சமகாலப் போக்குகளை உள்வாங்கி எழுதியவர் க.நா.சு.



சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பரப்பில் க.நா.சு. தொடங்கிவைத்த விமர்சன மரபு, புதிதானது, புதிரானது. படைப்பில் அவர் காட்டிய அதே அக்கறையை விமர்சனத்துறையிலும் காட்டினார். 

அவர் முன்வைத்த விமர்சனமுறை குறித்து நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவர் தன் நிலைப்பாட்டிலும் தன் கறாரான பார்வையிலும் உறுதியாக இருந்தார். 

நாம் அளவுக்கு அதிகமாய் பழைமையைத் தூக்கிப்பிடிப்பதாய் உணர்ந்தார், உலகில் நடைபெறும் சமகாலப் போக்குகளை ஏன் தமிழ் எழுத்துலகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது? என்ற கேள்வியை அவர் விமர்சனங்களில் ஆழமாக முன்வைத்தார். 

விமர்சகராகவும் படைப்பாளராகவும் இருதளங்களில் அவர் இயங்கியதால் ஒன்றின் பாதிப்பை இன்னொன்றில் உணரமுடிந்தது. புதுமைப்பித்தன் கதைகள் அவருக்குப் பிடித்தமானது என்றாலும் எல்லாவ்ற்றையும் அவர் கொண்டாடவில்லை, புதுமைப்பித்தன் கதைகளில் முப்பது கதைகள் சிறப்பான கதைகள் என்பது அவர் கணிப்பு. 

வாசகரை நினைத்துக் கொண்டு படைப்பாளிகள் கதைகளை எழுதக்கூடாது என்று இலக்கிய விசாரத்தின் முன்னுரையில் அவர் எழுதியுள்ளார். என்னதான் உலகஇலக்கியங்களை அவர் வாசித்தாலும் “தமிழில் சிறுகதையும் நாவலும் இன்று தமிழ் உருவம் பெறவேண்டும் என்ற ஆசை உள்ளவன் நான்” என்று எழுதினார். 

க.நா.சு.வின் இலக்கிய விமர்சனம் எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையிலும் உருவானதன்று. அது அவர் மனம் தொடர்பான தெரிவாகவே கருதினார். 

நல்ல இலக்கியப் பிரதிகளை அறிமுகப்படுத்தினார். இலக்கியமல்லாததை அவர் புறந்தள்ளினார். அதனால்தான் அவர் போட்ட பட்டியல்கள் இன்றும் விவாதங்களைக் கிளப்பிக் கொண்டே இருக்கின்றன. 

ஆத்மார்த்தமாக எந்தப்படைப்பேனும் தன்னைப் பாதித்துவிட்டால் அப்பாதிப்பு அகலும் முன் அப்படைப்பு குறித்த நிறை குறைகளை உடனே தன்னுடன் வைதிருக்கும் தட்டச்சு எந்திரத்தில் தட்டச்சு செய்து தொடர்புடையவர்களுக்கு அனுப்பிவிட்டு அதன் மறுபிரதியைக் கோப்பில் சேர்த்து வைத்திருப்பாராம்,வாய்ப்பு கிடைக்கும்போது அக் கட்டுரை நூலாக்கம் செய்யப்படும். 

க.நா.சு. என்கிற இலக்கிய ஆளுமையை எழுத்தாளர் சுந்தர ராமசாமி மிகத்தெளிவாக உணர்ந்திருந்தார், 

அவரை காய்தல் உவத்தலின்றி அவர் முன்வைத்த இலக்கியப் பார்வைகளைப் பல நேரங்களில் ஏற்றுக்கொண்டார். உலக மொழிகளில் வெளிவந்த சிறந்த நாவல்களை க.நா.சு சரியாகத் தெரிவு செய்து மொழிபெயர்த்துத்தந்தார்.

அவற்றை ஆழ்ந்து நோக்கினால் தரமான நாவல் குறித்த அவர் மதிப்பீட்டினை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவர் கவிதைகள் வாசகர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத சோதனாபூர்வமான கவிதைகளாக இருந்தன. 

க.நா.சுவுக்கு எழுதுவது தொழிலன்று, 

ஆத்மதிருப்திக்காக அவர் எழுதினார். 

உலக மொழிகளில் வெளிவரும் எல்லா நவீனப்போக்குகளும் தமிழில் இருக்கவேண்டும் என்ற பெருவிருப்பமே தொடர்ந்து அவர் எழுதுவதற்கான காராணமாக இருந்தது. 

இளந்தலைமுறை வாசகர்களுக்கு கலைஞாயிறு பகுதியில் தொடர்ந்து வெளியாகும் சி.மோகனின் தொடர் தரமான படைப்பாளர்களை அறிமுகப்படுத்திவருவது நிறைவளிக்கிறது.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்