அசோகமித்திரன் என்கிற ஞானபீடம்
பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627 011.
அசோகமித்திரன் சிறுகதைகள் தொகுப்பை வாசிக்கத்
தொடங்கியதும் மனம் ஆச்சர்யத்தில் நெகிழ்ந்தது. நீண்டகதாநதியாய் பெருக்கெடுத்து
மனிதசமுத்திரம் நோக்கியோடி மிக ஆழமாய் தன் பார்வையைத் தன் படைப்பிலக்கியங்கள்
மூலம் தரும் அசோகமித்திரன் படிப்புலகம் அன்புவயமானது, கிண்டல் தொனி நிறைந்தது.
தன்னைப் பற்றிய அதீதமான உயர்மதிப்பீடுகள் ஏதுமின்றி,மிக இயல்பாக 84 வயதிலும்
கதையுலகில் இயங்கிவரும் தியாகராஜன் எனும் இயற்பெயரை உடைய அசோகமித்திரன் என்கிற
அபூர்வ எழுத்தாளர் மூத்த தலைமுறை எழுத்தாளர் வாழ்வின் துயரங்களை உயரத்திலிருந்து
பார்த்தவரல்லர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4-3UdnWn1SI_aGXxcpwPmvik86CuqUpDzWdr7O-Bdk5CVc5pfrqzAfYmXwV9bTKShpAX5Nn3ZQtxYYU9YZ8GZP2iotvYEoRqqGmXSWWRgKcm22WhpU6HOk79E_xuRLrdqDqmNEIZtbM0/s640/13942208_1045961758856154_1225743262_n.jpg)
“அப்பாவின் சிநேகிதர்கள்” சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு என்பதால்
அது அதிக கவனம் பெற்றது. ஜெயமோகன் தன் கட்டுரையில் சொல்வதைப் போல் ஞானபீடவிருது
தருவதற்குரிய தகுதியையும் தரத்தையும் பெற்றன அவர் படைப்பிலக்கியங்கள். வாழ்விலே
ஒரு முறை,காலமும் ஐந்துகுழந்தைகளும்,பிப்லப் சௌதுரியின் கடன்மனு ஆகிய
கதைத்தொகுதிகளும் பதினெட்டாவது அட்சக்கோடு, மானசரோவர்,கரைந்த நிழல்கள் ஆகிய
புதினங்களும் அற்புதமான வாழ்வியல் அனுபவங்களை வாசகர்களுக்குத் தந்துகொண்டே
இருக்கின்றன.
ஹைதராபாத், சென்னை, மாயவரம் எனும் மூன்று
ஊர்களுக்குள் அவர் கதைமாந்தர்கள் உலவினாலும்
அவர்கள் அனைத்து பொதுமுகங்களின் சாயலைத் தன்னகத்தே பெற்றவர்கள். சென்னை
என்கிற பெருநகரத்தில் வாழ மத்தியதர வர்க்கம் படும்பாடுகளை அவர் படைப்பிலக்கியங்கள்
முன்நிறுத்துகின்றன. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றியபோது அனுபவங்களின் பின்னணியில்
“ கரைந்த நிழல்கள்” நாவலை அசோகமித்திரன் எழுதினார்.
கலை இலக்கியம் பிறப்பதற்கு ஓய்வான மனநிலை
அவசியம். அசோகமித்திரன் எந்தப் பரபரப்பான,மலினமான படைப்பு உத்திகளையும் தன்
படைப்பில் மேற்கொண்டதில்லை.தன் படைப்புகளைத் தானே புகழ்ந்துபேசி அதைத்
தூக்கிப்பிடித்தவருமில்லை. அவர் சொல்ல நினைத்ததைப் படைப்பு எனும் ஊடகத்தால்
சொல்லிவிட்டு ஒதுங்கிநின்றுகொள்கிறார்.
அவருக்கு மிகப்பெரிய நாவல்கள் மீது பெரியமதிப்பு
இருப்பதாகத் தெரியவில்லை. பக்கங்கள் கூடக் கூட எழுத்துப் பிழைகளும் வாக்கியப்
பிழைகளும் அதிகரிக்கும் என்ற எண்ணம் உடையவராக அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது.அவர்
ஒரு படைப்பை மதிப்பிடுவது பக்கங்களைக் கொண்டு அல்ல,நுட்பமான கலைத் தன்மையடைய
படைப்புகளை அவர் மதிக்கிறார்.அவர் நாவல் எழுதும் முறை புதுமையானது, அவர்
புதினங்களின் அத்தியாயங்கள் சங்கிலித்தொடர்போல் நீண்டுசெல்லாமல் தனித்தனி
இயல்களாகக் காட்சியளிக்கின்றன.
தமிழ்க்கவிதைகள் குறித்த அசோகமித்ரனின் ஏமாற்றம்
அவற்றின் தரம்சார்ந்து அமைகிறது. கணையாழி இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
கணையாழியில் அசோகமித்திரன் எழுதிய இருபதுஆண்டுக் கட்டுரைத்தொகுப்பை கலைஞன்
பதிப்பகம் “ காலக்கண்ணாடி” என்ற நூலாகக் கொண்டுவந்துள்ளது. அந்த நூல்
காலக்கருவூலமாகத் திகழ்கிறது.
அசோகமித்திரன் குறியீடுகளையும் பாத்திரங்களையும்
வலிந்து திணிப்பரில்லை.சொல் விளையாட்டில் ஈடுபாடு கிடையாது.சொற்சுருக்கம்
அவர் படைப்பின் தனித்துவம்.வாசகர்களை
இன்னொரு சகபடைப்பாளராக மதிக்கும் இயல்புடையவர் அவர்.ஐம்பதாண்டுகளுக்கு முன் அவர்
எழுதிய படைப்பிலக்கியங்களை இன்று படித்தாலும் புதிதாக இருக்கின்றன. அவரது
படைப்புகள் யாவும் அவருக்குப் பங்கேற்பு அனுபவம்தான். ஐம்பாண்டுகளுக்கும் மேலாகத்
தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர்களை நாம் கொண்டாடவோ அவர்களின் படைப்பிலக்கியங்களைப்
படித்துப் புரிந்துகொள்ளும் ஆர்வமோ இல்லாமல் இருப்பது நம் தமிழ்இலக்கியச்
சூழலுக்கு நல்லதன்று.
Comments
Post a Comment