திருமால் நகர் வள்ளலார் தமிழ்மன்ற நான்காம் ஆண்டுத் தொடக்கவிழா
திருநெல்வேலி திருமால்நகர் வள்ளலார் தமிழ்மன்ற நான்காமாண்டுத் தொடக்கவிழா
மத்திய அரசு ஒரேநாள் இரவில் கறுப்புப்
பணத்திற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று
அறிவித்தபோது திருநெல்வேலி பாலாஜி உணவக உரிமையாளர்கள் கோவிந்தன், விஷ்ணு ஆகியோர் பணம்
இல்லாவிட்டாலும் பரவாயில்லை எங்கள் உணவகத்தில் சாப்பிடலாம் என்று அறிவித்ததும்
முகநூலிலும் பத்திரிகையிலும் அவர்கள் உலகத் தமிழர்களால் பாராட்டப்பட்டதும்
நினைவிருக்கும்.
பாலாஜி உணவக
உரிமையாளர் கோவிந்தனின் தந்தை
சு.பிச்சையா பணிநிறைவுபெற்ற தலைமையாசிரியர், திருநெல்வேலி திருமால்நகர் மக்கள்
சங்கத் தலைவராய் பொறுப்பேற்று சங்கப்பணிகள் பார்த்துக் கொண்டிருந்தவர்
மூன்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் புத்தாண்டு நாளில் வள்ளலார் பெயரில் வள்ளலார்
தமிழ்மன்றம் தொடங்கி தன் மகள் வீட்டு முற்றத்தில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை
தமிழறிஞர்களைக் கொண்டு தமிழ் மொழி தொடர்பான தமிழ்ப் பண்பாடு தொடர்பான கூட்டங்களைத்
தொடர்ந்து நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவது பெண்களைக் கொண்டுதான். திருமால்நகரில் 300 வீடுகளைச் சார்ந்த மக்களின் உதவியோடு 50 உண்டியல் தயார்செய்து ஒருமாதம் ஒருவருக்கு பத்துரூபாய் வீதம் பணம் சேகரித்து ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் மாணவ மாணவியருக்காக ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு அன்று நடைபெறும் ஆண்டுவிழாவில் நிதியுதவி அளித்துவருகிறார்.
வள்ளலார் தமிழ்மன்ற நான்காம் ஆண்டுத் தொடக்கவிழா
திருமால் நகர் வள்ளலார் தமிழ்மன்றத்தின்
நான்காம்ஆண்டுத் தொடக்கவிழா ஹரிணி நர்த்தனாலயா மாணவியரின் பரதநாட்டிய நிகழ்வோடு அரசுஅலுவலர்
ஆ குடியிருப்பில் உள்ள பாலாஜி டவர்ஸ் ஸ்ரீ வாரி அரங்கில் 14.4.2017 வெள்ளிக்கிழமை
மாலை 6 மணிக்கு நடைபெற்றது. திருமால்நகர் மக்கள் சங்கத் தலைவர் சு. பிச்சையா
விழாவுக்குத் தலைமை வகித்தார்.பாலாஜி புரோமொட்டர்ஸ் பங்குதாரர்கள் பி.கோவிந்தன்,
கு.விஷ்ணு முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.
டான் பாஸ்கோ பள்ளித்
தமிழாசிரியர் இரா.ஜனனி வரவேற்றுப் பேசினார். சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி
மாணவி கோ.வசந்த சஹானா “அவ்வையார் பாடல்கள்” என்ற தலைப்பிலும், அதே பள்ளி மாணவி
தி.அபிநயாஸ்ரீ “இன்றைய சமுதாயத்தில் இளைய தலைமுறையினரின் பங்கு” என்ற தலைப்பிலும்
பெல் மேல்நிலைப்பள்ளி மாணவர் மு.சூர்யா
“தன்னம்பிக்கை” என்ற தலைப்பிலும் உரையாற்றினர். வள்ளலார் தமிழ் மன்றத்தின்
மூன்றாண்டு நிகழ்வுகளின் காணொளிப்பதிவுத் திரையிடப்பட்டது.
திருநெல்வேலி மதிதா இந்துக்கல்லூரி இயற்பியல்
உதவிப்பேராசிரியர் முனைவர் அ.ந.சீதாலட்சுமி,திருநெல்வேலி கம்பன் கழகத்தலைவர்
பேராசிரியர் சிவசத்தியமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சௌந்தர மகாதேவன்
சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு
சிறப்புரையாற்றியபோது, “ தமிழ் அன்பின் மொழி, மனிதத்தின் புனிதத்தை உரக்கச்
சொன்னமொழி. பசித்தவயிறுகளுக்குச் சோறிடச்சொன்ன இராமலிங்க அருட்பிரகாச வள்ளலாரின்
திருவருட்பாவைத் தந்த மொழி. வாழ்வு ஒரு வசந்த நிகழ்வு, வாழ்வது ஓர் இனிய கலை என்று
நம்பிக்கை தந்து வாழக் கற்றுத் தந்த மொழி, உலகில் 80 மில்லியன் தமிழர்கள் பேசும்
மூவாயிரமாண்டு தொன்மையும் தொடர்ச்சியும் உடையமொழி. தமிழின் உன்னதத்தை
சிறுகுழந்தைகளுக்குப் பெற்றோர்கள்
கற்றுத்தர வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழோடு மனிதநேயத்தையும்
வளர்க்கும் வள்ளலார் தமிழ் மன்றத்தில் சிறுகுழந்தைகளின் தமிழ் உரையைக் கேட்பதில்
மகிழ்வளிக்கிறது, அவர்களே நாளைய தமிழை உலகெலாம் பரவும்வகை செய்யக்கூடியவர்கள்”
என்று பேசினார். திருமால்நகர் மக்கள் அளித்த ரூ இருபதாயிரம் சுத்தமல்லியில் உள்ள
அன்னை காந்திமதியம்பாள் அன்பு இல்லத்தில் தங்கிப்பயிலும் குழந்தைகளின் கல்விக்கான
உதவித்தொகையாய் சு.பிச்சையா விழாமேடையில் வழங்கினார். கலைநிகழ்ச்சிகள் வழங்கிய,
திருக்குறள் ஒப்புவித்த குழந்தைகள் மற்றும் உரையாற்றிய குழந்தைகளுக்கு நினைவுப்
பரிசுகள் வழங்கப்பட்டன. திருமால் நகரைச்சார்ந்த
வே.விஜயா நன்றி கூறினார்.விழாவுக்கான ஏற்பாடுகளை வள்ளலார் தமிழ் மன்றம்
சிறப்பாகச் செய்திருந்தது.
படத்தில்
வள்ளலார் தமிழ் மன்ற நான்காம் ஆண்டுத் தொடக்கவிழாவில் திருமால்நகர்
மக்கள் அளித்த ரூ இருபதாதாயிரம் நிதியை சுத்தமல்லியில் உள்ள அன்னை காந்திமதியம்பாள்
அன்பு இல்லத்தில் தங்கிப்பயிலும் குழந்தைகளின் கல்விக்கான உதவித் தொகையாய்
சு.பிச்சையா விழாமேடையில் வழங்கினார். அருகில் பேராசிரியர் சௌந்தர
மகாதேவன்,பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி, பாலாஜி புரோமொட்டர்ஸ் பங்குதாரர்கள்
பி.கோவிந்தன், கு.விஷ்ணு,மதிதா இந்துக் கல்லூரி இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர்
முனைவர் அ.ந.சீதாலட்சுமி ஆகியோர்.
Comments
Post a Comment