sadakathullh Appa College Workshop On Sidda Palm Manuscirpt
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்
தமிழ்சித்தமருத்துவ ஓலைச் சுவடிகள் ஆவணப்படுத்துதல் பாதுகாத்தல் ஒருநாள் பயிலரங்கு
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்
தமிழ்த்துறையின் ஒருங்கிணைப்பில்
தமிழ்சித்தமருத்துவ ஓலைச் சுவடிகள் பாதுகாத்தல் மற்றும் மின்னனு முறையில்
ஆவணப்படுத்துதல் குறித்த ஒருநாள் பயிலரங்கு வரும் ஞாயிறு ( 7.2.2016) காலை 10
மணிக்குக் கல்லூரி உரையரங்கில் நடைபெற்றது. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித்
தமிழ்த்துறையோடு சென்னை பாரம்பரிய மருத்துவ மையம், பாண்டிச்சேரி பிரஞ்சு நிறுவனம்,
தென்னக பாரம்பரிய தமிழ்ஓலைச் சுவடிகள்
ஆய்வு நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் ஆவணப்படுத்துதல் குறித்த
ஒருநாள் பயிலரங்கில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது
சாதிக் கருத்தரங்கத் தொடக்கவுரை ஆற்றினார். சென்னை பாரம்பரிய மருத்துவ மைய மருத்துவர்
டாக்டர் சங்கீதா வரவேற்றுப் பேசினார்.ஆட்சிக்குழுத்தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக்
லெப்பை,ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வாவு எஸ்.செய்யது
அப்துல்ரகுமான்,எம்.கே.எம்.முகமது நாசர், தமிழ்த்துறை இணைப்பேராசிரியர்
அ.மு.அயூப்கான் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
திருநெல்வேலி அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி
உதவிப்பேராசிரியர் டாக்டர் சுபாஷ்சந்திரன் பயிலரங்கின் நோக்கம் குறித்து
நோக்குரையாற்றினார். சென்னை பாரம்பரிய மருத்துவ மைய மருத்துவர் டாக்டர்
திருநாராயணன் மருத்துவச் சுவடிகளை ஆவணப்படுத்துவதன் தேவை குறித்து விரிவுரை
ஆற்றினார்.
தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் சுவடிப்பயன்பாட்டில்
பொதுமக்கள் பங்கு எனும் பொருளில் பேசினார். பாண்டிச்சேரி பிரஞ்சு நிறுவன மருத்துவ
மானுடவியல் முதன்மை ஆய்வாளர் டாக்டர் பிரிகிட்டி செபாஸ்டியா தலைமையுரை ஆற்றினார்.
அவர் தனது தலைமையுரையில்
“ அரிய
மருத்துவச் சுவடிகள் பாரம்பரிய மருத்துவர்களிடம் உள்ளன.தலைமுறை தலைமுறையாக அவர்கள்
அவற்றைக் குடும்பச் சொத்தாகப் பாதுகாத்து வருகின்றனர்.ஆனால் சுவடிகளின் ஆயுள் 250
ஆண்டுகள் மட்டுமே.அதன்பின் அவை செல்லரித்து நொறுங்கிப்போய்விடும்.திருநெல்வேலி,குமரி,தூத்துக்குடி
மாவட்டங்களைச் சார்ந்த பாரம்பரிய
மருத்துவர்கள் 11 கட்டுகள் அரிய சுவடிகளை இன்று இந்தப்பயிலரங்கில் மின்னனு
முறையில் இணையத்தில் எண்மப்படுத்துவற்காக தந்துள்ளனர். அவை இப்போதும் அவர்களின்
அரிய சொத்துதான்.ஆனால் எண்மப்படுத்தப்பட்ட உலகக்கொடையாகிவிட்ட சொத்து.
மருத்துவம்,சோதிடம்,தமிழ்க்கலைகள்,வானசாத்திரம்,மந்திரம்,யானை வைத்தியம் போன்ற
அரிய சுவடிகளை நெல்லை,குமரி,தூத்துக்குடி மாவட்டம் சார்ந்த மரபுசார்ந்த
மருத்துவர்கள் தந்துள்ளார்கள். அவை பெற்றுக் கொள்ளப்பட்டதற்கான ஒப்புதல் சீட்டு
வழங்கப்பட்டு மின்னனு வடிவில் அவை குறுந்தகடுகளாக அவர்களுக்கு மீண்டும்
தரப்படுவதோடு அவர்களின் அரிய சுவடிகளும் தூய்மைசெய்யப்பட்டு மீண்டும் அவர்களுக்கே
வழங்கப்படும்.
இந்தச் சுவடிகளில் உள்ள அரிய செய்திகள் நூல்களாகப்
பதிப்பிக்கப்படவேண்டும்.அப்போது தமிழின் தொன்மையான மருந்துதயாரிக்கும் முறைகளை
உலகம் இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.நோய் கணிப்பு குறிப்புகளை இணையத்தில்
உள்ளிடும்போது அது உலகச்சொத்தாக மாறும்.நாடிபிடித்து நோயைக் கண்டறியும் தமிழரின்
அரிய ரகசியம் தமிழ்ச் சுவடிகளில் புதைந்து கிடக்கிறது.அது பொதுவெளியில்
முன்நிறுத்தப்படும்போது மரபு சார்ந்த சித்தமருத்துவம் உலக அளவில் இன்னும் மக்கள்
முன் புகழ்பெறும்.எனவே எந்தப்பகுதியில் எந்தச் சுவடிகள் கிடைத்தாலும் அவற்றை
பாழாக்காமல் எண்மப்படுத்த உதவவேண்டும். சுவடிகளை எண்மப்படுத்த குறிப்பட்ட
நுண்நோக்கு கொண்ட கேமராக்களையே பயன்படுத்துகிறோம். அச் சுவடிகளைத் தூய்மையாக்க அதிநவீன
பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துகிறோம்.அவற்றை கணினியில் சேமிக்கவும் தெளிவாக
வாசிக்கவும் சிறந்த மென்பொருள்களை பயன்படுத்திவருகிறோம். எனவே தயக்கம் ஏதுமின்றி
சுவடிகளை அருகில் உள்ள சுவடிப்பாதுகாப்பாளர்களிடம் தரலாம்” என்று பேசினார்.
திருநெல்வேலி அரசினர் சித்தமருத்துவக் கல்லூரி
உதவிப் பேராசிரியர் டாக்டர் சுபாஷ்சந்திரன், சென்னை பாரம்பரிய மருத்துவ மையத்தைச்
சார்ந்த சுந்தரவள்ளி, டாக்டர் சங்கீதா, மோகன்ராஜ், ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இப்பயிலரங்கில் தமிழ் ஓலைச்சுவடிகளை நவீனமுறையில் பாதுகாத்தல் தொடர்பான ஆலோசனைகள்
வழங்கப்படுகிறது.
ஓலைச்சுவடிகள் பாதுகாப்பில் எதிர்நோக்கும் சவால்கள் எனும்
தலைப்பில் பண்டிட் என்.ஸ்ரீனிவாசன் சிறப்புரையாற்றினார். கலந்துரையாடலை தமிழ்ச்
சுவடிகள் பாதுகாப்பு முறைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வை கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன்
ஒருங்கிணைக்க தமிழ்ச் சுவடி ஆய்வாளர்கள் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம்,செல்வின்
இன்னொசென்ட் தாஸ், டாக்டர் டி.கே.சௌந்தரராஜன்,ஆனந்த் ஆகியோர் விவாதத்தில்
பங்கேற்றுப் பேசினர். டாக்டர் எஸ்.ராமசாமி நன்றிகூறினார். விழாவில் அரிய சுவடிகளை
எண்மப்படுத்த தந்த பத்து மருத்துவர்களுக்கு விழாவில் நினைவுப் பரிசும்
எண்மப்படுத்திய அவர்களின் சுவடிக்குருந்தட்டையும் பாண்டிச்சேரி பிரஞ்சு நிறுவன
மருத்துவ மானுடவியல் முதன்மை ஆய்வாளர் டாக்டர் பிரிகிட்டி செபாஸ்டியா வழங்கிப் பாரட்டினார்.

Comments
Post a Comment