யாரால் சொல்ல முடியும்?




ஈனஞ்சாமியின் சந்தன நெற்றியில்
ஒட்டித் தருமாறு சரகக்கா தந்த
நாலணாத் துட்டைச் செல்லாதென
யாரால் சொல்ல முடியும்?

நெல்லையப்பர் தேரோட்டத்தன்று
தேங்காய் மிட்டாய் வாங்கிச் சாப்பிடென்று
அப்பத்தா தந்த நாலணாத் துட்டை
செல்லாதென யார் சொல்ல முடியும்?

நிறைசூலியாகத் துள்ளத் துடிக்க இறந்துபோய்
வெள்ளக்கோயில் மயானத்தில்
எரியூட்டும் முன் லோகா மதினியின்
கையில் வைத்துப் பலதாம்பூலமாய் தந்த
நாலணாத்துட்டைச்
செல்லாதென யாரால் சொல்லமுடியும்?

ரிசர்வ் வங்கியின்
பொருளாதார மதிப்பையும் கடந்து
மனிதர்களோடு விலை மதிப்பே இல்லாத
எத்தனையோ
நாலணாக்கள் உயர்திணையாகவே
உள்ளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

எனவே
நாலணா செல்லாதென்று
நல்ல நாவால் யாரும் சொல்லற்க

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை