இந்து நாளிதழும் நானும் * முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி



                

தமிழ் இந்து வந்த நாள் முதல் இன்று வரை அந்த இதழின் வாசகன். ஆபாசமில்லாமல் தமிழில் ஒரு நாளிதழா என்ற கேள்விக்கான விடையை இந்து மூன்றாம் ஆண்டின் தொடக்கம் வரை மிகத் தரமாகத் தந்துகொண்டிருக்கிறது. 

முதலாம் ஆண்டின் வாசகர் திருவிழா திருநெல்வேலியில் நடந்தபோது இந்து என்னையும் மேடை ஏற்றிப் பெருமைப்படுத்தியது. நான் மேடையில் முன்வைத்த சில ஆலோசனைகளை அடுத்த வாரங்களில் செயல்படுத்தத் தொடங்கியது.

இந்து ஆசிரியர் திரு.அசோகனிடமும் இணைப்பிதழின் ஆசிரியர் திரு.அரவிந்தனிடமும் கொட்டும் மழையில் திருநெல்வேலி எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் காட்டிய ஆர்வம் நம்பிக்கை தந்தது. 

அப்போது நான் கலை ஞாயிறு பகுதியில் எழுதிய ந.பிச்சமூர்த்தி,லா.ச.ரா.,நகுலன்,பிரமிள் குறித்த கட்டுரைகளை இந்து சலிக்காமல் வெளியிட்டுக் கொண்டே இருந்தது. வானொலியின் வசந்தகாலம் கட்டுரை அவுஸ்திரேலியா,இலங்கை,இங்கிலாந்து நாட்டு கலை இலக்கிய வாசகர்களைக் கவர்ந்தது. காணமல் போகும் கடித இலக்கியம் கட்டுரை நூற்றுக்கணக்கான வாசகர்களின் அன்பைப் பெற்றுத் தந்தது.

இந்துவில் வரும் கட்டுரைகளை ஏழுமணிக்குள் வாசித்து விட்டு எட்டு மணிக்கு மாணவர்களிடம் அக் கட்டுரை குறித்த என் திறனாய்வினை முன்வைத்து அவர்களையும் வாசிக்கத் தூண்டி மதியம் “இப்படிக்கு இவர்கள்” பகுதிக்கும் மின்னஞ்சல் செய்துவிடுவேன்.

இந்த இரண்டாண்டுகளில் நூற்றுக்கணக்கான நான் எழுதிய ஐம்பதிற்கும் மேற்பட்ட கடிதங்களை இந்து வெளியிட்டுள்ளது.இந்துவின் பரந்துபட்ட பார்வையும் சார்புத்தன்மை இல்லாமல் எல்லாவிதமான பார்வையையும் கட்டுரைகளில் வெளியிடும் தன்மையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆபாசத்தை அச்சாக்கி அதைக் கொண்டு நச்சாக்காமல் மது,நதிநீர் மாசு போன்ற சமூகச்சிக்கல்களைத் துணிச்சலோடு முன்னெடுப்பதும் எல்லா சமூகப் பிரச்சினைகள் குறித்த உரையாடல்களைத் தொடங்கிவைத்து ஒரு கருத்தியல் களத்தை ஒருங்கிணைப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமானதாயிருக்கிறது. 

 தமிழ் நூல்கள் குறித்த இந்துவின் நீண்ட விமர்சனங்கள் மிக அற்புதமாக இருக்கின்றன.

பெண் ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் மிக அழகாக ஆழமாக வெளிவருகின்றன.கலைஞாயிறு,முன்பு வந்த கலைஇலக்கியம் தரத்தில் இல்லை.அறிவியல் தமிழ் கட்டுரைகள் இணையத்தமிழ் தொடர்பான கட்டுரைகள் இன்னும் வரலாம். ஓரே படைப்பாளர் எழுதிய  தன்னம்பிக்கைக் கட்டுரைகளுக்குப் பதில் பல எழுத்தாளர்களிடம் பெற்று வெளியிடலாம். 

மூன்றாம் ஆண்டின் தொடக்கத்திலும் குமரிமாவட்ட வாசகர் விழா நடந்த நேரத்தில் என் பார்யையும் இந்து வெளியிட்டது.இந்துவால் புதிய இளம் தமிழ் வாசகர்கூட்டம் உருவாகிஇருப்பது மகிழ்வான நிகழ்வு.







·        


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்