நாக பயம்....




ஆதிபயத்தின் அடியொற்றல்களாய்
பாம்புகளைப் பற்றிய பயம் இன்னுமின்னும்...
         
வீட்டுக்குள் வந்து படமெடுத்த நாகராஜனைக்
கழியால் அடித்துக் கொல்வதைத்தவிர
வேறென்ன செய்ய முடியும்?
சர்ப்ப தோஷமாய் என் சாதகக் கட்டமேறி
குலமறுக்க நிற்கிறதாம்

வீட்டு நிலையில் கூட நாகர் செதுக்கி
நாளும் அர்ச்சித்தாகி விட்டது
அழகு நாச்சியம்மன் கோவில் நாகருக்கு
பால் வார்த்து முட்டை வைத்தாகிவிட்டது
சங்கரன் கோவில் போய்
காளஹாஸ்தி போய் வெள்ளி நாகர் வாங்கி
உண்டியலில் போட்டாகி விட்டது.
ஏதும் பயனற்றுப் போனது
படுக்கையின் பக்கத்தில்
மனதின் மையத்தில்
தலையணைக்கு மேல்
ஐந்து தலைதூக்கிப் படமெடுத்து நிற்கிறது
         
ஒரு வேளை அதன் புற்றை
புல்டோசரால் உடைத்து
கட்டிடம் கட்டிய கோபம்
அதன் அடி மனதில் ஆறாமலிருக்கலாம்.

ஆதி மனிதனின்
பாதி உருவாயிற்றே அது.
கொத்தாமலிருக்கும் வரை
வணங்க வேண்டியதுதான்
ஆதித் தெய்வமாக....


                                                                           முனைவர். ச. மகாதேவன்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை