Tirunelveli soundara mahadevan kavithaikal
வாய் ஏதுமற்று

கதவில் மாட்டி
அறுந்து துடிக்கிறது
பல்லியின் வால்.
பிடித்து மடி கரந்த
இரும்புக் கரத்தின்
வலிமை தாங்கமுடியாமல்
வலியோடு நடக்கிறது
சினைவெள்ளாடு
இரு சக்கர வாகனத்தில்
சிக்கி
கால் முறிந்து முனகலுடன்
கெந்திக் கெந்தி நடக்கிறது
நாய்
முப்பது மூட்டைகளோடு
முன்னேற முடியாமல்
திருவள்ளுவர் மேம்பாலத்தில்
திரவம் வடித்து நுரைதள்ளி
நிற்கிறது
வண்டிக்காளை.
அங்குச அழுத்தம் தாங்காமல்
வேகாத வெயிலில்
வெந்து நொந்தபடி
ஆசிதருகிறது அந்த யானை
மூக்குப் பொடியின்
நொடிதாங்கும் திரணற்றுச்
சாக்கடைக்குள் விழுகிறது
சபிக்கப்பட்ட ஓணான்
ஆனாலும்...
வலிகளோடு வாழத்தான்
செய்கின்றன
அஃறிணைகளும் கூட...
புலம்பக் கூட வாயேதுமற்று.
வாழத் தயார்
முகங்கள் இல்லையாதலால்
முகவரிகளும் இல்லை
அவனுக்கு.
சிதை முகங்கள் குறித்து
அவன்
சிரமப் பட்டதுபோல்
தெரியவில்லை.
முகப்பூச்சு மாவுகள், சிகப்பழகுப் பசைகள்
மிச்சமென மெதுவாகச்
சிரிக்கிறான்
எல்லோரிடமும் பற்களைக்
காட்டிக் காட்டிப்
பேசிப் பேசிக் காலப்
பச்சையத்தையே
அவன் கரைகளாக மாற்றிக்
கொண்டான்.
எப்போதும் யாரையும்
குதிரையேற்றிக் குதிரையேற்றிக்
கூனிப் போயின அவன்
முதுகுகள்
அவன் தண்டுவடத்தில்
தள்ளாட்டத்தின் தழும்புகள்...
யாரையும் தூக்காமல்
இப்போது தனியே
அவனால் நடக்கக்கூட
முடியவில்லை.
கூழைக் கும்பிடு போட்டுப்
போட்டு
ஒட்டிப் போயின அவன்
கரங்களிரண்டும்
பிரிக்க இயலாப் பேரிணைகளாயின.
மூளையை முன்னரே எடுத்தாகி
விட்டதால்
அது பற்றிச் சிந்திக்கத்
தேவையற்றதாகிவிட்டது
இப்போது
அவன் - இந்த
உலகில் வாழத் தயாராகி
விட்டான்.
தனி யொருவனுக்கு உணவிலை பாரதி!
பழுக்கக் காய்ச்சிய
அரிவாளைச்
சுத்தியலால் அடித்துத்
தண்ணீரில் முக்கும்போது
ஒரு சத்தம் வருமே.
அடிவயிற்றில் அதே சத்தத்தோடு
பசியைப் பற்றியபடி
குப்பைத் தொட்டியருகே
அவன் குந்தியிருக்கிறான்...
தெருநாயின் பார்வையிலும்
போட்டியாளனாய்
மகாராஜநகர் திருமண
மண்டபத்திற்கு
இடப்பக்கமுள்ள தண்டவாளக்
குப்பைத் தொட்டிக்கு
அவன் பிள்ளைகளும்
பிச்சைக்குப் போயிருக்கின்றன
வெகுநேரமாய்
காத்துக்கிடந்தும்
ஓர் இலைகூட
வெளியே வீசப்படவில்லை
இனி எச்சில் இலையும்
வெளியே வராதாம்.
அதையும் ஒருவன்
கான்ட்ராக்ட் எடுத்துள்ளானாம்.
இப்போது
பசியின் பந்தியில்
பாவம்
அவனும் அவன் பிள்ளைகளும்
நிலாத்தாலாட்டு
குட்டி நிலாவை முதன்
முதலாய்
பள்ளத்தில் பார்த்தது
புதுப்பட்டிக்
காமாட்சிப் பாட்டி
வீட்டுக் கேணியில்தான்
கோடை விடுமுறைக்கு
எப்போது சென்றாலும்
படிகளில் ஏறிக் கேணிக்குள்
முகம் பார்த்தபின்தான்
சாப்பாடு கீப்பாடு
எல்லாமே!
ஊரணிக் கருகே இருந்ததால்
வற்றிப் போக வாய்ப்பற்று
ஊறியது
தங்கை தவறவிட்ட வாளியிலிருந்து
எல்லாவற்றையும் எடுத்துத்
தரும்
பாதாளக் கரண்டியை
அதிசயத்தோடு
முதலில் கண்டதும் அங்கேதான்
ஐந்து வயதில் கேணிக்குள்
விழுந்த அம்மாவை
இடுப்புக் கயிறுகட்டி
உள்ளிறங்கித்
தூக்கிவந்த மருதையாத்தாத்தா
முதல்
எத்தனையோ மனிதர்களின்
வரலாறுகளை ஊற்றுக்குள்
ஒழித்துவைத்திருந்தது
அக்கேணி
கட்டியவனின் குத்துச்
சொல் தாளாமல்
அதே கேணிக்குள் செத்து
மிதந்த
ஆனந்தி அக்காவின் சடலத்தைப்
பார்த்தபின்
கேணிக் குளியலும்,
நிலா ரசித்தலும்
நின்று போனது.
ஆனாலும் கவலைகள் ஏதுமற்று
நிலவுக்கு நிலத்தாலாட்டு
நடத்திக் கொண்டிருக்கிறதுஅக் கேணி.
கவலை வலை...
மாம்பழங்களுக்குள்ளும்
மகிழ்ச்சியாக
வண்டாட முடிகிறது கருநிறப்
பூச்சிகளால்
பாறைகளுக்குள்ளும்
பத்திரமாக
உயிர் வாழ முடிகிறது
தேரைகளால்
கொங்குதேர் வாழ்க்கை
நடத்தும்
அஞ்சிறைத் தும்பிகள்
பூக்களுக்குள்ளும்
துயில்கொள்ள முடிகிறது
அட்டைப் பெட்டிகளுக்குள்ளும்
குட்டிகளைக் காக்க
முடிகிறது பூனைகளால்
மின்சாரவடங்களிலும்
கவலையற்றுக் கால்பதிக்க
முடிகிறது பறவைகளால்
கண்டங்களைக் கடந்து
விரிவானில் விரைந்து
வரமுடிகிறது
அலகுநீள்
ஆஸ்திரேலியக் கொக்குகளால்
யாவற்றையும் இழந்து
கவலைகளை முகத்தில்
ஒட்டியபடி
அபலைகளாய் அலைய
மட்டுமே நம்மால் முடிகிறது
சொந்த ஊரை
விட்டுச் சோறு கூடக்கிடைக்காமல்
தவிப்பவனுக்குக்
கரன்சிகள் வெறும்
காகிதக்கட்டுகள்
தானே
மண் காக்க வந்த மகா பாரதியே!
எட்டயபுரத்து எரிமலைப்
பாட்டே!
இயங்கிய இதயங்களின்
கவிதைத் துடிப்பே!
தூங்கிக் கிடந்த எம்மினத்தைத்
தாங்கிக் கிடந்த அடிமைத்தனத்தைக்
கவிதை
டாங்கி கொண்டு நீ சுட்டாய்
“மகாபாரதி“ என இறவாப்புகழ்
பெற்றாய்.
பெண்ணியம் பேசிய தமிழ்ப்
பெம்மானே –
தமிழ்
பண்ணிய உயர் புண்ணியம்
நீதானே!
தண்ணிய தமிழை நீ தரணியில்
உயர்த்தினாய்
திண்ணிய நெஞ்சத்தோடு
நீ பாரதத்தைத் திருத்தினாய்
மதிதா... மதிதா என்று
பராசக்தியிடம் பாதம் பணிந்தவனே!
'விதிவா... விதிவா' என உன்னை
விரைந்து அழைத்த போதும்
காலனை உன் காலருகே
இட்டு
மிதித்தவனப்பா நீ!
உன் கவிதைக்கண் சிவந்ததால்
இந்த அடிமைமண் சினந்தது
யாப்புக்குள் அடங்கிய
வெண்பா
உன்னால் எழுச்சிமிக்க
பெண்பாவானது.
நீ இந்திய இருட்டு
தீர
சுதந்திர வெளிச்சம்
தந்த
கவிதைச் சூரியன்
அந்நியரின் திறவாக்
கதவுகளை உடைத்தது
உன் இறவாத் தமிழாயிற்றே!
உதயம் தந்த உன்னதச்
சூரியன் என்றாலும்
அஸ்தமனங்கள் உனக்கு
என்றுமில்லை
புத்தர் ஆசைப்பட்டார்
ஆசைகள் ஏதுமற்ற உயரிய
ஆன்மபீடத்தில்
புத்தர் தியானத்திலிருக்கிறார்.
சலனம் ஏதுமற்ற
நிசப்தம் பிரபஞ்சமெங்கும்
அமைதியாயிருந்த அந்த
அறைக்குள்ளே
துறுதுறுப்பாய்
குழந்தைகள் உள்நுழைகின்றன...
தலைகீழாக்குகின்றன
அந்த இனிய இல்லத்தை
புத்தரை உறவு சொல்லி
அழைக்கிறது
ஒரு குழந்தை
சின்னஞ்சிறு இறகால்
வருடுவிடுகிறது இன்னொன்று
மம்மு சாப்பிடச் சொல்கிறது
பிறிதொன்று
இறுக்கத்தைக் கலைத்த
புத்தர்
இறங்கி விளையாடத் தொடங்கினார்
புத்த தத்துவமாய் மாறின
அக்குழந்தைகள்
அன்றிலிருந்து
ஆசைகள் அவருக்கும்
அவசியமாயின
சௌந்தர
மகாதேவன்,திருநெல்வேலி
முன்பதிவு
வீடு கட்டும் செங்கலில்
தொடங்கி சிறு வீடு கட்டும்
பொங்கல் பயணச்சீட்டு
வரை யாவுமே
முன்பதிவு செய்தால்
மட்டுமே
முன்னரே கிடைக்கிறது.
கருத்தரித்த நாளிலிருந்து
காத்துக் கிடந்தால்தான்
- குழந்தை
உருத்தரித்த பின்னாவது
ஆங்கிலப்
பள்ளியில் இடம் கிடைக்கிறது.
அறுத்து குழந்தையை
எடுக்கும் நாள்முதல்,
மின்மாயானத்தில் எரிப்பது
வரை
முன்பதிவற்று உடனே
ஏதும் சாத்தியமில்லை.
உறவறியா நண்பனின்
கணநேர உதவியும்
ஜனித்தவுடன்
தாயின் தனங்களில் சுரக்கும்
தீம்பாலும்
நதியின் தண்மையும்,
இளந்தளிரின் மென்மையும்தான்
முன்பதிவற்று
இன்று உடனே கிடைக்கிறது
கவனம்!
அதையும் முன்பதிவுக்குட்படுத்த
ஏதேனும்
ஓர் இணையத்தளம் வந்தாலும்
வரலாம்
ஒளியிலே தெரிவது....
தலைவாசலுக்கு வலப்புறமுள்ள
மாடக்குழிகளில் விளக்கேற்றிப்
பல யுகங்களாயிற்று.
எண்ணெய்ப் பிசுக்கைச்
சுரண்டியெடுத்து
ஓட்டை வாளி அடைத்ததும்
அப்படியே!
கார்த்திகை வந்தால்
கிளியாஞ்சட்டிகள் ஒளித்துகள்
உமிழும்
சுவர் விளக்குகள் வந்த
பின்
திரியுமில்லை தீபமில்லை
தெருவில்
ஒளியுமில்லை
டீசல் மின்தயாரிப்பு
எந்திரங்கள் வந்தபின்
தெய்வத்தின் முன் தீவட்டி
தூக்கிய மனிதர்கள்
தெருவுக்குப் போய்
விட்டார்கள்
சப்பரத் தண்டாயத்தில்
எண்ணெய் வாளியுமில்லை
சாமி சென்ற சுவடு காட்டிடத்
துளிகளேதும் சாலையில்
இல்லை.
இப்போது
இருளின் “கறு கறுப்பில்“
மின்சாரமற்ற
நடுத்தர மக்களின் தெருக்கள்
அங்கே ஒளியிலே தெரிவது
வெளிநாட்டுக்கு வேலைக்குப்
போனவனின்
வீடு மட்டுந்தான்.
இன்வெர்டர்கள்
இருக்கும்போது
இருளைப் பற்றி
என்ன கவலை?
வெளிச்சம் கூட
வேண்டியவர்களுக்கு
மட்டுமே கிடைக்கிறது
நன்றி
“புதுப்புனல்“
கலை இலக்கிய மாத இதழ்
நன்றி
“ரசனை“
கலை இலக்கிய மாத இதழ்
நன்றி
“கணையாழி“
கலை இலக்கிய மாத இதழ்
என் கவிதை அரங்கேற்றத்திற்குக் களம்
அமைத்துத் தந்து “மகாபாரதி“ கவிதைகளை வெளியிட்டு ஊக்கப்படுத்திவரும்
“புதுப்புனல்“
“ரசனை“
“கணையாழி“
புன்னகை
அமர்தா
கலை இலக்கிய மாத இதழ்களுக்கு
அன்பின் நன்றிகள்
- முனைவர் ச. மகாதேவன்
Comments
Post a Comment