விக்கிரமன் ஓர் எழுத்துச் சகாப்தம்







            
பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275

எந்தப் பாறைக்குள்ளும் வேர்பரப்பும் தன்னைத் தாவரமாய் உணரும் எந்தச் சிறுசெடியும்.எழுத்தாளனும் அப்படித்தான். 

எதுகுறித்து அவன் எழுதப்போகிறானோ அதுவாகவே அவன்மாறும் அற்புதவிந்தையின் வெளிப்பாடே எழுத்து! அவநம்பிக்கையின் அண்டைவீட்டுக்காரனாய் எழுத்தாளன் ஒருபோதும் இருபத்தில்லை. 

வேம்பு வழக்கமாகக் கசக்கத்தானே செய்யும்..ஆனால் அலோபதி மருத்துவத்தால்கூடக் குணப்படுத்த முடியாத வைரஸ்காய்ச்சலை நிலவேம்புதானே கட்டுப்படுத்தியது..

அப்படிபட்ட நிலவேம்புதான் விக்கிரமன். வேம்பு என்ற புனைப்பெயரில்தான் விக்கிரமன் கதைஇலக்கியத்திற்குள் நுழைந்தார். ஆனாலும் அற்புதமான கருக்களில் தமிழ்ப் படைப்பிலக்கியம் படைத்த “வேம்பு” எனும் விக்கிரமனின் எழுத்துகள் இறுதிமூச்சு வரை இனிக்கத்தான் செய்தன. 

13 வயதில் எழுதத்தொடங்கி 88 வயதுவரை இடைவிடாமல் எழுதிய அன்பாளர் எழுத்தாளர் விக்கிரமன்.அவர் படைத்த நந்தபுரத்து நாயகியும்,பரிவாதினியும்,யாழ் நங்கையும்,பராந்தகன் மகளும் கல்கியை நினைவுபடுத்துவன.இருக்கும் வரைக்கும் வெறுப்பால் மறைக்கும் இருக்கம் இல்லாத இனிமையான படைப்பாளர். 

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக அவர் ஆற்றிய பணிகள் மறக்க இயலாதன. அரைநூற்றாண்டுகள் கடந்து அமுதசுரபி இதழின் ஆசிரியராய் பணியாற்றியவர்.இலக்கியபீடம் அவரது இனிய இதழ்.முப்பது வரலாற்று நாவல்கள்,ஆறு சமூக நாவல்கள்,பத்து சிறுகதைத் தொகுப்புகளோடு இளைஞர்களுக்கு ஊக்கம்தரும் இருவரலாற்று நூல்களைத் தந்தமுதுபெரும் எழுத்தாளர் விக்கிரமனின் எழுத்துகள் இனிக்கும் கரும்புகள்.தமிழ்ச்சுடர் எனும் கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கி தன் எழுத்துகளை அதில் வெளியிட்டார்.

மூதறிஞர் ராஜாஜி விக்கிரமனின் கன்னிமுயற்சியைப் பாராட்டினார்.1948 இல் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையால் பெயரிடப்பட்டு இடையில் நிற்கும்நிலைக்கு நலிந்துபோன அமுதசுரபியின் ஆசிரியராய் விக்கிரமன் பொறுப்பேற்று அரைநூற்றாண்டுகள் கடந்து வெற்றிகரமாக நடத்தினார். பாரதிதாசன்,லா.ச.ரா, தி.ஜானகிராமன், வல்லிக்கண்ணன்,சாண்டில்யன் போன்ற தமிழறிஞர்களின் எழுத்தாளர்களின்  படங்களை அட்டைப்படமாக வெளியிட்டு அமுதசுரபி சாதனை படைத்தது.

இதழாளாராகவும் தமிழ்ப்படைப்பாளராகவும் மிகத்தெளிவாக இயங்கியவர். பிரபலங்களுடன் அவர் நிகழ்த்திய நேர்காணல்கள் பொருள்பொதிந்தன.

அவர் எழுதிய “ நினைத்துப் பார்க்கிறேன்” அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும் ஆவணம்.அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சோமலே போன்றோர் எழுத்துத்துறையில் சாதனை படைத்திருக்கிறார்கள்.

  அடாத மழையிலும் விடாது முளைக்கும்காளான் போல, எரிந்துபோனாலும் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும்பீனிக்ஸ் பறவையைப் போலத் தோல்வியிலிருந்து துள்ளி எழுவதல்லவா வாழ்க்கை.மரணம் கூட அவருக்குச் சவால் விட்டது.

பெரும்மழை  வெள்ளத்தால் சென்னை சிக்கித்தவித்தபோது உயிர் அவர் உடலை விட்டுப் பிரிந்தது. மின்மயானமும் செயல்படாத சூழலில் நான்கு நாட்கள் காத்திருந்து அவர் நம்மைவிட்டு விடைபெற்றார். விக்கிரமன் ஓர் எழுத்துச் சகாப்தம்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்