தினமலர் என் பார்வை : இல்லமெனும் இனியபள்ளி
முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி
வகுப்பறைகள் மாறிவிட்டன,சாக்பீஸ் தூக்காமல்,
மவுஸ் பிடிக்கும் நவீனஆசிரியர்கள்,குளிர்சாதன வசதிகொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள்,
அதிநவீன டேப்களோடு வகுப்பில் அமர்ந்திருக்கும் எல்.கே.ஜி. மாணவ
மாணவியர்,கரும்பலகைக்கு மாற்றாய் வெண்திரைகள், அந்த வெண்பலகையில் எழுதிய யாவற்றையும்
சேமிக்கும் ஆற்றல்மிகு கணினிகள், நினைத்த மாத்திரத்தில் தேடுபொறிகளின் உதவியால்
பாடத்தையும் படத்தையும் கண்முன் கொண்டுவரும் அதிவேக இணையவசதிகள்..காதால் கேட்டும்,
கண்ணால் கண்டும், கற்கஉதவும் மொழிஆய்வகங்கள் என வகுப்பறைகள் வசதியாக்கப்பட்டு
விட்டன.
கற்றல் சுகமான அனுபவமாகி இருக்கிறதா ? மகிழ்ச்சியோடு நம் குழந்தைகள்
கற்கிறார்களா? வினா எழுகிறது அவ்வப்போது.
இரட்டைக் கோடு நான்கு கோடு போட்ட அழகான
எழுத்துப்பயிற்சி ஏடுகள், வளைந்து நெளிந்து எழுதும் பிஞ்சுவிரல்கள் என்று எத்தனை
சுகமாக இதமாகக் கற்றோம்?
அன்று எழுத்து
எத்தனை சுகமான அனுபவம்! வளைவும் நெளிவும் கூட்டி மனதின் நடைச் சித்திரத்தை
விரல்கள் வழியே நம் சொந்தக் கையெழுத்தில் எழுதுவது எத்தனை அழகானது! எழுத்தை
மட்டுமா? சிலேட்டையுமல்லவா நாம் இன்று இழந்து நிற்கிறோம். அழித்து அழித்து அகரம்
கற்ற அந்த அற்புதப் பொருளைக் காலம் தன் கருங்கைகளால் அழித்துப் போட்டதே..! எப்படி
அனுமதித்தோம் இந்தப் பிரபஞ்சப் பிழையை?
நம்மையே எழுதிவைத்த சிலேட்டு எனும் விசித்திரச்
செவ்வகத்தை மரகதம் டீச்சர்தான் முதன்முதலில் என் யூகேஜி வகுப்பில்
அறிமுகப்படுத்தினார்கள். பாலிதீன் பைக்குள்ளிருந்து அந்தச் செவ்வக அதிசயத்தை
டீச்சர் எடுத்ததும், குட்டையாய் இருந்ததால் முதல்பெஞ்சில் அமர்ந்திருந்த என்னை
அழைத்து மாவுக்குச்சியால் கையைப் பிடித்து வளைத்து ஓட்டுநர் ஸ்டீரிங்கை லாவகமாக
வளைக்கிறமாதிரி வளைத்து, “ அ” கரத்தைப் போடவைத்ததும் வாழ்வின் அபூர்வமான
நிமிடங்கள். யாருக்குத்தான் சித்திரம் வரையப் பிடிக்காது? எழுத்தும் விசித்திர
சித்திரம்தானே எழுத்தும்கூட.
அன்று மாலையே அப்பாவிடம் அடம்பிடித்து
பாளையங்கோட்டை தெற்குபஜாரிலுள்ள ஒன்றரையணா பொன்னையா பிள்ளைக் கடையில் கல்சிலேட்டு
வாங்கியதும், உருட்டிய பென்சில் போன்ற மாவுக்குச்சியால் ஆசைதீர அன்று முழுக்க
ஏதேதோ கிறுக்கியதும் அழகான நிகழ்வுகள். கல்சிலேட்டைத் தூக்கக்கூட அப்போது
தெம்பிருக்காது; ஆனாலும் தூக்கிக்கொண்டு வீடுமுழுக்கத் திரிந்திருகிறோம் அப்படி
ஒரு சந்தோசம். பூனைப் படம்,பூப் படம் வரைந்து மரகதம் டீச்சரிடம் காட்டி நல்ல பேர்
வாங்க வேண்டும் என்று பைக்கூட்டிலிருந்து வெளியே எடுத்தால் ஏதுமற்றுச் சிலேட்டு
சுத்தமாக இருக்கும். படத்தைப் பை தின்றுவிட்டதாய் சொல்லி மரகதம் டீச்சர் பெரிதாய்
சிரித்தபடிப் போய்விடுவார்கள்.
டீச்சர்
எழுதிப்போடும் பெரிய கரும்பலகையின் சின்னசைஸ் பலகையைப் போல் என் சிலேட்டை நான்
நினைத்துக் கொண்டதுண்டு. “டீச்சர்! உங்க சிலேட்டுல பின்னாடி எழுதமுடியாது..என்
சிலேட்டுல மட்டுந்தான் முன்னும் பின்னும் எழுதமுடியும்” என்றுகூடச்
சொல்லியிருக்கிறேன்.
முன்பக்கம் எழுதிமுடித்து, முன்பின்னாய் மாற்றி
எழுதிமுடித்துத் தூக்கியபோது முன்பு எழுதியது கால்சட்டைக்குக் கீழ் காலில்
அச்சுப்பதிந்திருக்கும். சிலேட்டின் நான்கு ஓரங்களிலும் மடக்கப்பட்டு குட்டிஆணி
அறையப்பட்ட தகரம் எத்தனையோ முறை என் கைகளைப் பதம் பார்த்திருக்கிறது. ஆனாலும் அதன்
மீதான மோகம் மட்டும் குறைந்ததில்லை.அதில் எழுதுவது சுகமானது. அதுவும் மாக்குச்சியால்
எழுதுவது பிடிக்கும், அது சிலேட்டில் நன்றாகப் பசியும். பசிஎடுத்தபோதெல்லாம்
குச்சியைத்தின்ற மாணவர்களும் எங்கள் வகுப்பில் உண்டு. கூட்டெழுத்து எழுத சுகமாய்
இருக்கும்.
எழுதுவது எவ்வளவு சுகமனதோ அழிப்பதும் அவ்வளவு
சுகமானது.அப்பாவில் பனியன் துணியை அம்மா பைக்கூட்டிற்குள் மடித்துத்தந்துவிடுவாள்,
அதை எடுத்து அழகாக அழிக்கவும் மரகதம் டீச்சர் பழக்கியிருந்தார்கள். பாம்பே குச்சியால் எழுதியது, கடல் குச்சியால் எழுதியது
என்று குச்சியைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். சில மாணவர்கள் எச்சில் தொட்டும்
எழுத்தை அழிப்பார்கள். எழுதியதை அழிக்கக் கஷ்டமாக இருக்கும்.புதியதை
எழுதவேண்டுமானால் பழையதை அழித்துத்தானேயாக வேண்டும். வாழ்க்கையும் அதைத்தானே
கற்றுத்தருகிறது! எண்ணையும் எழுத்தையும் அன்று அப்படித்தான் கற்றோம்.
அப்போது விளையாட்டு எங்களுக்கு உயிர். இன்றுபோல்
சிந்தடிக் விளையாட்டுத் தரைகள் அன்று இல்லை. ஆலமரத்தடியில்தான் எங்கள் விளையாட்டு
ஆசிரியரின் இருக்கை இருக்கும். ஆனால் அவர் அமர்ந்து நாங்கள் பார்த்ததில்லை.
தினமும் மைதானத்தில் வியர்க்க விறுவிறுக்க எங்களோடு அவரும்
விளையாடிக்கொண்டிருப்பார்.
விளையாட்டுதந்த உற்சாகம், பள்ளிக்குச் செல்லவேண்டும்
என்று மனம் துடியாய் துடிக்கும். தாத்தாவின் கையைப் பிடித்து பள்ளிசென்ற அந்த
நாட்கள் அபூர்வமானவை. என்ன நடந்தது இந்த முப்பதுஆண்டுகளில்?
ஓடிவிளையாடிய பாப்பாக்கள் ஓட்டத்தை ஏன்
நிறுத்திக்கொண்டார்கள்? ஒருகுடம் தண்ணியெடுத்து ஒருபூப் பூக்க வைத்த பிஞ்சுக்குழந்தைகள்
ஏன் வீட்டுக்குள் முடங்கிப் போனார்கள்? பூவரசஇலையைச் சுருட்டிப் பீப்பீ ஊதிய
குட்டிக் குழந்தைகளைச் சோட்டாபீமும் ஜுக்கியும் ஜக்குவும் பவர்ரேஞ்ஜெர்சும் எப்படி
ஆட்கொண்டன? கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தைகளை வீடியோ
கேம்ஸுக்குள் பிடித்துத் திணித்தது யார்?
செவ்வாய்க் கிரகத்திலிருந்து யாரும்
செய்துவிடவில்லை. நாம்தான் அந்த நற்செயலைச் செய்தோம். ஐந்துவயதில்தான்
குழந்தைகளுக்குக் கல்வியைத் தொடங்கவேண்டும் என மேலைநாடுகளில்
செயல்படுத்திக்கொண்டிருக்கும் போது இரண்டரைவயதில் ஆயிரக்கணக்காகப் பணத்தைக் கட்டி
விளையாட்டுப்பள்ளிகளில் நாம்தானே சேர்த்துக் கொண்டிருக்கிறோம்? சமீபத்தில்
ஹாங்காங்கில் மூன்று வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கப் பயிற்சிதரும் பயிற்சியாளர்கள் தனியே கிளம்பிவிட்டனர்.
ஆசிரியருக்கு வணக்கம் சொல்வதில் தொடங்கி,
பள்ளிச் சேர்க்கை நேர்காணலில் சுயஅறிமுகம் வரை அத்தனையும் அந்தக்
குட்டிக்குழந்தைகளுக்குச் சொல்லித்தர ஆங்காகே சிறுசிறு பயிற்சிக்கூடங்கள். இதன்
விளைவு குழந்தைத்தனம் பறிகொடுத்த குழந்தையர் கூட்டம். குழந்தைகளின் உலகம்
மிகமென்மையானது, உண்மையானது, பாசாங்கற்றது, அன்புக்கு ஏங்குவது, வன்சொல் தாங்காதது,
எல்லோரும் தன்னைப் புரிந்துகொண்டு கொண்டாட வேண்டும் என நினைப்பது.
எல்லாவற்றையும்விடச் சுதந்திரத்தையும் விளையாட்டையும் விரும்புவது. குழந்தைகளின்
உலகத்தை நாம் புரிந்துகொண்டிருக்கிறோமா? அவர்களைச் சுதந்திரமாய் ஓடியாட நாம்
அனுமதித்துள்ளோமா? நம் விருப்பங்களை அவர்கள்மீது திணித்து நம் ஆளுமைகளைக்
காட்டவல்லவா முயல்கிறோம். பூக்களின்மீது எப்படி நம்மால் கோடரியை இரக்கமில்லாமல்
வீசியெறிய முடிகிறது? காலம் நமக்குத்தந்த கருவூலம் நம் குழந்தைகள்.அவர்களின்மீது
ஏன் பாரத்தை ஏற்றவேண்டும்?
தங்கக்கடைகளிலும் குழந்தைகள் விரும்புவது
பலூன்களைத்தானே. அந்தத் தளிர்களின் முதுகில் மூட்டைமூட்டையாய் பாரங்கள்..சுமை
சுமக்குமளவு அவர்களின் முதுகெலும்புகள் உறுதிபெற்றுவிட்டனவா? ஆங்கிலத்தில்
பேசவேண்டும் என்ற ஒரேநோக்கத்திற்காக ஏன் நாம் அவர்களை என்னபாடு பாடுபடுத்துகிறோம்?
ஒரு மொழியறிவு மட்டும் அவர்களை எப்படி முன்னேற்றி விடும்?
அவர்கள்
மதிப்பெண்முட்டையிடும் வாத்துக்களா? உலகஅனுபவம் இல்லாமல்,செய்தித்தாள்
படிக்காமல்,சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் மதிப்பெண்களைக் குவித்து
என்னபயன்? இன்னும் நம் தாய்மொழியில் பிழையின்றிப் பேசவும் எழுதவும் நம் குழந்தைகளுக்கு
நாம் கற்றுத்தரவில்லையே. திருக்குறளையும், நாலடியாரையும், கொன்றைவேந்தனையும்,
ஆத்திசூடியையும், மூதுரையும், நல்வழியையும் ஆசாரக்கோவையையும் நாம்
அறிமுகப்படுத்தியிருக்கிறோமா? மனத்தையும் வாழ்வையும் செம்மைப்படுத்தாத கல்விதரும்
மதிப்பெண்ணால் என்ன பயன்?
பொம்மைகளைக் கூட உண்மைகளாய் நம்பிவிடும்
அப்பாவிக் குழந்தைகளை நாம் இயற்கையோடு செடியோடு பூனைக்குட்டியோடு பறவைகளோடு
மீன்களோடு பேச, மண்ணில் விளையாட, நாம் அனுமதித்துள்ளோமா? நம் குழந்தைகளுக்கு
நதியும் வயலும் கடலும் அருவியும் தெரியுமா? மகிழ்ச்சியை மனதிற்குத் தந்து
மலர்ச்சியை முகத்திற்குத் தருவதுதானே நற்கல்வி! வெளியே இருப்பதை உள்ளே திணிப்பதும்
மனப்பாடம் செய்யவைத்து அதை அப்படியே தேர்வில் எழுதவைப்பது மட்டுமா கல்வி
செய்யவேண்டும்?
மாம்பழங்களுக்குள்ளும்
மகிழ்ச்சியாக வண்டாட முடிகிறது
கருநிறப் பூச்சிகளால், பாறைகளுக்குள்ளும் பத்திரமாக உயிர் வாழ முடிகிறது தேரைகளால், கொங்குதேர் வாழ்க்கை நடத்தும் அஞ்சிறைத் தும்பிகளால்
பூக்களுக்குள்ளும் துயில்கொள்ள முடிகிறது.அட்டைப் பெட்டிகளுக்குள்ளும்
குட்டிகளைக் காக்க முடிகிறது பூனைகளால், மின்சாரவடங்களிலும்
கவலையற்றுக் கால்பதிக்க முடிகிறது பறவைகளால்,கண்டங்களைக் கடந்து
விரிவானில் விரைந்து வரமுடிகிறது அலகுநீள் ஆஸ்திரேலியக் கொக்குகளால்..ஆனால் நம்முடனே இருக்கும் நம் குழந்தைகளின் மனதை நம்மால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? தகவல்ககளை மூளைக்குள் குவிப்பது மட்டுமா கல்வி? குழந்தைகளின் ஆளுமை, அவர்களின் மொழிவளர்ச்சி,சிந்தனைத் திறன்,கற்பனையாற்றல், படைப்புத்திறன், தன்னம்பிக்கை, உயரிய மதிப்பீடுகள், நற்பண்புகள்,மனிதநேயம்,நம் பண்பாடு,கலாச்சாரம் கற்றல், மற்றவர்களை மதித்தல், நற்செயலைச்செய்தல், விட்டுக்கொடுத்தல், ஆகிய அனைத்தையும் கற்றுக்கொள்வதல்லவா கல்வி!
பூக்களுக்குள்ளும் துயில்கொள்ள முடிகிறது.அட்டைப் பெட்டிகளுக்குள்ளும்
குட்டிகளைக் காக்க முடிகிறது பூனைகளால், மின்சாரவடங்களிலும்
கவலையற்றுக் கால்பதிக்க முடிகிறது பறவைகளால்,கண்டங்களைக் கடந்து
விரிவானில் விரைந்து வரமுடிகிறது அலகுநீள் ஆஸ்திரேலியக் கொக்குகளால்..ஆனால் நம்முடனே இருக்கும் நம் குழந்தைகளின் மனதை நம்மால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? தகவல்ககளை மூளைக்குள் குவிப்பது மட்டுமா கல்வி? குழந்தைகளின் ஆளுமை, அவர்களின் மொழிவளர்ச்சி,சிந்தனைத் திறன்,கற்பனையாற்றல், படைப்புத்திறன், தன்னம்பிக்கை, உயரிய மதிப்பீடுகள், நற்பண்புகள்,மனிதநேயம்,நம் பண்பாடு,கலாச்சாரம் கற்றல், மற்றவர்களை மதித்தல், நற்செயலைச்செய்தல், விட்டுக்கொடுத்தல், ஆகிய அனைத்தையும் கற்றுக்கொள்வதல்லவா கல்வி!
பள்ளிகளில் மட்டுமே இவற்றைக் கற்றுத்தந்துவிட
முடியாது.வீடுகள்தான் குழந்தைகளின் முதற்பள்ளிகள். பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள்,
ஆசிரியர்கள் அக் குழந்தைகளைப் பெறாத பெற்றோர்கள். பெற்றோர்களும் தன்வாழ்நாளில்
இதையெல்லாம் கற்றோர்கள்தானே! பின் ஏன் குழந்தைகளுக்குக் கற்றுத்தரக்கூடாது?
பாடத்திட்டத்திலும் பள்ளியிலும் இல்லை சாதனை மாணவர்களின் உருவாக்கம்.
இல்லங்களிலும் இருக்கிறது இன்பமான கற்றல்.கற்றலைத் தொடங்குவோமா? பள்ளிகள்
திறந்துவிட்டன,நம் அகக்கண்கள் திறந்துவிட்டனவா?
Comments
Post a Comment