அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்



அனுபவம் எனும் அற்புதஆசிரியர்



முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275


வாழ்க்கை கற்றுக்கொடுக்கும், அனுபவம், நாம் கற்றுக்கொள்ளாததையும்  பெற்றுக் கொடுக்கும். அனுபவம், முதிர்ச்சியின் அடையாளம், அதிர்ச்சிகள் வராது தடையாளும் கருவூலம். மழைநாளுக்குப் பிறகு மண்ணைத் துளைத்து வெளியேறும் மண்புழுவைப் போல் தன்னைத் துளைத்துத் தன் சுயத்தைக் காட்டும் விஸ்வரூப விருட்சம்  அனுபவம். சல்லடையை வைத்து சமுத்திரத்தைச் சலிக்க முடியுமா? அனுபவத்தைப் புறந்தள்ளி யாராவது சாதிக்க முடியுமா? நினைவுப் பாம்புகள் புலப்பப் புற்றிலிருந்துதான் புடைதேடி வருகின்றன. அனுபவசாலிகள் என்றும் புலம்பலை மறந்த புத்திசாலிகளாகவே திகழ்கிறார்கள்.நம் அனுபவங்களை முதலீடாக்கி நம் முயற்சியை நாம் தொடங்கினால் என்ன?
 
சிக்கல் களையும் சிறப்புமருத்துவர்
கருவறை முதல் கல்லறை வரை அனுபவத்தின் ஆளுமை தொடர்கிறது. தேவையற்றதைத் தேவையில்லாத நேரத்தில் வாங்கினால் தேவையானதை விற்கவேண்டிவரும் என்று கற்றுத்தரும் ஆசான் அனுபவமே. நம் செயல்களை நிறுக்கும் அரூபத் தராசு அனுபவம். பேசவேண்டிய நேரத்தில் எங்கு எதை எப்படிப் பேசவேண்டும் என்று உள்ளத்திற்கு உணர்த்தும் உள்ளுணர்வு அனுபவமே. மனம் மலைத்து நிற்கும்போது சிக்கல் களையச் சிகிச்சையளிக்கும் சிறப்புமருத்துவர் அனுபவமே.

 வழிகாட்டும் வலி
கடலில் கலங்கித் தவிப்பவனுக்குக் கலங்கரைவிளக்குக் கரையில் நின்று எவ்வாறு வழிகாட்டுமோ அதைப்போலப் பிறவிப்பெருங்கடலில் கரைசேர அனுபவம் நமக்கு வழிகாட்டுகிறது. நம்மை அழகுபடுத்தும் அழகான உடை அனுபவமே. சாலையின் ஓரத்தில் நின்றாலும் திசைகாட்டித் தொலைவும் காட்டும் மைல்கல் அனுபவம்தான். அனுபவம் வீண்பழி நீக்க நமக்கு வழிகாட்டுகிறது. பல்கலைக்கழகங்களில்கூடப் படிக்க முடியாத படிப்பை ஆசிரியராய் அமர்ந்து ஆறஅமரக்கற்றுத்தருகிறது. வாழ்க்கை எனும் பட்டறையில் நாம் பட்ட அடிகளே அனுபவமாய் நின்று நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. தோல்விகள் வேள்விகள் நடத்தித் துக்கத்தைக் கக்கத்தில் தூக்கிவைத்துக் கொண்டிருப்போரையும் அனுபவம் படிப்பினையைத் தந்துவிடும். காரிருளில் அவ்வப்போது வந்து செல்லும் மின்மினிப் பூச்சியைப் போலல்லாமல் ,அகவிருள் அகற்றும் அறிவுக்கதிரவன் நாம் பெற்ற அனுபவங்களே. அனுபவத்தின் அடிச்சுவட்டில் நடப்பவர்களுக்கு வானம் வசப்பாடாது போகுமா? அவர்கள் கனவு நிசப்படாமல் வீழுமா?


 உணர்வு தரும் உன்னதஅனுபவம்
புரியாப் புதிரின் அறியா விடைதான் வாழ்க்கை.தொடர்ந்துவரும் சரிதல்களை நாம் வாழ்வில் கொண்டிருக்கும் அனுபவப் புரிதல்கள் மாற்றிவிடும். நாம் வருந்துமளவு வாழ்வு ஒன்றும் வாள்வீசி நம்மைச் சேதப்படுத்திவிடவில்லை. பக்குவமும் வயதுமுதிர்ச்சியும் சகமனிதர்களைப் புரிந்துகொள்ளவைக்கிறது. குயில் இட்டமுட்டையைத் தன்முட்டையாய் கருதி அடைகாக்கும் அப்பாவிக் காகமாக, போலிகளைப் போற்றிக்கொண்டு உண்மையை உணராமல் நாம் பலநேரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

அரிதாரங்களை நமக்கு அடையாளம் காட்டி நிஜத்த்தின் நித்தியத்தை நமக்குக் கற்றுத்தருவது அனுபவம்தான். வேரில் ஊற்றிய நீரை உச்சியில் இனிமையான இளநீராகத் தரும் தென்னைமரம் மாதிரி சிலர் எப்போதும் உயர்ந்த செயல்களைச் செய்துகொண்டே இருப்பார்கள். செருப்பாய் உழைத்தாலும் சிலர் சரியான நேரத்தில் கழட்டிவிட்டுப்போய்விடுவார்கள். இத்தனை வயதானபின்னரும்கூட உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரை அடையாளம் காணும் அனுபவம் வரவில்லையே என்று வருந்துவோரும் நம்முடன் உண்டு. இன்னல் வந்து நம் வீட்டுச் சன்னலில் எட்டிப்பார்த்தாலும் அனுபவம் ஆற்றலாய் நின்று நம்பிக்கை கொடுக்கும். எதை இழந்தாலென்ன நம்பிக்கையை நாமிழக்கவில்லையே! எதுநடந்தாலும் நாம் கலங்கத்தேவையில்லை  என்ற உண்மையை நமக்கு உரக்கச் சொல்வது அனுபவம்தான்.


சந்தேகம் சாய்த்துவிடும்

வீட்டைப்பூட்டிவிட்டு வீதிக்கு வந்தபின்னும் ஒழுங்காகப் பூட்டிவிட்டோமா என்று இன்னொரு முறை சென்று இழுத்துப் பார்ப்போர் நிம்மதி இழக்கிறார்கள். சந்தேகம் நம் தேகத்தைப் புண்ணாக்கும்.அனுபவத்தின் ஆற்றல் அதிகமாகிவிட்டால் சந்தேகம் வந்தவழியோடும். வளையல் துண்டுகளை மட்டும் வைத்துக்கொண்டு வர்ணஜாலங்கள் காட்டிக்கொண்டிருக்கும் கலைடாஸ்கோப்புகளாகக் காலம் சிலநேரம் நம் கண்களை ஏமாற்றிவிடுகிறது. கோடைகாலத்துக் கானல் நீர் தாகம் தீர்க்குமெனக்கருதி நம் கால்கள் அதை நோக்கி நடந்து, ஏராளமான ஏமாற்றங்களைச் சந்தித்துவிட்டன. பதினோருவகை நடனங்களைக் கற்றுத்தேர்ந்த மாதவி இயல்பாய் பாடிய பாடலைத் தவறாகப் புரிந்துகொண்ட கோவலன், அவள்மீது ஊடல் கொண்டு அவளை விட்டுப் பிரிகிறான். யாரோ யாருக்கோ சொன்னதை நம்மை நோக்கி நமக்கே சொன்னதாகத் தவறாகக் கருதி,அற்புதமான உறவுகளையும், அற்புதமான அழகு வாழ்வை நரகமாக்கிக் கொண்டிருப்போர் எத்தனைப்பேர்! வைக்கோற்போரின் மீது வீசப்பட்ட தீப்பந்தம்போல் தன்னையும் அழித்து தன்னைச் சார்ந்த வைக்கோற்போரையும் அழிக்கும். சினமெனும் தீயை அனுபவநீரால் மட்டுமே அணைத்துச் சாந்தமாக்க முடியும். கரையானால் அரிக்கமுடியாத இரும்புத்தூணை ஈரக்காற்று அரித்துத் துருப்பிடிக்கச் செய்துவிடும்.

எல்லாவற்றையும் நம்புவதா?

அனுபவம் உள்ள பெரியவர்கள் கண்ணால் கண்டதையும் காதால் கேட்டதையும் எப்போதும் நம்பமாட்டார்கள். மண்ணோடு இரும்புத்தூள்களைக் கலந்துவைத்தால் மண்ணைவிட்டுவிட்டு இரும்புத்தூள்களைமட்டும் ஈர்க்கும் காந்தத்துண்டு மாதிரி, எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருளில் ஒளிந்துள்ள மெய்ப்பொருளை அனுபவம் மிகுந்தவர்கள் எளிதாகக் கண்டறிந்துவிடுவார்கள். அதற்கு அவர்களின் முன்னை அனுபவங்கள் துணையாய் நிற்கும்.

அனுபவஆசான்கள்
பயனின்றி அழிவதற்காக நாம் உலகில் பிறக்கவில்லை. மற்றவர் அனுபவங்களைத் தன் அனுபவங்களாக ஏற்றுக்கொண்டு வாழ்வைத் திட்டமிடுகிறவர்கள் சாதனையாளர்களாய் மாறுகிறார்கள். எல்லா அனுபவங்களையும் எல்லோரும் பெறுதல் சாத்தியமில்லைதான். அனுபவசாலிகள் வாழ்நாள்முழுவதும் தன்வாழ்க்கையையும் மற்றவர் வாழ்க்கையையும் பாடமாகக் கொண்டு தினமும் கற்றுக்கொண்டே இருப்பார்கள். 

மூத்தோர் சொல்லை மதிப்போம்
மூத்தோர் சொல்லும் முழுநெல்லிக்காயும் முன்னர் கசக்கும், பின்னர் இனிக்கும். முதியவர்கள் எப்போதும் அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள் என்று ஒதுங்குதலும் அவர்களின் நல்லனுபவங்களையும் புறக்கணிப்பது சரியானசெயலன்று. எனவே தங்கள் அனுபவங்களை யார் நமக்குத் தந்தாலும் மறுப்பின்றி ஏற்போம். மணிக்கட்டுகளில் கைக்கடிகாரத்தைக் கட்டிக்கொண்டு தவறான நேரத்தைச் சொல்வோருக்கு மத்தியில் வயற்காட்டில் நின்றுகொண்டு வானத்தைப் பார்த்து சூரியனின் இருப்பைப் பார்த்து மணி சொல்லும் விவசாயிகள் அனுபவம் எவ்வளவு உயர்வானது? எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் ஆழாக்கு, உழக்கு,கலம், தூணி, நெய்க்கரண்டி, எண்ணெய்க்கரண்டி, பாலாடை,குப்பி,அவுன்ஸ் என்று முகத்தல் அளவையைக் கூறி, மனக்கணக்கில் அபாக்கஸ் அறிஞர்களைத் தாண்டுமளவு ஆற்றல் பெற்றிருந்தார்களே எப்படி? அனுபவம் எனும் படியில் ஏறிதானே! ஏட்டுக்கல்வியைப் பலநேரங்களில் அனுபவக்கல்வி விஞ்சியிருக்கிறது.

அனுபவம்தந்த அறிஞர் ஆர்கிமிடிஸ்
 தங்கக்கிரீடம் செய்யத் தங்கம் தந்த கிரேக்கமன்னன் இரண்டாம் ஹியரோ அறிஞர் ஆர்கிமிடிசிடம் தான்தந்த தங்கம் அந்தக் கிரீடத்தில் இருக்குமா என்று கேட்க, பதில்தெரியாமல் திகைத்த ஆர்க்கிமிடிசிற்கு அவர் அனுபவம்கைகொடுத்தது.தொட்டிநீரில் முங்கிக் குளித்தபோது வெளியேறிய தண்ணீரின் நிறையை மன்னர்கேட்ட வினாவுடன் ஒப்பிட்டு விடைகண்டறிந்தார். மார்கோனி வானொலியைக் கண்டறியும்முன்பே மகாகவி பாரதியார்,” காசிநகர்ப் புலவன் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்” என்று பாடியது அனுபவமுதிர்ச்சிதான்.
சிலநேரங்களில் நாம் சுற்றுலாத்தலங்களில் கண்டுபெற்ற அனுபவத்தைவிடச் சுற்றுலா செல்வதற்கு மேற்கொண்ட பயணங்கள் நமக்கு மறக்கமுடியா அனுபவங்களைத் தந்ததை மறுக்க இயலுமா? பயணச்சீட்டு பெற மேற்கொண்ட முயற்சிகள், தொடர்வண்டியில் வந்துசென்ற ரயில்சிநேகங்கள், கடந்தஊர்களில் நடந்தசம்பவங்கள்,நெருக்கடியான வேளைகளில் உதவிச்சென்ற முகம்தெரியா மனிதர்கள்..என ஒவ்வொரு பயணமும் மனிதர்களுக்கு எத்தனை அனுபவங்களைக் கற்றுத் தந்திருக்கின்றன.

அனுபவம் தரும் அடக்கம்
ஆற்றில் தண்ணீர் மொண்டு எடுக்கும்போது சப்தமிடும் குடம் நிரம்பியவுடன் அமைதியாகிவிடுகிறது.சிறுவெற்றிகளுக்கே கூத்தாடும் சிலருக்குமத்தியில் இரட்டை ஆஸ்கார் விருதுகளை வென்று உலகசாதனை செய்தபின்னும்கூட எல்லாப்புகழும் இறைவனுக்கே! என்று அமைதியாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானால் கூறமுடிந்தததன் காரணம் அவர் பெற்ற வாழ்வியல் அனுபவங்களே.

அனுபவம் தரும் ஆன்மஞானம்
அனுபவம் எளிமையாகத் தானிருக்கும் ஆனால் வலுவான சேதங்களிலிருந்து நம்மைக் காக்கிறது. திருவள்ளுவரின் தனிமனித அனுபவம் திருக்குறளாய் மாறும்போது உலகஅனுபவமாய் மாற்றுரு பெற்று உலகப் பொதுமறையாய் செம்மாந்துநிற்கிறது. மகாத்மா காந்தியின் சத்தியசோதனை அனுபவங்கள், படிப்போருக்கு ஆத்மஞானத்தை அளிக்கின்றன. ” நான் யார்?” என்ற கேள்விக்குத் தவத்தால் விடைகண்டறிந்த பகவான் ரமணமகரிஷியின் ஆன்மநேயம் நம்மை மறுமைவாழ்வு குறித்து சிந்திக்கவைக்கிறது. மண்ணில் விழுந்து விதையை உடைத்து உள்ளிருந்து முளைவிடும் சிறுதுளிர் கிளைபரப்பி மரமாக உயர்ந்து மீண்டும் கனிகளைத் தந்து மண்ணில் உதிர்ந்து மறுசெடியாய் முளைப்பதைப்போல் பிறப்பும் இறப்பும் வட்டமாய் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.  உலகத்தின் நியதியைப் புரிந்துகொண்டவர்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை, வரப்போகும் மரணத்திற்காய் அஞ்சுவதுமில்லை.

செயல் அதுவே மிகச்சிறந்த சொல்
இருளில் இருந்த உலகைத் தன் கண்டுபிடிப்பால் வெளிச்சத்தைத்தந்து ஒளியில் ஆழ்த்திய தாமஸ்ஆல்வா எடிசன் பலநூறு முறை முயன்று தோற்று மனம் தளாராமல் மின்விளக்கைக் கண்டுபிடித்தார்.அவரைப் பொறுத்தவரை அந்த தோல்வியின் தோள்களில் ஏறியே எட்டாக் கனியாய் இருந்த வெற்றியின் கிளைகளை அவர் தளராமல் எட்டிப்பிடித்தார்.நியூயார்க் மாநகரத்தை ஒளிவெள்ளத்தில் ஆழ்த்திய எடிசனைப் பேட்டிகாணச் செய்தியாளர்கள் சென்றபோது அவர் அடுத்த ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டார்.பேட்டிக்கு நேரம்தரமறுத்து,மணிக்கணக்காய் நான் செய்ததைப்பற்றிப் பேசும்நேரத்தை அடுத்தகண்டுபிடிப்புக்கு ஒதுக்கலாமே” என்றார்.99 சதவீதஉழைப்பு ஒருசதவீத அறிவு இருந்தால் வெற்றிபெற்றுவிடலாம் என்று  எடிசன் தன் வெற்றிஅனுபவத்தின் ரகசியத்தை அடக்கத்தோடு சொன்னார்.
ஆயிரம் ஆசிரியர்களால் கற்றுக்கொடுக்க முடியாத பாடத்தை ஒருநாளில் நாம் பெறும்அனுபவம் கற்றுத்தந்துவிடுகிறது. இறந்தகாலத்தில் நாம் பெற்ற செய்தசெயல்களிலிருந்து பெற்ற அனுபவங்கள் நிகழ்காலத்தின் நிகழ்வுகளைக் குறைவின்றி நடத்தப் பேருதவி செய்கின்றன.எனவே தோல்வி என்பது தொலைவில் நின்றுகொண்டிருக்கும் வெற்றி என்பதைப் புரிந்துகொண்டால் நாம் எந்தச் சூழலிலும் மனம் தளரமாட்டோம். தோல்விகளில் நாம் பெறும் அனுபவப்படிப்பினைகளே வெற்றியை நோக்கிய நம் பயணத்தை விரைவுபடுத்துகின்றன. வெற்றியில் பெற்றதைவிடத் தோல்வியில் கற்றது கல்லில் செதுக்கிய எழுத்தாய் நமக்குள் ஆழப்பதிகிறது. சுலபமான பாதைகளில் நடப்பவர்கள் பயணிகள் என்று பெயரெடுக்கிறார்கள்,தன்பாதங்கள் பழுதானாலும் பரவாயில்லை என்று துணிந்துநடப்பவர்கள் அனுபவத்தால் தடம்பதிக்கிறார்கள், வரலாறு படைக்கிறார்கள்.அனுபவ ஆசானிடம் அனுதினமும் பாடம் படிப்போம்.
 http://www.dinamalar.com/news_detail.asp?id=1453123






Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்