தினமலர் என் பார்வை: ஆனந்தமாய் வாழ ஆசையா?
பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்
துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரி,திருநெல்வேலி,9952140275
யாருக்குத்தான் ஆனந்தமாய் வாழ ஆசை இருக்காது? ஆனால் எப்படிஆனந்தமாய்
வாழ்வது என்பதுதான் தெரியவில்லை. ஆனந்தம்
ஆர்ப்பரிக்கும் நிமிடங்களை விட்டுவிட்டுக் கவலைகளின் சவலைப் பிள்ளைகளாய் ஏன்
வருத்தத்தின் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருக்கிறோமே ஏன்?
·
தங்கக்
கடைகளிலும் குழந்தைகள் தேடுவது சாதாரண பலூன்களைத்தான். நிம்மதியான மனமே
ஆனந்தத்தின் சந்நிதி; ஆனந்தமனம் இறைவன் உறையும் அரூபபீடம். இடைவிடாமல்
ஓடிக்கொண்டிருக்க நாமொன்றும் கடிகாரமுட்களன்று மனிதர்கள் என்பதை மறவாமலிருப்போம்.
·
வாழ்க்கை
என்பது வரமா? சாபமா? என்ற வினாக்கள் வேறு.சீக்குப் பிடித்த சிந்தனைகளின் போக்குப்
பிடிக்காமல் தூரநின்று ரசித்துப் பாருங்கள் வாழ்க்கை எவ்வளவு அழகான வரமென்று
புரியும்.
·
“செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்று
குமரகுருபரசுவாமிகள் அழகாக ஆனந்திக்கச் சொன்னதை அறிவோமா?
·
யார்வாழ்வில் சவால்கள் இல்லை? யார் வாழ்வில்
சங்கடங்கள் இல்லை? முள்ளுக்கு மத்தியில்தான் ரோஜா, ராஜாவாகக் கொலுவீற்றிருக்கிறது.
கண்ணீரைச் சிந்தும் கண்களுக்கருகில்தான் சிரிப்பைச் சிந்தும் உதடுகள் உற்சாகத்தோடு
உட்கார்ந்திருக்கின்றன.
·
எண்ணங்களில்தான் இருக்கின்றன நம் வாழ்வின் நிறைவும்
துன்பத்தின் சரிவும்.
·
நம்
மூளை நம்மைப்பற்றிச் சிந்திப்பதைவிட மற்றவர்களை மட்டம்தட்டத் திட்டம்போடும்போதுதான்
அதிகம் எனும் போது மகிழ்ச்சி எப்படி வரும்?
·
வீடு நிறைக்கும் பொருட்களால் ஆனந்தம்
வரப்போவதில்லை; பைநிறைக்கும் பணக்கட்டுகள் ஆனந்தம் தரப்போவதில்லை; நிறைவான மனமே
ஆனந்தத்தின் ஆபரணம்.
·
யாரிடமும் மரியதையை எதிர்பார்க்காதீர்கள்; நம்
கண்ணியமான செயல்பாடுகளால் அதுதானாக வரும் என்பதை மறவாதீர்கள்.
·
வெறுப்பு, புதுசெருப்பு மாதிரி கடித்துக்கொண்டே
இருக்கும் காலில் கிடந்தாலும்.யார் மீதும் வெறுப்பின்றி அன்பாயிருப்போம்.
·
உறவுகள் மகிழ்ச்சி வானில் பறக்க உதவும்
சிறகுகள்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களோடு உறவுகளைப் பேணுங்கள்.சொந்தமும்
பந்தமும் இறைவன் தந்தவரம் என்பதை மறவாதீர்கள்.
·
போதுமென்ற மனமே பொன்செய்யும்
மருந்து.பணத்திற்காக ஓடியோடி பிணமாய் அடங்குவதைவிட உள்ளதைக் கொண்டு நல்லதைச்
செய்வோமே! தலைக்கு மேலே பணமூட்டை இருந்தாலும் உண்பது நாழி உடுப்பவை இரண்டு
ஆடைதான்.
·
மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதர்களுக்கு
ஏமாற்றமே எப்போதும் மிஞ்சுகிறது. நல்ல மாற்றங்களை ஏற்றால் ஏற்றம் ஏற்படப்போவது
நிச்சயம்.
·
ஆயுள் முழுக்கக் கற்றுக்கொண்டே இருக்கவும்,
புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொண்டே இருப்பதும் வாழ்க்கை என்று உணருங்கள்.கிழித்து
எறியப்படும் கடந்தகால நாட்களுக்குப் பின்னர்தான் கற்றையாய் புதிர்தரு புதுநாட்கள்
காத்திருக்கின்றன.
·
கடந்துபோன ஆண்டின் காலண்டர் அட்டையில்தான்
முந்தைய தலைமுறை தேர்வெழுதியது. காலம் நம்மை வீணாக்காமல் கண்ணாய்
காக்கவேண்டுமென்றால் எதையும் வீணாக்காமல் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
·
செய்யும் வேலையை ஒழுங்குடனும் மகிழ்வாகவும்
நிறைவாகவும் செய்வதும் தியானம் என்று உணருங்கள்.
·
சினச்சொற்கள் சிராய்ப்பை உண்டாக்கி முகம்தெரியா
மனிதர்களோடும் வீண்பகையை உண்டாக்கிவிடும். எனவே கந்தகச் சொற்களைவிடுத்து
கனிவுதரும் கனிச்சொற்களைப் பேசுங்கள்.இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருக்கும் போது
காயைக் கவர்தல் போன்றது.
·
பற்றாக்குறைகள் குறித்துக் கவலை
வேண்டாம்,பற்றாக்குறைகளோடு தேசமே நேசம் கொள்கிறது.வரவின் உறவில் செலவை
மட்டுப்படுத்திவிட்டால் பற்றாக்குறைகளோடு பந்தம் தீர்ந்துவிடும்.
·
விட்டுக் கொடுப்பது முறிந்துவிழும் மரத்திற்கு
முட்டுக்கொடுப்பதைப் போன்றது.மனஸ்தாபத்திற்குப் பின் சமாதானத்திற்காக நீளும்
நட்புக்கரம் உங்களுடையதாக இருக்கட்டும்.
·
நிம்மதியான உறக்கம் மனஇறுக்கம் அறுக்கும்.இரவறுக்கும்
விழித்தல் வேண்டாம்; இணையதரிசனமாயினும் வாட்ஸ்அப் வலம் வருதலாயினும்
எல்லையோடிருத்தல் எல்லோருக்கும் நல்லது.
·
இனிமையான இசைகேளுங்கள்; நம் செவியில் நுழைந்து
மனதில் அலைந்து மனதை லேசாக்குவார்கள் கே.வி.மகாதேவனும், எம்.எஸ்.விஸ்வநாதனும்,
இளையராஜாவும்,ஏ.ஆர்.ரகுமானும்.
·
பழி வாங்கத் துடிப்பது நமக்கு நாமே குழிதோண்டத்
துடிப்பது.
·
ஆயுள் முழுக்க வயிற்றுக்கு உருண்டு உருண்டு
உழைத்தாலும் தினமும் ஒருமணிநேரமாவது மனதிற்காகச் செலவிடுங்கள். வானொலி கேளுங்கள்,புத்தகம்
படியுங்கள்,சொற்பொழிவு கேளுங்கள், சிற்பம் பாருங்கள்,பாயிரம் பாடுங்கள்,சிரிக்கப்
பேசுங்கள்,பறவை காணுங்கள், பறப்பதாய் உணருங்கள்.
·
அவநம்பிக்கை கொள்வது அன்றே மரணத்திற்குத்
தயாராவதைப் போன்றது என உணருங்கள்.முனைப்புடன் முயல்வோம்,வென்றால் தொடர்ந்து
நிற்போம்,இல்லையேல் வெல்லும் வரை கற்போம்.
·
அனுபவத்தொட்டிகளின் முயற்சிச்
செடிகளில்தான் சாதனைப்பூக்கள் சட்டென்று
மலர்கின்றன. “ஊக்கமது கைவிடேல்” என்கிறது ஆத்திசூடி.
·
“ஔவியம் பேசேல்” என்கிறார் அவ்வை.பொறாமையோடு
பேசுவது நம்மை அழித்துவிடும்;பொறா ஆமை நமக்குள் புகவேண்டாம்.
·
பருவத்தே பயிர் செய்யாமல் காலத்தைக் கடிந்து
பயனில்லை.
·
பொய்ச் சொற்களை மெய்ச்சொற்கள் போல்
பேசாதிருப்போம்.
·
செடிகளோடு சிநேகம் பாராட்டித் தண்ணீர் விடுவதும்
தவமே!
·
சொற்களின் சிக்கனம் உங்களைப் புற்களாய் மாற்றிப்
பனிதாங்கும்படியாக எளிமையாய் மாற்றும்.தேவையற்ற சொற்கள் நோவை உண்டாக்கும்.
·
மனம் விட்டுப் பேசும்போது ரணம்விட்டுப்
போய்விடும்.உங்கள் துன்பஅனுபவங்களைச் செவியேற்கும் சோடிக் காதுகளையாவது
நண்பர்களாய் வைத்துக் கொள்ளுங்கள்.
·
செய்வன திருந்தச் செய்யுங்கள்.
·
பழி போடும் குழியாக மாறாதிருங்கள்.
·
தேடலோடு தெருவிறங்குங்கள், வியப்பைத் தேக்கிய
விழிகளில்தான் விந்தைக் காட்சிகள் விரைவாய் தெரியும்.
·
எல்லா மனிதர்களையும் வேலைகளாகவே
பார்க்காதீர்கள். நட்பு பாராட்டவும் நான்குபேர் வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
·
எப்போதும் தராசுத் தட்டுகளோடு அலையாதீர்கள்.
எல்லோரையும் எடைபோட நாமொன்றும் நடமாடும் எடைமேடைகளில்லை என்பதை உணருங்கள்.முழுமையான
மனிதர்களோடு மட்டும்தான் முகநக நட்பு என்றால் தனித்தீவாக இருட்டறையில்
இருக்கவேண்டியதுதான்.
·
தன் முனைப்பு நம்மைத் தவிப்புக்குள்ளாக்கும்
என்பதை உணர்ந்து சிறுகுழந்தைகள் போல் சிரித்துக் களித்திருப்போம்.
·
மற்றவர் கருத்திற்கு அளவுக்கதிமாக
மதிப்புத்தந்து நம்மை நாம் வருத்திக்கொள்ள வேண்டியதில்லை.அப்படியே புறந்தள்ள
வேண்டியதில்லை.ஏற்புடியதை ஏற்பதில் தவறில்லை.
·
நம் எல்லைகள் அறிந்தால் நமக்குத் தொல்லைகள்
இல்லை. எல்லோருக்கும் நல்லவராக நடித்துத் தோற்பதைவிட இயல்பாய் இருந்து எப்போதாவது
வெல்வது ஏற்புடையதுதான்.
·
ஓய்வு என்பது வேறுவேலைக்கு மாறிக்கொள்வது என்பதை
உணருங்கள். உங்கள் உலகின் உன்னதம் உணருங்கள்.உங்கள் வாழ்வை உங்கள் மொழியில்
சொல்லுங்கள்.
·
இல்லாத ஆற்றலை இருப்பதாய் வேடம்போடதீர்கள். ஒப்பனைகள்
கலைந்தால் உள்ளதை ஊரறியும் என்று நம்புங்கள்.
·
அடுத்தவர் நம்பிக்கைகளை எள்ளிநகையாடாதீர்கள்.நம்
நம்பிக்கையை நகையாட நாலுபேர் காத்திருக்கலாம்.
·
பூவசரம்பூ பீப்பி,நுங்கு வண்டி,பசலிப்பழ
நகப்பூச்சு,திருவிழாத் துட்டு,ராட்டினச் சுற்று,சௌ மிட்டாய்
கைக்கடிகாரம்,மரப்பாச்சி பொம்மை,செப்புச் சாமான் விளையாட்டு, பாண்டியாட்டம்,
பம்பரஆக்கர்,பாட்டுப் புத்தகம்,கோலிக்காய் விளையாட்டு போன்ற சின்னஞ்சிறு
மகிழ்வலைகள் ஆயிரமாயிரம் உண்டு நம்மிடம்.ஆனால் அத்தனை மகிழ்ச்சியையும்
தொலைக்காட்சிப்பெட்டி தின்று செரித்து நின்று சிரித்துக் கொண்டிருக்கிறதே..பார்க்கும்
நேரம் குறைத்து குடும்பத்தாருடன் பேசும்நேரம் அதிகரித்துப் பாருங்கள்..சீரியல்
ஓடாமலேயே ஆனந்தம் ஆறாக ஓடும் நம் இல்லத்திலும் நம் உள்ளத்திலும்.
·
இந்த உலகம் ஆனந்தஆலயம்; அதில் வசிக்க வந்த நாம்
அதை ஒருபோதும் ரசிப்பதில்லை.
ஆனந்த அமுதத்தைப் புசித்ததில்லை.குறை காண்பதற்கே நம்
குறைவான வாழ்நாட்களைச் செலவழித்துவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது வெறுமை ஒன்றே
அருமையாகத் தெரிகிறது.
·
தாயின்
கதககதப்பான சூட்டில் நிம்மதியாகக் கண்ணயர்ந்து தூங்கிய குழந்தைகளாய் நம் வாழ்வைத்
தொடங்கிய நாம், வளரவளரச் சக்கரங்கள் மாட்டிய சக்கரவர்த்திகளாய் மாறியது
காலச்சோகம்.
·
காசுக்காகவும் வயிற்றுப் பிழைப்பிற்காகவும்
ஓடத்தொடங்கி, ஓடலை நிறுத்தி வாழப் பார்க்கும்போது வாழ்க்கை முடியஇருக்கும்
முன்னறிவிப்பு வருவது எத்தனைத் துயரமானது. எல்லோரையும் திருப்திப்படுத்திவிட்டு
நமக்காக நாம் வாழத்தொடங்கும்போது நம்மைவிட்டு எல்லாம் தொலைதூரம் போய்விட்ட காட்சியைக்
காண்பது எத்தனைத் துயரமானது.
·
ஆனந்தநிமிடங்களை ஆராதிப்போம் அன்றன்றே. அட்டையை
உரசியவுடன் எந்திரத்திலிருந்து வருவதற்கு ஆனந்தம் ஒன்றும் புன்னகை பூதமல்ல. அது
நம் மனதில் உள்ளது,மலராய் உள்ளது,உள்ளத்தில் உள்ளது,உள்ளுக்குள் உள்ளது.இந்த
நிமிடத்திலிருந்து நமக்காக வாழத்தொடங்குவோம் ஆனந்தமாக.
Comments
Post a Comment