சனவரி 29 முதல் பெப்ரவரி 1 (2015) : மலேசியாவில் நடைபெறும் ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சில எதிர்பார்ப்புகள் :



 

முனைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275
mahabarathi1974@gmail.com

ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்குத் தயாராகிறது மலேசியா. அரசியலுக்கு அப்பால், உண்மையான தமிழ்வளர்ச்சி என்ற நோக்கோடு புலம்கடந்து நடத்தப்படும் ஆராய்ச்சி மாநாட்டில் என்ன நடக்கப்போகிறது? என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பெருமுயற்சியால் முதலாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடத்தப்பட்டது. இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது. 1970 ஆம் ஆண்டு பாரிஸ் ( பிரான்ஸ்),1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் (இலங்கை),1981 ஆம் ஆண்டு மதுரை (தமிழ்நாடு),1987 ஆம் ஆண்டு கோலாலம்பூர் (மலேசியா),1989 ஆம் ஆண்டு மொரிசியஸ், 1995 ஆம் ஆண்டு தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இந்த ஆண்டு சனவரி 29 முதல் பெப்ரவரி 1 (2015) வரை நான்கு நாட்கள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறஉள்ளது. மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் கலை மற்றும் சமூகவியல் புலம் இந்த ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்துகிறது.

மாநாட்டுக் கருப்பொருள்
கண்டங்களைக் கடந்து உலகெங்கும் வேர்பரப்பிக் கொண்டிருக்கும் தமிழின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு நடத்தப்படும் உலகத்தமிழ் மாநாட்டின் கருப்பொருள் “உலகமயக் காலக்கட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்” என்பதாக அமைகிறது. தமிழ்மொழி, பண்பாடு, கலை, இலக்கணம், இலக்கியம், கலாச்சாரம், மானுடவியல், சமயம்,உளவியல்,சமூகவியல், இணையம்,  அறிவியல்தமிழ்,  கல்வெட்டு, சுவடியியல்,  மொழியியல், மொழிபெயர்ப்பு, கவின்கலைகள், நாட்டார்வழக்காற்றியல்,  ஒப்பிலக்கியம்,  தொல்லியல்,  இலக்கியத்திறனாய்வு,  ஊடகவியல், அகராதியியல், தத்துவம், தமிழ் பயிற்றுவித்தல்,  தமிழ்மருத்துவம், தமிழிசை, சூழியல், தமிழ்க் கட்டடவியல், போன்றவற்றில் கவனம் செலுத்தும் வகையில் உலகமயக் காலக்கட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல் எனும் பொதுப்பொருளில் ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படுகிறது. ஆசிய நாடுகளிலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான தமிழ்எழுத்தாளர்கள், பேராசிரியர்கள்,தமிழ்ஆர்வலர்கள் கலந்துகொண்டு தமிழ்வளர்ச்சி குறித்தும் தமிழாராய்ச்சி குறித்தும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கவும் விவாதத்தை மேற்கொள்ளவும் உள்ளனர்.

எதிர்பார்ப்பு
மாற்றமடையாத எதுவும் இந்தஉலகமயமாக்கலின் முன் தற்காத்துக்கொள்வதில்லை. ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் தமிழ்மொழியிலும், தமிழிலக்கியத்திலும், எவ்வாறு எதிர்காலத்தில் நடைபெற வேண்டும் என்பதைத்திட்டமிட்டு முன்னிமொழிவதாக இந்த ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமையவேண்டும்.

பேச்சு வழக்கு பற்றிய ஆய்வுகள்
     இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்ற அளவுக்கு, வட்டாரப்பேச்சு வழக்கு பற்றிய ஆய்வுகள் தமிழில் நடைபெறவில்லை.  வட்டார வழக்குத் தொடர்பான பண்பாட்டுஆய்வுகள் தமிழகத்திற்குள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் நடத்தப்பட்டு இணையத்தில் பதிவாக்கப்படவேண்டும்.
கல்வெட்டுப்பதிவுகள் இணையத்தில் ஆவணமாக்கப்பட வேண்டும்
     தொல்லியல் ஆய்வறிஞர்கள் ஐராவதம் மகாதேவன், நாகசாமி போன்றோரின் கல்வெட்டாய்வுகளைப் போன்று உலகின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரிய கல்வெட்டுகளைப் படங்களாக எடுத்து, இணையத்தில் ஆவணமாக்கினால் உலகளாவிய அளவில் ஆய்வுகளை நிகழ்த்தலாம்.  “2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய கல்வெட்டுகள் இந்தியாவில் உள்ளன.  அதில் 90% தமிழ்நாட்டில் உள்ளன.  உலகின் பலநாடுகளில் ஆவணப்படுத்தப்படாத கல்வெட்டுகள் அதிகம். உலகின் அனைத்துப் பல்கலைக்ககங்களிலும் தமிழியற் புலங்கள் உருவாக்கப்பட்டு கற்பித்தலும் ஆய்வுகளும் நடைபெற வேண்டும்.

திருக்குறள் உலகம்
     உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலக இலக்கியமாய் .நா. சபை மூலம் அறிவிக்க வைப்பதும், உலகின் அனைத்து மக்களுக்கும் அவரவர் மொழியில் திருக்குறளைக் கொண்டு செல்லவும் ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.

இணையத்தமிழ்
     தமிழ் மட்டுமே அறிந்த ஒருவர் மிகஎளிமையாகப் பயன்படுத்தும் வகையில் மென்பொருட்கள் உருவாக்கப்படவேண்டும்.  தமிழ் இணையப் பல்கலைக்கழகம்www.tamilvu.org.’ எனும் வலைதள முகவரியில் இட்டு, அழகான மின்நூலகத்தை அமைத்து, இணையக் கல்வியை 54 நாடுகளிலுள்ள 5000 தமிழ் மாணவர்களுக்கு அளித்து வருகிறது.  தமிழ்மரபு அறக்கட்டளை போன்ற உலகத்தமிழ் அமைப்புகள் உலகெங்கும் காக்கப்படும் நூறு ஆண்டுகளுக்கு முன்னுள்ள அரியநூல்களை ஒளிப்படி எடுத்து இணையத்தில் சேர்த்துவருகிறது.ப்ராஜெக்ட் மதுரை டாட்.காம். தளம் அருமையாகத் தமிழ் இலக்கியங்களை உள்ளீடு செய்து தமிழ்த்தொண்டாற்றி வருகிறது. இம் முயற்சியை உலகம் முழுக்கப் பரவலாக்கவேண்டும். ஒவ்வொருவரும் வெவ்வேறு எழுத்துருவாக்கத்தினைப் பயன்படுத்துவதால், சில இணையப் பக்கங்களை நம்மால் வாசிக்க முடியாமல் போகிறது. தமிழ்க் கணினிகள் யாவற்றிலும் விதவிதமான எழுத்துருக்கள் பயன்பாடு நிறுத்தப்பட்டு, எதிர்காலத்தில் ஒரேமாதிரியான எழுத்துருக்கள் பயன்படுத்த ஆவனசெய்ய வேண்டும்.

படைப்பாளர் களஞ்சியம்
விக்கிபீடியாவைப் போன்று தமிழ் இலக்கிய நவீனபடைப்பாளர்கள் குறித்த தரவுகள்,அவர்களின் அனைத்துப் படைப்புகள் குறித்த அறிமுகம்,அவர்களின் படைப்பிலக்கியங்கள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் உலகப்பல்கலைக் கழகங்களால்தொகுக்கப்பட்டு அழகாக ஆவணப்படுத்தபடவேண்டும். தமிழகத்தைத் தாண்டி எழுதும் அயலகத் தமிழர்களின் படைப்புகளும் அதே முக்கியத்துவத்துடன் இடம்பெறவேண்டும்.
புதிய நோக்கில் தமிழ் ஆய்வுகள்
     உலகில் தமிழியற்புலங்கள் உள்ள அனைத்துப்பல்கலைக்கழக நூலகங்களும் இணையம் வழியே தொடர் இணைவு செய்யப்பட்டால், “மின்னணு நூலகம் உருவாக்கப்பட்டு ஆய்வுகள் சிறப்பாக நடைபெறும். தமிழகப் பல்கலைக்கழக ஆய்வுச்சுருக்கங்கள் இணையத்தில் உள்ளிடப் படவேண்டும். அனைத்துப் பல்கலைக்கழக ஆய்வு நூலடைவுகளும் இணையத்தில் இடப்படுவதன் மூலம், திரும்பத் திரும்ப ஒரே துறையில் நடைபெறும் ஆய்வுகள் குறையும். 
புதிய நோக்கில் தமிழ் இலக்கியம்
     தமிழ் இலக்கியப் படைப்புக்களின் நோக்கும் போக்கும் எதிர்காலத்தில் மாற்றம் பெறும்.  இயந்திரயுகத்தில் கவிதை, சிறுகதை, உரை நடை இன்னும் சொற்சுருக்கம் பெறும்; மண்மரபு சார்ந்த பதிவுகள், ஏழைமக்களின் அவலங்களே இனி கவிதை முழுக்க இடம் பிடிக்கும்.  தமிழ்க் கவிதைகள் மொழிபெயர்ப்பின் மூலம் உலகத்தின் பார்வைக்குள்ளாகி நோபல் பரிசுகளும் பெறவாய்ப்பாகும்.  சிறுகதைகளின் வடிவம் இன்னும் சுருங்கும்.  புதிய பாடுபொருட்களால் நாளைய இளம் படைப்பாளிகள் புதுமைப்பித்தனையும், கு.ப.ரா. வையும், மௌனியையும், சரியாக உள்வாங்கிப் பயிலமுயல்வார்கள் .
ஆய்வுடன் கூடிய பதிப்புப்பணி
உ.வே.சா. அழிந்து கொண்டிருந்த ஓலைச்சுவடிகளைத் தேடிப்பிடித்து பல சுவடிகளை ஒப்பு நோக்கிப் பாடபேதம் கண்டு அடிக்குறிப்போடு பல இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட்டார்.  அதன்பின் சுவடிகளை ஒப்புநோக்கி ஆய்தல் குறைந்து போனது.  எதிர்காலத்தில் இந்நிலை மாறவேண்டும்.  ஓலைச்சுவடிகள் யாவற்றையும் “ஸ்கேன்“ செய்து இணையத்தளத்தில் உலகம் முழுக்க உள்ளிடும் பணி நடந்தால் உலகளாவிய முன்முயற்சியாக அது அமையும்.  புதிய இலக்கியங்களின் மூல எழுத்துப்படி ஒவ்வொன்றும் இம்முறையில் ஆவணப்படுத்தப்பட்டால் எதிர்கால ஆய்வுகளுக்கு வழிகாட்டியாய் அமையும்.  படைப்பாளிகளின் வாழ்வியல் பதிவுகள் அவர்கள் வாழும்போதே செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டால், அவை அவர்களின் படைப்பில் வெளிப்பட்ட முறையை நம்மால் அறியமுடியும்.  எதிர்காலத்தில் வெளியாகும் அனைத்துப் படைப்புக்களோடும், அந்தப் படைப்பு பிறந்த சூழல் குறித்த “குறுந்தகட்டு ஒலிப்பதிவுடன் இணைந்து வெளியானால் வாசகனால் படைப்பை முழுமையாய் உணர முடியும்.  எதிர்காலம் தமிழின் எழுச்சிக்காலமாய் அமையும்.  சொந்த மண்ணில் அந்நியப்படுத்தப்பட்ட மொழியாக இனி தமிழை யாரும் நினைக்க முடியாது போகும்.  தமிழ்ஆட்சிமொழியாக அனைத்துத்துறைகளிலும் திறம்படச்செயல்படும் தமிழ் நவீன ஊடகமான இணையத்திலும் சாதனை படைத்து உலகத்தாரால் பாராட்டப்பெறும்.  தொன்மையின் வேரில் தமிழ் எனும் கற்பகதரு நவீன கனிகளைத்தரும்.  மொழிபெயர்ப்புகள் நிறைய நடைபெற்று “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்“. நம் தேர்ந்த பண்பாடும், திராவிட நாகரிகமும் உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப் பெற்று பின்பற்றப்படும்.  தனித்தியங்கும் தன்மை தமிழனுக்கு உண்டு.  தமிழே ஞாலத்தில் முதுமொழி பண்டு என்ற பாவேந்தர் கூற்று அப்போது மெய்ப்பிக்கப்படும்.
கலைஞன் பதிப்பகத்தின் அரியமுயற்சி
தமிழ்ப் பதிப்பாளர் நந்தன் மாசிலாமணி, கலைஞன் பதிப்பகத்தின் மூலம் “சங்க காலம் முதல் பாரதி வரை” எனும் பொருளில் தமிழகப் பேராசிரியர்கள் அறுபது பேரை 120 நூல்களை எழுதத்தூண்டி ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிட உள்ளார். இது, மாநாட்டில் இது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைகிறது.
வல்லமை உண்டு
உலகமயமாக்கலை எதிர்கொள்ளும் வல்லமை தமிழுக்கு உண்டு. இனியும் தமிழகத் தமிழர்கள்,புலம் பெயர்ந்த பிறநாட்டுத் தமிழர்கள் என்றெல்லாம் வேறுபடுத்தாமல் தமிழ்பேசும் தமிழர்கள் என்ற ஒருகுடைக்குள் அனைவரும் ஒன்றிணையவும் தமிழியல் ஆய்வுகளை உலகளாவிய அளவில் கொண்டுசெல்லவும் இம்மாநாடு வழிவகுக்கும்.
·         கட்டுரையாளர் எழுதிய பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் நூல்கள் ஒன்பதாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்  வெளியிடப்பட உள்ளன.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்