தினமலர் என் பார்வைக் கட்டுரை


கவலைகளைக் கைகழுவுங்கள் ஜென்கவிதைகளாய் இருங்கள்

  பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி,9952140275

http://www.dinamalar.com/news_detail.asp?id=2031078

எப்போதும் வெறுமை. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற குமுறல்,  எதையும் தாங்க முடியவில்லாத கோழையாக நான் எப்படி மாறினேன்? என்கிற கேள்விகள் இன்றைய நாளில் தவிர்க்க இயலாததாகிவிட்டன. எல்லாத் தவறுகளுக்கும் நான் தான் காரணம்,நான் ஏன் பிறந்தேன் என்றே தெரியவில்லை, எத்தனையோ பாடங்களைப் படித்தேன்,ஆனால் எதற்கும் அலட்டாமல் எப்படி ஒரு பூவைப் போல் மலர்ச்சியோடிருப்பது என்று தெரியவில்லை! என்று வருந்துவோரா நீங்கள் உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை. உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் ஜென்கவிதைகளைப் படியுங்கள், ஜென்கவிதைகளாய் மாறுங்கள் என்பதுதான். 

தியானத்தின் மொழி மௌனம். உள்ளார்ந்த கவிதையின் மொழியும் மௌனம்தான். ஜென் என்கிற சீனச்சொல்லின் பொருள் தியானம் செய் என்பதாகும். எது தியானம் என்ற கேள்வியின் வேரில்தான் ஆயிரமாயிரம் ஜென் கவிதைகள் பிறக்கின்றன. சிந்தனை அற்ற நிலையை ஜென் தத்துவம் போதிக்கிறது. அதிகம் பேசாத மௌன நிலையில் நிலைகொண்டு தன்னிலிருந்து தன்னைப் பார்ப்பதால் ஜென் கவிதைகள் நம்மை வெகு இலகுவாக மாற்றுகின்றன.

வாழ்வைக் கொண்டாடுங்கள்

ஜென் கவிதைகள் நெகிழ் மனதின் நெருக்க வெளிப்பாடுகள். வெட்டுக்கிளி சப்தமில்லாமல் எப்படி புல்நிறை அடர்வனத்தை தன் வாயால் வெட்டித்தள்ளுகிறதோ அதேபோல் ஜென் கவிதைகள் கவலைப்படாமல் காலத்தைக் கத்தரித்துப் புறந்தள்ளுகின்றன. கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? என்கிற கேள்வியை நம் முன் கேட்டு நம்மை நிமிர்ந்து நிற்கச்செய்கின்றன. என்றோ பார்த்ததை இன்று பார்க்கும் கவிக்கண்ணோடு காலத்தைக் கழித்து காலமற்றதாக அவை வெளிப்படுத்துகின்றன.

இரங்கலும் உறங்கலும் இல்லா மகிழ்ச்சி நிமிடங்களை அவை நமக்குத் தந்து வாழ்வைக் கொண்டாடச் சொல்கின்றன. ஜென் கவிதைகள் சுலபமான நம் வாசிப்பனுபவத்திற்கு இலகுவாகப் பிடிபடாத தன்மை உடையன. தேவையில்லாமல் ஏன் ஒன்றைத் தேடவேண்டும் என்கிற கேள்வியை ஜென்கவிதைகள் எழுப்புகின்றன.  

பற்றற்ற நிலை

எதுவும் என்னுடையதில்லை என்கிற பற்றற்ற நிலையை ஜென் கவிதைகள் உணர்த்துகின்றன. ஜென் கவிதைகளில் அடிக்கடிப் பறக்கும் வண்ணத்துப்பூச்சி, பூச்சி என்பதையும் தாண்டி இன்னொரு பொருளைத் தரும் குறியீடாய் மாறுகிறது. ஜென் கவிதைகள் எதையும் புனிதப்படுத்தாமல் எல்லாவற்றையும் வெகுஇயல்பாகக் காட்டுகின்றன. ஹுயூட்டி என்கிற ஜென்குரு கிராமத்திற்குள் நுழைகிறார், அவர் முகத்தில் எப்போதும் உற்சாகம், தோளில் ஒரு சாக்கு தொங்குகிறது.குழந்தைக்கு இனிப்பை வாரிவழக்குகிறார். அவை மகிழ்வோடு அவரைச் சுற்றிநின்று ஆடுகின்றன, அவரும் ஆடுகிறார், பாடுகிறார், அப்போது அந்த வழியாக வந்த என்பனின் என்கிற மற்றொரு ஜென் குரு ஜென் என்றால் என்ன என்று அவரிடம் கேட்கிறார்.ஏதும் பேசாத ஹுயூட்டி தன் தோளில் மாட்டியிருந்த காலிச் சாக்கினைக் கீழே தவறவிடுகிறார். சுமையைக் கீழே போட்டுவிட்டுச் சுதந்திரமாய் நட என்பதுதான் ஜென் தத்துவம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு அப்பால் நகர்ந்தார்.

 போதிதர்மர் சொன்ன ஒப்பற்ற உண்மை

  மிகப்பெரிய  ஞானியான போதிதர்மர் காஞ்சி புரத்திலிருந்து சீனா செல்கிறார், அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த மாமன்னர் ஊடியைச் சந்திக்கிறார். மன்னருக்கும் போதிதர்மருக்கும் இடையே தத்துவம் குறித்த உரையாடல் நிகழ்கிறது. போதி தர்மரைப் பார்த்து மன்னர் கேட்கிறார், “ இந்த உலகில் நீங்கள் கண்ட மிகப்பெரிய உண்மை எது?” எனக் கேட்கிறார். உடன் போதிதர்மர் சொல்கிறார், “ இந்த உலகில் இருப்பவை எல்லாம் ஒன்றுமற்ற சூனியம்தான். மற்றபடி உயரிய உண்மை என்று ஒன்றும் இல்லை” என்கிறார்.மன்னர் அதிசயித்துப் போகிறார்.  இந்த உலகில் ஒன்றும் இல்லை என்பது உண்மையானால் ஒன்றுமில்லாததற்கு ஏன் நான் இவ்வளவு அலட்டிக்கொள்ள வேண்டும் எனும் வினா எழுகிறது. அனுபவம் ஒன்றுதான் நம் ஆசான், பட்டுத் தெரிந்துகொள்ளும் அறிவு இந்த உலகம் விட்டு நாம் விடுதலையாகும் வரை நம்மை வழிநடத்துகிறது. உலகின் எல்லாக் குளங்களிலும் ஒரே நிலவுதான் மிதந்துகொண்டே இருக்கிறது நாம் தான் வேறுவேறு மனிதர்களாக இருந்து அந்த அழகான நிலவை ரசிக்கத் தவறுகிறோம். “ ஒரு மழைத்துளி மேல் விழுந்து கொண்டிருக்கிறது இன்னொரு மழைத்துளி” என்பது ஜென் கவிஞர் பாஷோவின் அழகான ஜென்கவிதை.
 இயற்கை ஜென் கவிதைகளின் இலகுவான இதயம். இயற்கையைக் காத்தல் இன்னொரு தியானம். “ கொஞ்சம் தினை சிந்து/ குருவியாவாய்/ கொஞ்சநேரமேனும்” என்று சொல்ல ஜென் கவிதைகளால் முடிகிறது. ஆன்மீகத் தத்துவமான ஜென் கவிதைக்குள் நுழைந்த விந்தை அழகானது. ஜென்கவிதைகள் இயற்கையோடு இணக்கமாய் இருக்கச் சொல்லித்தருகின்றன. சொற்களைக் கடந்த அனுபவப்பிழிவை அவை வாசகருக்குள் அரூபமாய் ஏற்படுத்துகின்றன. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், “திருடன் விட்டுச் சென்றிருக்கிறான்/ நிலவை/ என்னுடைய ஜன்னலில்” என்ற ரியோகானின் ஜென் கவிதையை ஒவ்வொரு முறை வாசிக்கும்போது நிலவைவிடத் திருடனே மிக வியப்பாக இருக்கிறான், ஒருவேளை காலம்தான் திருடன் என்ற பெயரில் கட்டப்படுகிறதோ என்று தோன்றுகிறது என்று குறிப்பிடுகிறார்.

 மௌன நிலை

சொற்களுக்கிடையே நிற்கும் மௌனத்தை ஜென் கவிதைகள் முன்நிறுத்துகின்றன. எதையும் சிந்திக்காமல் இருத்தலை ஜென் துறவிகள் விளக்கினர்.  ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்தலை ஜென் கவிதைகள் வரிகள் மூலம் விளக்குகின்றன. மாயை கடந்த மெய்மைத்தேடல் ஜென் கவிதைகள் சுழலும் மையப்புள்ளியாய் அமைகின்றன.

சும்மா இருத்தல்
பட்டினத்தாரும், அகப்பேய் சித்தரும், அருணகிரிநாதரும் சொன்ன சும்மாவை “சும்மா இருக்கும் சுகம்” என்று திருவருட்பா மூலம் நாம் உள்வாங்கிக்கொண்டோம். சும்மா என்பது வேலை செய்யாமல் இருத்தல் என்கிற பொருளில் நாம் புரிந்துவைத்திருக்கிறோம். ஆனால் சும்மா என்பது அதிராமல் ஒலியற்றிருத்தல் என்ற மற்றொரு உட்பொருளும் உண்டு. சொல்லற்றிருக்கும் மௌன நிலையை ஜென் தத்துவமும் ஜென் கவிதைகளும் முன்வைக்கின்றன. நா.முத்துகுமாரின் “ பிம்பங்களற்ற தனிமையில் / ஒன்றிலொன்று முகம் பார்த்தன/ சலூன் கண்ணாடிகள் ”எனும் கவிதை உள்ளுக்குள் பலசெய்திகளை வைத்துக்கொண்டு வாசகருக்குள் நுழைகிறது.

உடையும் பிம்பம்

ஏற்கனவே மரபு சார்ந்து மனம் வரைந்து வைத்திருக்கும் பிம்பங்களோடு ஜென் கவிதைகளை ரசிக்கவோ புரிந்துகொள்ளவோ இயலாது. ஒன்றை இன்னொன்றாக மாற்றி ஜென்கவிதைகள் உணரவைக்கின்றன. “ கொஞ்சம் தினைசிந்து / குருவியாவாய்/ கொஞ்சநேரமேனும்” எனும் கவிதை உணவு குருவி என்ற இரு புள்ளிகளைக் கடந்து ஒன்று இன்னொன்றாக முடியும் என உணர்த்துகிறது.

வாழ்க்கை முறை
 எளிய வாழ்க்கை முறையான ஜென், தத்துவமாக வந்தபோது புரிதல் குறைபாடு ஏற்பட்டது . அறிவுக்கும் விவாதத்திற்கும் எட்டாத ஞானத்தைக் குருவின் துணையோடு பெறும் வழியை ஜென் காட்டுகிறது. தண்ணீரில் விழுந்த எண்ணெய்த்துளி நீருக்குள் வரையும் பரவும் ஓவியமாய் மாறுவது மாதிரி ஜென் கவிதைகள் படிக்கும் வாசகர் மனதில் இன்னொரு விசித்திர சித்திரத்தை தன் வரிகளால் வரைகின்றன. ஜென் கவிதைகள் காலத்தைக் காலமாகச் செய்கின்றன. “மிதக்கிறது காலம் கண்முன்னே/ தண்ணீரில் மூழ்கிச் செத்த/ ஏதோவொன்றாய்” என்ற கவிதையைச் சொல்லலாம்.

புரிதல்
அவிழ்க்க முடியாத அனுபவ முடிச்சுகள் ஜென் கவிதைகளில் உண்டு. எந்தப் பொதுமை வரையறைகளுக்குள்ளும் அக் கவிதைகளை அடக்கிவிடமுடியாது. சடங்குகளையும் மந்திரங்களையும் கடந்த தத்துவ மரபாக ஜப்பானிலும் சீனாவிலும் அறிமுகமான ஜென்தத்துவம் தமிழ்க் கவிதைகளில் அவரவர் புரிதலுக்கேற்ப வேற்றுருக் கொண்டதே உண்மை. தன்னை உணர்தலும் தன் வாழ்வை மிக அழகாக வாழ்வதையும் ஜென் கவிதைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இருவேறு உலகு
பொருள் பொதிந்த சொற்காட்டில் ஜென்பூக்கள் கவிதைகளாகப் புதுப் பிறப்பெடுகின்றன. புறஉலகைப் புறந்தள்ளி அகஉலகு நோக்கி அவை வாசகரை அழைத்துச் செல்கின்றன. “ எப்போதும் தனிமைதான்/ தலைமேல்/ நிலவாய்” பாசிக்குளம் பழைய நினைவுகளுக்குள் வழுக்கி விழவைப்பதைப் போல் ஜென்கவிதைகளின் முந்தைய வரிகள் அடுத்தடுத்த வரிகளுக்குள் வழுக்கி விழவைகின்றன.
அனுபவ தரிசனம்
கருஞ்சிலையின் ஓரத்தில் கற்பூரவெளிச்சம் படும் கணத்தில் அந்தச் சிற்பம் எவ்வளவு அழகாக இருக்குமோ அதேபோல் ஜென்கவிதைகளின் சில அபூர்வ வரிகள் அக்கவிதைதரும் முழுஅனுபவத்தைத் தரிசிக்க வைக்கின்றன. திறந்த கதவைத் தன் மாயக்கரங்களால் அறைந்து சார்த்தி மூடிவிடுகிற காற்றைப் போல் சுகஅனுபவத்தையும் அதிர்வனுபவத்தையும் ஜென் கவிதைகள் ஒருசேரத் தருகின்றன. கால் நனைக்கப் பயப்படும் குழந்தையின் காலுக்குக் கீழே தானே வலியச் சென்று மெதுவாகப் பரவுகிற பண்பட்ட கடல்போல் அனுபவ முரணால் ஒன்று சேரமறுக்கும் வாசகர் மனதில் மெல்லொலி எழுப்பி ஜென் கவிதைகள் மெல்ல நுழைகின்றன.

 உருமாற்றம்
நெருப்பில் இழகும் நெகிழியைப் போல் கவிதை எழுத்திலிருந்து வாசிப்பனுபவமாய் வாசகர் மனதில் சென்று சேர்ந்து உருமாறுகிறது. கோட்டோவியத்தில் குறுகும் கோடுகளாய் சொல்லைக் குறுக்கி அனுபவத்தை உருப்பெருக்கி ஜென்கவிதைகள் வாசகமனதிற்கு நெருக்கமாகின்றன.

ஒருபாறையில் பட்டு இன்னொரு பாறைகடந்து கீழேவழியும் அருவிநீராய்அக்கவிதைகள் பொருளைப் பொழிகின்றன. மேலோட்டமான பொருளை விடுத்து இன்னொரு ஆழ்பொருளை உட்பொதிந்தபடி அவை வாசகருக்கு இன்பம் தருகின்றன. “ஆணியில் தொங்கும் பழையபடத்தில்/ என் முகமாய் தெரிகிறது/ எல்லோர் முகங்களும்”  என்ற கவிதை அதற்குச் சான்று.

நொந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது?
எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் மகிழ்ச்சியுடன் செய்யுங்கள், கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே! என்று கீதையில் சொன்னபடி. உங்கள் செயல்களை உற்றுக்கவனியுங்கள், நாமே நமக்கு வேடிக்கையாகத் தெரியும்.மனம் இலகுவாகும். வீட்டை பூட்டியபின் பூட்டை இழுத்து இழுத்துபார்க்கத் தோன்றாது. நம்மையே நாம் நொந்துகொள்வது நின்றுபோகும். யாரையும் யாரும் பின்பற்ற வேண்டாம், நம் வாழ்வை நாம் வாழ்ந்தால் போதும். நாம் பெற்றுக்கொள்வதற்கு வரவில்லை, மாறாக நம் தவறுகளிலிருந்து நாம் நம் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு வந்திருக்கிறோம். எல்லாம் தெரியும் என்பது எப்படி பொய்யோ நமக்கு எதுவும் தெரியாது என்பதும் பொய்யே. நாம் செய்யும் செயலே நமக்கான நிம்மதி தரும் தியானமாய் அமைகிறது. கண்களை மூடிக் கொண்டு பாருங்கள் நாமே நமக்கு அற்புதமாய் தெரிவோம். ஒளியைத் தேடி ஓடிப் பயனில்லை,ஒளி நமக்குள் இருக்கிறது. சின்ன சின்ன செயல்களுக்கு வருந்துவதை விட்டுத் தள்ளுங்கள், சொன்ன சொற்களுக்கு வருந்தி வாழ்வை வீணாக்காதீர்கள், சொல்லும் சொற்களில் கவனமாய் இருங்கள்.

மனம் வசமாகும் தினம்

மௌனத்திலும் தனிமையிலும் ஆழ்ந்த பொருள் உண்டு என்று ஜென் கவிதைகள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. ஒரு வாசலைக் காட்டி இன்னபிற வாசல்களைத் திறந்து பயணிக்க ஜென் வழிகாட்டுகிறது. புரியவைத்தல் ஜென் கவிதைகளின் வேலையன்று. ஒரு கோப்பைத் தேநீரின் அத்தனைத் துளிகளையும் ரசித்து அருந்துதல்போல வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்துநகர்த்த ஜென்கவிதைகள் கற்றுத்தருகின்றன மௌனம் எனும் ஆழமொழியால். ஜென் கவிதைகளைப் போல் இருந்தால் மனம் எப்போதும் லேசாகவே இருக்கும். வாழ்க்கை என்பது வாழ்வதற்கான வாய்ப்பு என்று தெளிவாகப் புரியும்.எல்லாவற்றையும் ரசிக்கப் பிடிக்கும், நிகழ்வினாடியில் வசிக்கப்பிடிக்கும், நம்மையே நமக்குப் பிடிக்கும்.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்