Posts

Showing posts from May, 2014

தொலைதல்

Image
பெருநகரங்கள் எங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றன தலைக் கவசம் அணிந்து தலைதெறிக்க வண்டியில் பறக்கும் எங்களுக்கு முகங்கள் முக்கியமில்லை . மின்சாரத் தொடர் வண்டிகளில் விபத்தில் சிக்கி முகம் சிதைந்து கிடக்கிற   சவத்தின் முன்கூடச் சாவகாசமாய் சாக்லேட் சாப்பிட முடிகிறது ரசித்தலுக்கு நேரமற்றுப் போனதால் சன்னல்கள் எங்களுக்கு அவசியமில்லை நிலைய நிறுத்தங்களுக்காக வாயில்களுக்கருகேதான் காத்துக் கிடக்கிறோம். சக மனிதர்களின் அபய ஓலங்கள் எங்கள் செவியுள் நுழையாதிருக்க கருவியை மாட்டிக் காதுகளில் இசையை இறுத்திக் கொள்கிறோம். பக்கத்து இருக்கை நண்பர்களைவிட முகப்புத்தக அன்பர்களே எங்களுக்கு முக்கியம் அவர்கள்தான் கைமாத்து கேட்க வரப்போவதில்லை அன்னையர் தினத்திற்கு மறவாமல் மின்னஞ்சலில் வாழ்த்தனுப்புகிறோம் தவித்த வாய்க்குப் பெப்சியும் பசியெடுத்தால் பீசாவும் , போட்டுக்கொள்ள அரை டஜன் அரை டிரவுசர்களும் தயார் போதாதா பெருநகரத்தில் வாழ ? சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

இரு இயல்பாய்

மனைவி மறந்து விட்டாலும் துணிக்கடைக் கணிப் பொறிகளின் தகவல் தளங்கள் தவறாமல் பிறந்த நாள் வாழ்த்தட்டைகளைத் தகுந்த நேரத்தில் தட்டிவிடுகின்றன.            அன்பையும் வணிக விளம்பரமாக்க           அவர்கள் அழகாகத் தெரிந்திருக்கிறார்கள். உடன் பணியாற்றுகிறவன் என் பிறந்தநாளை மனதில் வைத்தே இயங்குகிறான் அவனது பதவி உயர்வுக்காய் எனக்கு நானே விளம்பரம் தந்து வரவேற்க இன்னும் அரசியல் பக்கம் போகவில்லை நானே கேக் வெட்டி நானே சாப்பிட வேண்டிய சராசரி மனிதன் நான் உடைந்த வளையல் துண்டுகளாலும் வர்ணஜாலத்தை உண்டாக்கக் கலைடாஸ்கோப்புகளால் மட்டுமே முடியும் நாம் சாதாரணமாகவே இயல்பாகவே இருந்துவிட்டுப் போகலாமே !