு இருந்த இடத்திலே இருக்கும், தோணி அனைவரையும் கரையேற்றிவிட்டுத் தண்ணீருக்குள்ளேயே மிதந்துகொண்டிருக்கும்,

 அண்ணாவி என்கிற ஆசிரியர் தம் மாணவரைச் சனாதிபதியாக உயர்த்திவிட்டாலும் மிக அடக்கமாக அதே பள்ளியில், அதே வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருப்பார், எல்லாவற்றையும் செரிமானம் செய்தபின் செரிமானமாகும் நார்த்தங்காய். ஏணியைப் போல் தோணியைப்போல் நார்த்தங்காயைப்போல் மற்றவர்களுக்காகவே வாழக்கூடிய ஆசிரியர்கள் தியாகதீபங்கள்.

அற்புதமான ஆசிரியர்களின் மாண்புமிகு மாணவர்கள்
எண்ணும் எழுத்தும் கற்றுத்தரும் ஆசிரியர்கள் சமுதாயத்தின் கண்ணாகவும் கருத்தாகவும் திகழ்கிறார்கள். உலகத்தின் புகழ்பெற்ற மனிதர்கள் யாவரும் அற்புதமான ஆசிரியர்களின் அருமையான மாணவர்களே. ஒல்காப்புகழ் மிக்க தொல்காப்பியத்தைப் படைத்த தொல்காப்பியரை நினைக்கும்போது அவரது ஆசிரியர் அகத்தியர் நினைவுக்கு வருகிறார். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரை நினைக்கும்போது அவருக்குத் தமிழ்த்தேன் பருகக் கற்றுத்தந்த அவரது ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை நம் நினைவுக்கு வருகிறார். 

கம்பீரத்தின் அடையாளமாய் திகழ்ந்த சுவாமி விவேகானந்தரை நினைக்கும்போது அவரது குரு பகவான் ராமகிருஷ்ணபரமஹம்சர் நம் நினைவுக்கு வருகிறார். வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதனை நினைக்கும்போது அவருக்குக் கற்றுத் தந்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் நம் நினைவுக்கு வருகிறார்.

 பிளாட்டோவை நினைக்கும்போது அவருடைய ஆசிரியர் சாக்ரடீஸ் நினைவுக்கு வருகிறார். அரிஸ்டாட்டிலை நினைக்கும்போது அவருக்குப் பாடம் கற்றுத்தந்து உலகியலை உணர்த்திய அவரது ஆசிரியர் பிளாட்டோ நினைவுக்கு வருகிறார். மாவீரன் மகாஅலெக்ஸ்சாண்டரை நினைக்கும்போது அவருக்குப் பாடம்கற்றுத்தந்த ஆசிரியர் அரிஸ்டாட்டில் நினைவுக்கு வருகிறார். அகிலத்தை அடக்க அரும்பாடுபட்ட மாவீரன் அலெக்ஸ்சாண்டர் கூட ஆசிரியருக்கு அடங்கித்தான் யாவற்றையும் கற்றான். “நான் வாழ்வதற்காக என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன், ஆனால் நெறிமுறைப்படி வாழ என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருகிறேன்” என்று பெருமையோடு கூறினான் அந்த மாவீரன்.

பக்குவப்படுத்துபவர்கள்

தளராது தினம் உழைத்து மலராத மலரையும் மலரச்செய்து மணக்கச் செய்பவர்கள் ஆசிரியர்கள். அறியாமை இருளகல ஆழ்ந்து கற்கக் கற்றுத்தருகிறவர்கள் ஆசிரியர்கள். 

வெறுப்பினை விரட்டிப் பொறுப்பினைக் கற்றுத்தருகிறவர்கள் ஆசிரியர்கள், காலம் தவறாமல் உழைத்து ஞாலம் சிறக்க உதவும் தொழில் வித்தையைக் கற்றுத்தருகிறவர்கள் ஆசிரியர்கள். எரிகிற தீபமே இன்னொரு தீபத்தை ஏற்றமுடியும், ஆசிரியர்கள் தாங்களும் தீபமாய் அமைந்து தங்களிடம் பயிலவரும் மாணவர்களுக்குள்ளும் தீபங்களை ஏற்றிவைக்கின்றனர்.

“தன்னம்பிக்கையோடு உழை! தாழ்வு மனப்பான்மையைக் களை!” என்று ஊக்கத்தின் தாக்கத்தை நமக்குள் ஏற்படுத்தியவர்கள் நம் அன்புக்குரிய ஆசான்கள். பள்ளத்தில் படுத்துறங்கும் உள்ளத்தையும் பண்படுத்தி அவர்களின் புண்பட்ட இதயத்தையும் புன்னகையால் பக்குவப்படுத்துவர்கள் ஆசிரியர்கள்.

உறுதியைத் தந்தவர்கள்

தடையாளக் கற்றுத்தரும் அடையாளமாய் திகழும் கல்வியைக் கற்றுத்தரும் ஆசிரியர்கள் தம் மாணவர்களின் உயரம் கண்டு ஒருநாளும் துயரப்படுவதில்லை.பொறாமைப்படுவதில்லை,மாறாகப் பெருமிதம் அடைகிறார்கள். பெற்றோர்கள், குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் அக்குழந்தைகளைப் பெறாத பெற்றோர்கள்.தன்னிடம் படிக்கும் அனைவரையும் தன் பிள்ளைகளாக நினைக்கும் தாயுள்ளம் கொண்டவர்கள் ஆசிரியர்கள்.

 தன்னைவிடத் தன் மாணவன் சாதிப்பதைக் கண்டு வாழ்த்தும் நெஞ்சம் ஆசிரியர் நெஞ்சம். கடலின் சீற்றத்திலிருந்து கப்பலைக் காக்கும் நங்கூரம்போல வாழ்வின் சீற்றத்திலிருந்து காக்கும் உறுதியைத் தருவது ஆசிரியர்களின் மகத்தான அறிவுரைகள். ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? எதனால்? என்று வினாக்களின் பின்னால் விரைந்து விடைதேடும் வித்தையைக் கற்றுத் தந்தவர்கள் ஆசிரியர்கள். காலம் காட்டி ஓடும் கடிகாரம் மாதிரி ஞாலம் காட்டி ஓடப் பழக்கியவர்கள் நம் ஆசிரியர்கள்.

நீதியைப் போதித்தவர்கள்

கொன்றைவேந்தனையும் ஆத்திசூடியையும் மூதுரையையும் கற்றுத்தந்து களர்நிலத்திலும் கரும்பாய் நற்சிந்தனைகளைப் பயிரிட்டு அறத்தை அரும்ப வைத்தவர்கள் ஆசிரியர்கள். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற தான்தோன்றித்தனமான வாழ்க்கையை மறுத்து இப்படித்தான் வாழவேண்டும் என்று நெறிமுறையோடு வாழக் கற்றுத்தருகிறவர்கள் ஆசிரியப்பெருமக்கள்.

வெளியே இருக்கும் சிந்தனைகளை உள்ளுக்குள் ஊற்றி வளர்த்ததைவிட உருத்தெரியாமல் உள்ளுக்குள் உரைந்திருக்கும் திகைப்பூட்டும் திறன்களை தம் மாணவர்களுக்கே தெரியப்படுத்தி சிகரம் எட்டச் சீக்கிரம் உதவுபவர்கள் ஆசிரியர்கள்.

சர்வபள்ளி தந்த சாதனை ஆசிரியர்

“ஊதுபத்தியாய் ஊருக்கு உழைத்தால் மரணித்தபின்னும் மணத்தோடு இருக்கலாம்” என்பதற்குச் சான்று, ஆசிரியராய் வாழ்வைத் தொடங்கி இந்தியாவின் இனிய குடியரசுத் தலைவராய் உயர்ந்த சர்வபள்ளி தந்த சாதனையாளர் பேராசிரியர் டாக்ட்ர் ராதாகிருஷ்ணன். 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 இல் திருத்தணிக்கு அருகிலுள்ள சர்வபள்ளி எனும் ஊரில் பிறந்து தன் முயற்சியால் முன்னேறிய மாமனிதர். சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றகாலத்திலேயே கல்விமுறைமாற்றம் குறித்த ஆழ்ந்தசிந்தனை உடையவராகத் திகழ்ந்தார்.

மடைதிறந்த வெள்ளமென வகுப்பில் மாணவர்களுக்குப் பாடம் நடத்திய அந்த மாமேதை, மிகஎளிமையாக வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடில்லாமல் வாழ்ந்தார். மாணவர்களால்தான் நாளைய பாரதத்தை உருவாக்கமுடியும் என்று உறுதியாக நம்பினார். பலநாட்கள் மாணவர்களுக்கு உணவளித்த உயரிய உள்ளமுடையவராகத் திகழ்ந்தார். பள்ளியாசிரியராய் பணியாற்றியபோதும், தினமும் புதிதுபுதிதாய் நூல்கள் படித்தும், நூல்கள் படைத்தும் ஆசிரியர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பினார்.

இந்தியத்தத்துவ மரபு, தொன்மையும் தொடர்ச்சியும் உடையது என்று தெளிவாக எடுத்துரைத்தார். ஆசிரியர்கள் படிப்பாளியாக இருந்தால்மட்டும் போதாது தன் கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தும் உயரிய படைப்பாளிகளாகவும் திகழவேண்டும் என்று கூறித் தாமே முன்னுதாரணமாய் விளங்கினார்.

அவர் எழுதிய இந்தியத் தத்துவத் தொகுதிகள், கிழக்கு மற்றும் மேற்கின் தத்துவ வரலாறு, இந்தியச் சமயங்கள், சமயமும் சமூகமும், உண்மையான கல்வி போன்ற நூல்கள் உலகநாடுகளின் பார்வையில் இந்தியாவின் புகழை உயர்த்தின. 1954 இல் அவருக்கு இந்தியாவின் மிகஉயரிய விருதான பாரதரத்னா வழங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் இரண்டாம் குடியரசுத்தலைவராய் பணியாற்றும்  (1962-1967) அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

நேர்மையையும், சத்தியத்தையும், ஒழுக்கத்தையும், நேரம் தவறாமையையும், தேசப்பற்றையும் தன்வாழ்நாளின் இறுதிநிமிடம்வரை கடைப்பிடித்தார். அவர் பேசாத பல்கலைக்கழகங்களே இல்லை எனும் அளவு புகழ்மிக்க மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் கண்டு மலைத்துப்போன உலகப் பல்கலைக்கழகங்கள் அவருக்கு பல தகைசால் டாக்டர் பட்டங்களை வழங்கிப் பாராட்டின. 

குடியரசுத்தலைவரான பின்னும்கூட அவர் மானசீகமாக ஓர் நல்லாசிரியராகவே இருந்தார். அவர் குடியரசுத்தலைவராய் இருந்தபோது தேசிய ஆசிரியர்கள் சங்கம் அவரது பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடவேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்று அப்போதைய பாரதப்பிரதமர் ஜவஹர்லால் நேரு  செப்டம்பர் 5 நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட ஆணையிட்டார்.அவர் பெயரால் நல்லாசிரியர் விருதுகள் சிறந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வழங்கப்படுகின்றன.

 பெற்றோர்கள் குழந்தையைப் பெற்று இந்த உலகத்திற்குத் தந்தாலும் தன் அறிவாலும் அன்பாலும் தன்பால் ஈர்க்கும் ஆசிரியர்களே அக்குழந்தைக்கு ஒரு புதியஉலகைக் காட்டுகிறார்கள். இன்னல்களிலும் சிரித்துப் பறக்க வைக்கும் பல சன்னல்களைத் திறந்துவைக்கிறார்கள்.

குடியரசுத்தலைவராக இருந்தபோது கிடைத்த மனநிறைவைவிட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியபோது டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அதிகமனநிறைவைப் பெற்றார். பார்க்கிற பார்வையில் பணிவிருந்தால் செடிகளில்கூடச் செய்தியிருக்கும். எல்லோரும் இறைவன் எழுதிய இனிய புத்தகங்களே. 


சிலபேரை வாசிக்கிறோம், சிலபேரை நேசிக்கிறோம்,சிலபேரைப் படிக்கிறவேகத்தில் கிழித்துப்போட்டுவிடுகிறோம். எப்போதும் மாணவனாக இருந்தால் எதையாவது நாம் கற்றுக்கொண்டே இருக்கலாம். கற்றல் சிறந்தது, கற்றபடி மாண்போடு நிற்றல் அதைவிடச் சிறந்தது.கற்றபடிச் செம்மையாய் வாழும் ஆசிரியர்களைப் போற்றுவோம்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1600068

Comments

Popular posts from this blog

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்