திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தி இந்து நடத்திய வாக்காளர் வாய்ஸ் நிகழ்ச்சி
சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி
தி
இந்து தேர்தல்ஆணையத்தோடும் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியோடும்
இணைந்து நடத்திய ‘வாக்காளர் வாய்ஸ்’ புதியதலைமுறை வாக்காளர்களைக் கவர்ந்ததில்
வியப்பில்லை. பதினெட்டு வயதான இளம்வாக்காளர்களை நாம் ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற
கேள்வியின் இனிய பதில் இந்து ஒருங்கிணைத்த “வாக்காளர் வாய்ஸ்” நிகழ்ச்சி.
நம்
கல்லூரியில் இந்து நடுப்பக்க ஆசிரியர் திரு.சமஸ் அவர்கள் முன்நிறுத்திப்பேசிய கர்மவீரர்
காமராஜரும், மகாத்மா காந்தியும், ஜீவாவும் மாணவர்களுக்குப் புதியவர்கள் இல்லை
என்றாலும் அவர்களின் உயரிய செயல்களால் அவர்கள் உயர்ந்து நின்றார்கள்.
தொய்வில்லாமல் மாணவர்களைத் தனதாக்கிக்கொண்டு வெளிச்சம் பாய்ச்சிய அவர் உரை
வழக்கமான மேடைப்பேச்சு பாணியில் அமையாது வெகுஇயல்பாய் இருந்தது.
அறிவித்தல்,
அறிவுறுத்துதல், தீவிரமாய் சிந்திக்கவைத்தல், அலசுதல், தீர்வுசொல்லல் என்ற
பாணியில் அமைந்த அவர் உரை இறுதியில் இனி என்ன செய்வது? என்ற முடிவெடுத்தலில்
வந்துநின்றபோது மாணவர்கள் உற்சாகமானார்கள். நாளிதழ் படிக்காதவர்கள் சனநாயகம்
குறித்துப் பேசத் தகுதியற்றவர்கள் என்று கூறியபோது அவையில் அமைதி.
எல்லோரையும்
குற்றம் சொல்லிக்கொண்டே இருபதைவிட நாம் விரும்பும் மாற்றத்தை நம்மிடமிருந்து
தொடங்கினால் என்ன ? என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.நம்மை மாற்றாமல் உலகை
மாற்றமுடியுமா ? என்று கேட்டார்.சமஸ் எழுத்தின் வலிமையை விழா மேடையில் அவரோடு
கலந்துரையாடிய மாணவமாணவியரின் கூர்மையான பதிலால் அறிந்துகொள்ள முடிந்தது. மாணவ
சக்தியைச் சரியாகப் புரிந்துகொண்டு இந்து காலத்தால் நற்செயல் செய்திருக்கிறது.
யதார்த்தமான உரையால் மாவட்ட ஆட்சியர் முனைவர் மு.கருணாகரன் மாணவர்களைக்
கவர்ந்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் மாணவர்களின் ஆற்றல்
மகத்தானது, அவர்களைச் சரியாக ஆற்றுப்படுத்தவேண்டும் என்று பேசினார். எழுத்தாளர்
நாறும்பூநாதன் சுதந்திரப்போரின் ஒப்பற்ற தலைவர்களை கண்முன் நிறுத்தினார்.மனநல
மருத்துவர் இந்தத் தேர்தலில் நம் இடது வலது ஆட்காட்டி விரல்கள் முக்கியப்பங்கு
வகிக்கப்போகிறது என்று சொல்லி மை வைக்கும் விரலையும் ஓட்டுப்போடும் எந்திரத்தில் விருப்பவாக்காளரைத்
தேர்ந்தெடுக்கப் பொத்தானை அழுத்தப்போகும் விரலையும் காண்பித்தார்.
நிகழ்ச்சியின்
சிறப்புநிகழ்வாக சங்கர்நகர் ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவ மாணவியரின்
தேர்தல்விழிப்புணர்வுப் பாடல்கள் மாணவர்களைக் கவர்ந்தன. சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரியின் இளைஞர் நலத்துறை மாணவமாணவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற
வேண்டுகோளோடு மௌனநாடகம் நிகழ்த்தி அனைவரையும் கவர்ந்தனர்.
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை மாவட்ட
ஆட்சித்தலைவர் வெளியிட மாணவ மாணவியர் பெற்றுக்கொண்டனர்.மாவட்ட வருவாய் அலுவலர்
குழந்தைவேல், திருநெல்வேலி மாநகரக் காவல் உதவி ஆணையாளர் விஜயகுமார், இந்து
அலுவலகம் சார்ந்த செல்வேந்திரன், நெல்லை பதிப்பின் ஆசிரியர் மாரியப்பன், கல்லூரி
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முகமது நவாப் ஹுசைன், அல்ஹாஜ்
எம்.கே.எம்.முகம்மது நாசர், அல்ஹாஜ் கே.ஏ.மீரான் மைதீன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
இந்துவின் மூத்தஉதவி ஆசிரியர் திரு.முருகேஷ் தனது உரையில் இந்து
நாளிதழின் தலைமை வாசகர் சௌந்தர மகாதேவன் என்று என்னையும் கவுரவப்படுத்தி இடையிடையே புதுக்கவிதைகளையும் கூறி அழகு தமிழில்
நிகழ்ச்சியை நடத்தினார்.

மூன்று மணிநேரநிகழ்வினைச் சலிப்பில்லாமல் நடத்தினார்.இந்து
நெல்லை செய்தியாளர் அருள்தாசன் பல முறைதொடர்பு கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெற
உதவினார். சமஸ் பங்கேற்ற நெல்லை நிகழ்ச்சி மிகஅற்புதமாய் அமைந்தது.
·
சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி
Comments
Post a Comment