Posts

Showing posts from April, 2014

தனி யொருவனுக்கு உணவிலை பாரதி!

Image
பழுக்கக் காய்ச்சிய அரிவாளைச் சுத்தியலால் அடித்துத் தண்ணீரில் முக்கும்போது ஒரு சத்தம் வருமே. அடிவயிற்றில் அதே சத்தத்தோடு பசியைப் பற்றியபடி குப்பைத் தொட்டியருகே அவன் குந்தியிருக்கிறான்... தெருநாயின் பார்வையிலும் போட்டியாளனாய் மகாராஜநகர் திருமண மண்டபத்திற்கு இடப்பக்கமுள்ள தண்டவாளக் குப்பைத் தொட்டிக்கு அவன் பிள்ளைகளும் பிச்சைக்குப் போயிருக்கின்றன வெகுநேரமாய் காத்துக்கிடந்தும் ஓர் இலைகூட வெளியே வீசப்படவில்லை இனி எச்சில் இலையும் வெளியே வராதாம். அதையும் ஒருவன் கான்ட்ராக்ட் எடுத்துள்ளானாம். இப்போது பசியின் பந்தியில் பாவம் அவனும் அவன் பிள்ளைகளும்

நிலாத்தாலாட்டு

Image
குட்டி நிலாவை முதன் முதலாய் பள்ளத்தில் பார்த்தது புதுப்பட்டிக் காமாட்சிப் பாட்டி வீட்டுக் கேணியில்தான் கோடை விடுமுறைக்கு எப்போது சென்றாலும் படிகளில் ஏறிக் கேணிக்குள் முகம் பார்த்தபின்தான் சாப்பாடு கீப்பாடு எல்லாமே! ஊரணிக் கருகே இருந்ததால் வற்றிப் போக வாய்ப்பற்று ஊறியது தங்கை தவறவிட்ட வாளியிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துத் தரும் பாதாளக் கரண்டியை அதிசயத்தோடு முதலில் கண்டதும் அங்கேதான் ஐந்து வயதில் கேணிக்குள் விழுந்த அம்மாவை இடுப்புக் கயிறுகட்டி உள்ளிறங்கித் தூக்கிவந்த மருதையாத்தாத்தா முதல் எத்தனையோ மனிதர்களின் வரலாறுகளை ஊற்றுக்குள் ஒழித்துவைத்திருந்தது அக்கேணி கட்டியவனின் குத்துச் சொல் தாளாமல் அதே கேணிக்குள் செத்து மிதந்த ஆனந்தி அக்காவின் சடலத்தைப் பார்த்தபின் கேணிக் குளியலும் , நிலா ரசித்தலும் நின்று போனது. ஆனாலும் கவலைகள் ஏதுமற்று நிலவுக்கு நிலத்தாலாட்டு நடத்திக் கொண்டிருக்கிறதுஅக் கேணி.