தி.ஜானகிராமன் என்கிற கதைக் காவேரி : முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி
ஒரு எழுத்தாளரைப் பற்றி இன்னொரு எழுத்தாளர் உணர்வுப்பூர்வமாக
எழுதுவது எத்தனை அருமையானது.
தி.ஜானகிராமன் குறித்து பாலகுமாரன் எழுதிய கட்டுரையை
வாசித்தபோது நிறைவாய் இருந்தது.
இருட்டுப்பரப்பில் சட்டென்று ஒளியை வீசி இருண்மையைக் கேலிசெய்கின்ற மின்மினிப்பூச்சிகளாய் சில சம்பவங்களையும்,சில
மனிதர்களையும் பற்றிய நினைவுகள் சில கணங்களில் சட்டென்று நம் மனதில் மின்னலாய்
வெட்டி ஒளியை வீசிச்செல்லும்.
தி.ஜானகிராமன் அப்படிப்பட்டவர். சொற்கள் குறுகிமௌனமாய் மறைவதைப்போலஅவர் படைத்த கதைகள் நம்முள் கலந்து,பாத்திரங்கள்
கரைந்து அவரது இனிய காவேரியைப் போலச் சமுத்திரத்தை நோக்கிச் சலனமில்லாமல்
ஓடிக்கொண்டே இருக்கின்றன.
ஆண் பெண் உறவுகளை மையமிட்ட உளநிலைப் போராட்டத்தை
மையமாகக் கொண்ட பாத்திரங்களைப் பேசவிட்டு
உணர்ச்சிகரமான,தேர்ந்த மொழிநடையால் புதினங்கள் படைத்து இறவாப்புகழ் பெற்றவர். தன் எழுத்துத்
தூரிகையால் கும்பகோணம் மண்மீது வாசகர்களுக்குக் காதலை உண்டாக்கியவர்.
அவரது
மோகமுள் தைத்து அதன் ரணத்திலும் அதுஉள்ளுக்குள் ஏற்படுத்திய சொல்லொணா மணத்திலும்
சிக்கி இன்னும் வெளியேவராத தீவிரவாசகர்கள் இன்றும் உண்டு.
அவரது யமுனாவைப் போல் பெண்வேண்டும் என்று
கடைசிவரைத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர்கள்கூட உண்டு.ஞானராஜசேகரன்
முயற்சியில் திரைப்படமாய் வந்து மேலும் புகழ்பெற்ற புதினமாகவும் அது அமைகிறது.
அவரது
அம்மா வந்தாள்,மரப்பசு போன்ற புதினங்கள்
இன்றும் முதுநிலைத் தமிழ் வகுப்புகளில் சிக்மென்ட் பிராய்டுவின் உளநிலைக்
கோட்பாடுகளை விளக்க உதவிக்கொண்டிருக்கின்றன.

சமூகத்திற்கு முன் சுத்தமானவனாக முகம்காட்டிக்கொண்டு,
முதுகுக்குப்பின் ஆபாசங்களை அரங்கேற்றி அதன் வலிகளைப் பெண்களுக்குத் தரும்
பலமுகங்களை தி.ஜா.தோலுரித்துக் காட்டியுள்ளார்.
அவரது செம்பருத்தியும், உயிர்த்தேனும்
வாசகர் மனதில் பதிந்த படைப்புகள். தி.ஜா.மரபின் வேர்களில் கிளம்பிய விருட்சத்தில்
புதுமைக்கனிகளைத் தந்தவர்.அம்மா வந்தாள் கதையின் அப்பு, வேதபாடசாலையைவிட்டு வெளியே
வந்தபின் நிகழும் நிகழ்வுகளை ஊசல்குண்டு போல் மனநூலில் தொங்கவிட்டு இறுதியில் அவர்
கதையை முடிக்கும் முடிவுகள் புதுமையானவை.
சம்பவங்களை
முன்பின்னாக அடுக்கிப் புனையப்படுவதே கதை என்ற மரபை உடைத்து மனப்பிறழ்ச்சிகளையும்
இயலாமைக்கும் இயல்புக்கும் நடக்கும் மனப்போராட்டங்களையும் நீள்கதையாக மாற்றித்
துணிச்சலாக அதன் பாத்திரங்களைக் கொண்டே மனம்திறந்து உரையாடவிட்டு இறுதியில் கதையை
வெகுஇயல்பாய் முடிக்கும் தி.ஜானகிராமனின் கதையில் வரும் இந்துவும் அலங்காரத்தம்மாளும்
யமுனாவும் அன்புக்கு ஏங்கும் அப்பாவிப்பெண்கள். காவிரியை அன்போடும் ஏக்கத்தோடும்
பார்த்து ரசிக்கின்றன தி.ஜா.வின் பாத்திரங்கள்.
நதியை யார்தான் வெறுப்பார்? தி.ஜானகிராமனும்
உண்மையில் கதைக்காவேரி.
Comments
Post a Comment