இளையோர் தன்னம்பிக்கைக் கட்டுரை ;பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
இமயம் ஏறலாம் வா இளைஞனே!
பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி
mahabarati1974@gmil.com, 9952140275
* இந்தியாவின் இளையதூண்கள் இளைஞர்கள், சாதனை
எனும் சொல்லின் நிகழ்கால நிஜங்கள் இளைஞர்கள். வெந்நீர் நிரப்பிய தவலைப் பானை
மாதிரி கவலைப் பானையில் கண்ணீர் நிரப்பித் திரியும் பழக்கம் இளைஞர்களுக்கு இல்லை.
துள்ளித்திரியும் கவலையற்ற காளைகள் அவர்கள். விழியுமில்லை ஒளியுமில்லை ஆனாலும்
இருட்டிலும் இயங்குகிறதே வவ்வால்! நினைத்ததை முடித்துக்காட்டும் வல்லமை
அவர்களுக்கு உண்டு. ஒரு பறவையின் பரந்துபட்ட ஆகாயத்தைப் போல் விரிந்து கிடக்கும்
விரிவானில் வலம்வரும் பட்டாம் பூச்சிகள் அவர்கள்.
இயக்கத்தின் அடையாளம் இளைஞர்கள்
.
* நினைவு என்னும் நெடுவனத்தில் மலர்களும்
இருக்கும் மலைப்பாம்புகளும் இருக்கும், தடைகளை இன்முகத்துடன் ஏற்றுத் தாண்ட முயன்ற
இளைஞர்களையே வரலாறு வரவில் வைத்திருக்கிறது. சிகாகோ மாநகருக்குச் சென்று “சகோதர
சகோதரிகளே!” என்ற இரட்டைச் சொற்களால்
இந்தியப் பண்பாட்டின் உன்னதத்தை உலகிற்கு உரக்கச் சொல்லி, இந்தியா பற்றிச்
சிந்தியாதவர்களையும் தன்னைச் சந்திக்க வைத்துவிட்டுக் கப்பலேறிய கம்பீரமான இளைஞர்
சுவாமி விவேகானந்தரின் விந்தை சாதாரணமனதா?
* சாதாரண தோல்விகளுக்கும் சதாரணமாகிப் புலம்பும்
இளையோர் கூட்டமாக இளைய சமுதயத்தை ஏன் சொல்லவேண்டும்? சுதந்திரப்போரின்
தீயாகதீபங்களைக் கொடூரமாய் துன்புறுத்திக் கொடுமைப்படுத்திய ஆஷ் எனும் ஆங்கிலேய
அதிகாரியை, மணியாச்சி ரயில்நிலையத்தில் துணிச்சலாய் சுட்டுக்கொன்றுத் தன்
இன்னுயிரையும் தந்த வீர்வாஞ்சிநாதன் எனும் இளைஞர் அநீதியை அழித்த அக்கினிக்
குஞ்சாயிற்றே!
* சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாக விளங்கிய சகோதரி நிவேதிதா, பாரதி எனும்
இளைஞரின் உள்ளுக்குள் ஒளிந்திருந்த அக்கினிக் குஞ்சைச் சொற்களால் கூர்தீட்டிச்
சாதனைவானில் சிறகடிக்க வைத்த இளையதீபம். 1905 இல் பாரதி,சகோதரி நிவேதிதாவைச்
சந்தித்தான். “பாரதத் தாய் உன் கண் எதிரே கையில் விலங்கோடு நிற்க, நீ
உடைத்தெரியாமல் நிற்கலாமா பாரதி!” என்று சினத்தோடு அவர் வினவ 23 வயதேயான இளையபாரதி
சிலிர்த்தெழுந்தான்; ”சொல்லுக்கடங்காவே பராசக்தி, சூரத்தனங்களெல்லாம் வல்லமை
தந்திடுவாள் பராசக்தி வாழியென்றே துதிப்போம்” என்று தேசம் காக்கத் தெய்வத்திடம்
பாரதி வல்லமை வேண்டினான். பாரதிக்கு சகோதரி நிவேதிதா மகத்தான இளைய சக்தியாகப்
புலப்பட்டார். பிரகாசமான முகத்தோடு உறுதியோடு பேசிய சகோதரி நிவேதிதாவிடம்
பேசியபின் பாரதியின் தன்னம்பிக்கை இன்னும் கூடியது.சகோதரி நிவேதிதாவைச் சந்தித்து
உபதேசம் பெற்ற நிகழ்வையும், அவரிடம் பெற்ற ஞானதீட்சையைத் தன் இறுதிக்காலம்
வரையிலும் சக்தியாய் பாரதி மனதில் தேக்கிவைத்திருந்தார். ஒருதீபம் இன்னொருதீபத்தை ஏற்றிவைத்து அடையாளம்
காட்டிய விந்தை அன்று நிகழ்ந்தது.
* எண்களைக் கண்களாய் கருதி, எண்கோட்பாடுகளையும்
செறிவெண் கோட்பாடுகளையும் உலகின் பார்வைக்குக் கொண்டுசென்ற ஒப்பற்ற இளைய கணிதவியல்
சாதனையாளர் சீனிவாச ராமானுஜம் என்ற இந்த உலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள்தான்.
வாழ்கிற வருடங்களுக்கும் சாதித்தலுக்கும் சம்பந்தமில்லை என்று சப்தமாய் சொல்லிச்
சாதிக்கிறவர்கள் இளைஞர்கள்.
* வாழ்வை அறுத்தெறியும் வாளல்ல வாழ்வு.நெஞ்சம்
நினைத்தால் பஞ்சுபோல் லேசாகி வானையும் எட்டலாம்! சாதனை வானிலும் பறக்கலாம் என்று
காட்டிய அந்த இளம்சாதனையாளர் நம்மை வியக்க வைக்கிறார்; உள்ளிருந்து
இயக்கவைக்கிறார் “ எங்களால் சாதனை செய்து சிறக்கவும் முடியும், இளம் வயதில்
கேப்டனாய் பறக்கவும் முடியும்” என்று 16 வயதில் விமானம் ஓட்டும் பயிற்சியைத்
தொடங்கி, 18 வயதில் விமான ஓட்டியாய்
உரிமம் பெற்று, 21 வயதில் இளைய கமாண்டராய் பொறுப்பேற்று 2100 மணிநேரம் விமானம்
ஓட்டி, லிம்கா சாதனையாளர் பட்டியலில் “உலகின் இளம்விமானக் கேப்டன்” எனும்
சிறப்பினைப் பெற்ற சாதனைப் பெண்மணி பவிகா பாரதி இளைஞர்களின் முன்னேற்ற முன்மாதிரி.
* ஆம் ! எழுதாத பேனாவை எவர்தான் பையில்
வைத்திருப்பார் ? ஆறிப்போன தேநீரை யார்தான் விரும்புவார் ? சூடுதான்
தீர்மானிக்கிறது உயிர்மையின் உன்னதத்தை இயங்கிக்கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தையே
உலகம் உள்ளபடி விரும்புகிறது. வியர்வை சிந்தாமல் விந்தை இல்லை.
* தடையாளக்
கற்றுக்கொள்வதுதான் வெற்றியின் முதல்படி.முருங்கையை முறிக்க ஒருகை போதும்,ஆனால்
தேக்கை முறிக்கப் பலகரங்கள் வேண்டும். ஒற்றுமையின் அடையாளம் இளைய சமுதாயம்.
* சிக்குப்பட்ட நூல்கண்டே நம்மைச் சிரமப்படுத்துகிறது,
சிக்கலில் தவிக்கும் மனமே நம்மைக் கலவரப்படுத்துகிறது. இளைத்துப் போவதோ,தோல்வி
கண்டு களைத்துப் போவதோ இளைய சமுதாயத்தின் பண்புகள் இல்லை.
* வழுக்கிவிழாமல் வாழ்க்கை இல்லை,விழுந்து
எழாதவன் வீரனுமில்லை என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். தேக்கிலை போல் பரந்துவிரிந்திருக்கிறது
இந்த வாழ்வெனும் பூங்காவனம்.அதில் மலர்ந்து விரியும் வாசமலர்கள், நிகழ்காலத்தின்
பாசமலர்கள் அவர்கள்.
* அன்பு இளைய சமுதாயமே! நீங்கள் காலத்திற்காக
காத்திருக்க வேண்டாம்,சில நேரங்களில் சிலருக்கு; அவர்கள்காலமான பின்தான் காலமே
வருகிறது. காலத்தைவிஞ்சி நாம்செய்யும் செயல்களே நம்மைப் பலகாலம் கடந்தும்
வாழவைக்கிறது.
* இந்தச் சமுதாயம் சில கணங்களில் உங்களை
ஓரங்கட்டுவதற்காக நீங்கள் துயரப்பட வேண்டியதில்லை. கலங்கரை விளக்குகள்
கரையோரமாகத்தானிருக்கும். மைல்கற்கள் நாம் கடக்கவேண்டிய தூரத்தை அமைதியாய்
தெரிவித்தபடி சாலையோரமாகத்தான் இருக்கும். காலத்தைவிட வேகமாய்
இயங்குகிறவனை,மூச்சுப் பிடித்து முன்னேறுகிறவனின் முயற்சியை யாராலும்
முறித்துப்போட்டுவிட முடியாது.
* வளையோர் சூடார்,இளையோர் தேடார் ஆனாலும்
எழுச்சியோடு பூக்கவில்லையா எருக்கம் பூக்கள்? முள்ளுக்கு அருகிலும் முனைப்போடு
பூத்திருக்கும் ரோஜாக்கள் மாதிரிச் சவால்களுக்கு மத்தியிலும் சந்தோசமாய்
பூத்துக்குலுங்குங்கள்.
* வாழ்வின் யதார்தத்தைக் ஏற்றுக்கொள்ளுங்கள்,
தோல்விகளையும் இன்முகத்தோடு பெற்றுக்கொள்ளுங்கள்.வருத்தப்படுவதற்காகவோ தோல்வியின்
வாசலில் நிறுத்தப்படுவதற்காகவோ நீங்கள் பிறக்கவில்லை என்பதை உணருங்கள்.
* அண்டவிடாதிருங்கள் அவநம்பிக்கை எனும்
காலக்கரையானை.. அனுமதித்தால் அரித்துவிடும் அனைத்தையும் அடியோடு. சிந்தித்துப்பாருங்கள் நம்மை நிந்தித்தவர்களும்
நிச்சயம் நம்மை இயங்கத்தூண்டி நமக்கு
நல்லது செய்தவர்கள்தான். ஆகவே எதிரிகள் குறித்து எரிச்சலடையவேண்டியதில்லை.
* *உயரத்தூண்களே நீங்கள் துயரத்தூண்களாக
ஒருநாளும் மாறவேண்டாம்! விருப்பதோடு
செய்யும் செயல்களே நம் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் திசைகளைத்
தீர்மானியுங்கள் வானம் வசப்படும்.
நெருப்பை உள்வாங்கும் வைக்கோற்போர் நெடுநேரம்
எரிகிற மாதிரி வெறுப்பை உள்வாங்கும் மனம் வெந்துதணியும் அனல்வனமாகிறது.
யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டு ரத்தம் தேவைப்படும் போது இளையோர் உலகம்தான்
இன்றும் எந்தப்பேதமும் பாராமல் ரத்ததானம் செய்துவருகிறது.மனிதநேயத்தின் வாழும்
சான்றுகளாக இளையபாரதம் திகழ்வது எத்தனை அற்புதமானது! ஆகவே! இனி திட்டாதீர்கள்
அந்தத் தீர்க்கத்தரிசிகளை.அவர்களுக்கு வாய்ப்புகள் தந்து
ஊக்கப்படுத்துங்கள்..காரணம் அவர்கள் உன்னதமானவர்கள்.
Comments
Post a Comment