அசோகமித்திரன் என்கிற ஞானபீடம்

பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ( தன்னாட்சி ) , ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627 011. அசோகமித்திரன் சிறுகதைகள் தொகுப்பை வாசிக்கத் தொடங்கியதும் மனம் ஆச்சர்யத்தில் நெகிழ்ந்தது. நீண்டகதாநதியாய் பெருக்கெடுத்து மனிதசமுத்திரம் நோக்கியோடி மிக ஆழமாய் தன் பார்வையைத் தன் படைப்பிலக்கியங்கள் மூலம் தரும் அசோகமித்திரன் படிப்புலகம் அன்புவயமானது, கிண்டல் தொனி நிறைந்தது. தன்னைப் பற்றிய அதீதமான உயர்மதிப்பீடுகள் ஏதுமின்றி,மிக இயல்பாக 84 வயதிலும் கதையுலகில் இயங்கிவரும் தியாகராஜன் எனும் இயற்பெயரை உடைய அசோகமித்திரன் என்கிற அபூர்வ எழுத்தாளர் மூத்த தலைமுறை எழுத்தாளர் வாழ்வின் துயரங்களை உயரத்திலிருந்து பார்த்தவரல்லர். அன்பின் பரிசு என்கிற வானொலி நாடகம் அவர் எழுதிய முதல் படைப்பாகும். கலைமகளில் வெளியான “ ஒரு நாடகத்தின் முடிவு” எனும் படைப்பு அவரை ஐம்பதுகளில் தமிழ்ச் சிறுகதையாசிரியராக அடையாளம் காட்டியது. தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தேர்ந்த புலமை உடையவர் அசோகமித்திரன். உலக இலக்கியங்களில் ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் உண்டு. “அப்பாவின...