தர்ம யுத்தம்



பிரசவத்திற்கு இலவசமென்று
பிரகடனம் செய்த ஆட்டோக்கள்
பின்னிணைப்பாய்
(அரசு மருத்துவமனைக்கு மட்டும்) என்று
அடைப்புக்குறிக்குள் போட்டு
வெகுநாட்களாயிற்று

ஆற்றுப் படுகைகளில்
ஆர். ஓ. இயந்திரங்கள் வைக்கப்பட்டுப்
பிரபஞ்சப் பெருவெள்ளம்
புட்டிக்குள் சுருக்கப்பட்டபின்
தண்ணீரையும் காணோம்..
தண்ணீர்ப் பானை வைக்கப்
பந்தலையும் காணோம்.

சத்திரங்களின் உத்திரங்களில்தான்
பழக்கடைகளின் பழக்குலைகளே
தொங்குகின்றன.

கண்வலிக்கே கருணையோடு
தரப்பட்ட தாய்ப்பால்கள் - இன்று
பெற்ற சிசுக்களுக்கே
பெரும்பாலும் மறுக்கப்படுகின்றன.

அறக்கட்டளைகள்
அறக் கடைகளாய்
அர்த்தம் மாற்றப்பட்டபின்னும்
தர்மத்தைப் பற்றித் தாராளமாய் பேசும்
தர்மபுத்திரர்கள் நாம்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை