Posts

Showing posts from September, 2013

எப்போதும்எந்திரமே

Image
எந்திரத்திற்கும் எனக்குமான தொடர்பில் எப்போதும்எந்திரமே என்னை ஆளமுயல்கிறது மூளையின் இருப்பு பன்மடங்குபெருகிய   நினைவுச்சில்லாகப் படுகிறது இப்போது எனக்கு. அத்திரிப்பட்சா கொழுக்கட்டையை நினைவுபடுத்துவதாய் அமைகின்றன சில நேரங்களில் என்செயல்களும். எந்திரத்திற்கும் எனக்குமான உரையாடல் ஏற்கனவே நிரல்படுத்தப்பட்டபடியே நடக்கின்றன. அவை பெரும்பாலும்   கொள்குறிவினாக்களாகவே அமைகின்றன. அங்கே புனைவுகளுக்கு இடமில்லை புரிதல்களுக்கு வழியில்லை. எதையோ தேடப்போய் எங்கோ கொண்டுவிடும் தேடுபொறிகளாய் என்மனமும் இப்போது எந்திரத்திரமாய்.. சௌந்தரமகாதேவன் திருநெல்வேலி

பதிவுக்காய்...

Image
பௌர்ணமி நடுநிசியில் தற்கொலை செய்து கொண்ட சின்னஞ்சிறு பெண்ணாய் அலையலையாக அக் கேணியில் மிதக்கிறது அந்த வெள்ளை நிலா தூரத்தில் குழு விலங்குகளால் சிதைக்கப்பட்ட பெண்ணின் கேவல் எல்லாம் முடிந்தபின் கூர்க்கா சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான் விசில் ஊதியபடி தான் வந்து சென்றதைத் தெரிவிப்பதற்காக உயிருக்குப் போராடுபவனைச் சென்று பார்ப்பது முதல் அவனது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வது வரை வருகைப் பதிவு தருவதும் தலைகாட்டித் தெரிவதும் எந்திரமயமாய் எல்லோரும் செய்கிறோம் என்று தணியும் இந்த வருகைப் பதிவுத்தலைகாட்டல்கள் ?

தொலைதல்

Image
பெருநகரங்கள் எங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றன தலைக் கவசம் அணிந்து தலைதெறிக்க வண்டியில் பறக்கும் எங்களுக்கு முகங்கள் முக்கியமில்லை . மின்சாரத் தொடர் வண்டிகளில் விபத்தில் சிக்கி முகம் சிதைந்து கிடக்கிற சவத்தின் முன்கூடச் சாவகாசமாய் சாக்லேட் சாப்பிட முடிகிறது ரசித்தலுக்கு நேரமற்றுப் போனதால் சன்னல்கள் எங்களுக்கு அவசியமில்லை நிலைய நிறுத்தங்களுக்காக வாயில்களுக்கருகேதான் காத்துக் கிடக்கிறோம். சக மனிதர்களின் அபய ஓலங்கள் எங்கள் செவியுள் நுழையாதிருக்க கருவியை மாட்டிக் காதுகளில் இசையை இறுத்திக் கொள்கிறோம். பக்கத்து இருக்கை நண்பர்களைவிட முகப்புத்தக அன்பர்களே எங்களுக்கு முக்கியம் அவர்கள்தான் கைமாத்து கேட்க வரப்போவதில்லை அன்னையர் தினத்திற்கு மறவாமல் மின்னஞ்சலில் வாழ்த்தனுப்புகிறோம் தவித்த வாய்க்குப் பெப்சியும் பசியெடுத்தால் பீசாவும் , போட்டுக்கொள்ள அரை டஜன் அரை டிரவுசர்களும் தயார் போதாதா பெருநகரத்தில் வாழ ?