Posts

Showing posts from June, 2014

உடைந்துபோன உரையாடல் .....சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

Image
வராதவரின் வருகையின்மை குறித்தே தொடங்கியது வந்த என்னிடம் தொடங்கிய முதல் பேச்சும் கூட. தேநீர் வருவதற்குள் அறையைப் படம்பிடிக்கின்றன வண்ணத்துப்பூச்சியாய் படபடக்கும் கண்கள். தொலைபேசி அழைக்கிறது பலமுறை. மெதுவாய் பிஸ்கட் உண்டு,மாம்பழத்துண்டுகள் புசித்து வாசலில் குதித்த பூனை பார்த்து நான் மனதாரப் பேசத்தொடங்குவதற்குள் மணியாகிவிட்டது மணியாச்சியில் முத்துநகர் பிடிக்கவேண்டும் என்றார். பேசநினைத்த சொற்கள் பெருங்குரல் எடுத்தழுதபடி புறவாசல் வழியே போய்க்கொண்டிருந்தது.

பயணம்

Image
மறுப்பதற்கில்லை என்றாலும் ஏற்பதற்கில்லை என்ற மனநிலையோடுதான் எதிர்கொள்கிறோம் தனியே பயணிக்க நினைக்கும் கணத்தில் யாரேனும் கூட வரும்போது.

நாவறியா நிகழ்வுகள் ...சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.

Image
மின்சாரமற்றுப்போன நள்ளிரவில் தீப்பெட்டிதேடப்போய் தெரியாமல் சுவரில் முட்டிக்கொள்வதைப்போல பேசிமுடித்தபின் நாக்கடித்துக்கொள்கிறேன் பின்னணி தெரியாமல் இயல்பாகப் பேசிவிட்ட சில வாக்கியங்களுக்காக. குழந்தை குறித்துக் கேட்டதும் சாலைக்குமாரசுவாமி கோவில் வாசலில் கதறிஅழுத அந்தச் சகோதரி முகம் இன்னும் கண்ணீரோடு கண்களில்.. இப்போதெல்லாம் பெருஞ்சொற்கள் அடுக்கிப்பேசுவதைவிடச் சிறுபுன்னகையோடு நிறுத்திக்கொள்கிறேன். நாவுக்குத் தெரியுமா முந்தைய வினாடியில்   நடந்த முன்சோக நிகழ்வுகளின் கொடுங்கதைகள்.

சிறை ...........சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

Image
தொட்டிமீன்களைப்பார்ப்பதில் அவருக்கு அப்படி ஒருமகிழ்ச்சி. அலையும் இல்லாத குட்டிக்கடலில் அலையும் அதன் கலையைப் பார்ப்பதை அவர் தியானமென்று சொல்லியிருக்கிறார் ஒருவருமற்ற ஒரு தனிமைப்பொழுதில். தொட்டிக்குள் வாழ்ந்தாலும் துயரமேதுமற்று இயங்கிக்கொண்டேயிருக்கும் அதன் இனிமையைப்பார் என்றார் பிறிதொருநாளில். என் கவனம்   அதன் இயக்கம் பற்றியோ பொன்நிறமேனி பற்றியோ அல்லாமல் அதன் கண்ணாடிச்சிறை குறித்தே என் கவலை அமைந்தது.