உலக புத்தகதினத்தை முன்னிட்டு பாளை. அரசினர் சித்தமருத்துவக் கல்லூரியில் தமிழ்சித்தமருத்துவ ஓலைச் சுவடிகள் ஆவணப்படுத்துதல் பாதுகாத்தல் குறித்த பயிலரங்கு




உலக புத்தகதினத்தை முன்னிட்டு பாளை. அரசினர் சித்தமருத்துவக் கல்லூரியில் தமிழ்சித்தமருத்துவ ஓலைச் சுவடிகள் ஆவணப்படுத்துதல் பாதுகாத்தல் குறித்த பயியரங்கு  23.4.2016 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. தென்னகப் பழங்கால மருத்துவச் சுவடிகள் ஆய்வுமைய இயக்குநரும் திருநெல்வேலி அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி உதவிப்பேராசிரியர் டாக்டர் சுபாஷ்சந்திரன் பயிலரங்கின் நோக்கம் குறித்து நோக்குரையாற்றினார். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் விருந்தினராய் கலந்து கொண்டு உலகப் புத்தகதின உரையாற்றினார்.
தமிழ்சித்தமருத்துவ ஓலைச் சுவடிகள் பாதுகாத்தல் மற்றும் மின்னனு முறையில் ஆவணப்படுத்துதல் குறித்த பயிலரங்கில் கலந்துகொண்டு பாண்டிச்சேரி பிரஞ்சு நிறுவன மருத்துவ மானுடவியல் முதன்மை ஆய்வாளர் டாக்டர் பிரிகிட்டி செபாஸ்டியா தலைமையுரை ஆற்றினார். அவர் தனது தலைமையுரையில்
 “ திருநெல்வேலி பகுதியில் அரிய மருத்துவச் சுவடிகள் பாரம்பரிய மருத்துவர்களிடம் உள்ளன. யோகா,மருந்துதயாரித்தல், நாடி குறித்த பொக்கிஷங்கள் தலைமுறை தலைமுறையாக பாரம்பரிய மருத்துவர்களிடம் அவர்கள் குடும்பச் சொத்தாகப் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் அரிய மருத்துவச் சுவடிகளின் ஆயுள் 250 ஆண்டுகள் மட்டுமே.அதன்பின் அவை செல்லரித்து நொறுங்கிப்போய்விடும். திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த  கிருஷ்ணன், மனோகரன் ஆகிய பாரம்பரிய மருத்துவர்கள் இருவர் தங்களிடம் இருந்த பத்து கட்டுகள் கொண்ட அரிய சுவடிகளை ஆறுமாதங்களுக்கு முன் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்ற பயிலரங்கில் மின்னனு முறையில் இணையத்தில் எண்மப்படுத்துவற்காக தந்தனர். அவை எண்மப்படுத்தப்பட்டு இன்று அவர்களுக்கு மின்னனு வடிவில் குறுந்தட்டாகத் திரும்பத்தரப்பட்டது.  அவை இப்போதும் அவர்களின் அரிய சொத்துதான். ஆனால் எண்மப்படுத்தப்பட்ட உலகக்கொடையாகிவிட்ட சொத்து.எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் ஆங்காங்கே இருக்கும்  மருத்துவம்,சோதிடம்,தமிழ்க்கலைகள்,வானசாத்திரம்,மந்திரம்,யானை வைத்தியம் போன்ற அரிய சுவடிகளை மரபுசார்ந்த மருத்துவர்கள் எண்மப்படுத்துவதற்கு தந்தால் அச்சுவடிகளைக் காக்கப்பேருதவியாய் அமையும். அவை பெற்றுக் கொள்ளப்பட்டதற்கான ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டு மின்னனு வடிவில் அவை குறுந்தகடுகளாக அவர்களுக்கு மீண்டும் தரப்படுவதோடு அவர்களின் அரிய சுவடிகளும் தூய்மைசெய்யப்பட்டு மீண்டும் அவர்களுக்கே வழங்கப்படும். இந்தச் சுவடிகளில் உள்ள அரிய செய்திகள் நூல்களாகப் பதிப்பிக்கப்படவேண்டும். நாடிபிடித்து நோயைக் கண்டறியும் தமிழரின் அரிய ரகசியம் தமிழ்ச் சுவடிகளில் புதைந்து கிடக்கிறது. அது பொதுவெளியில் முன்நிறுத்தப்படும்போது மரபு சார்ந்த சித்தமருத்துவம் உலக அளவில் இன்னும் மக்கள் முன் புகழ்பெறும். எனவே எந்தப்பகுதியில் எந்தச் சுவடிகள் கிடைத்தாலும் அவற்றை பாழாக்காமல் எண்மப்படுத்த உதவவேண்டும். சுவடிகளை எண்மப்படுத்த குறிப்பட்ட நுண்நோக்கு கொண்ட கேமராக்களையே பயன்படுத்துகிறோம்.இப்போது அவற்றைத் தமிழ்க் குறிச்சொற்களோடு இணையத்தில் ஆவணப்படுத்தப்படுகிறது, இதனால் மருத்துவ உலகம் நம் தமிழின் தொன்மையான மருத்துவமான சித்தமருத்துவத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். அப்போது தமிழின் தொன்மையான மருந்து தயாரிக்கும் முறைகளை உலகம் இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். நோய் கணிப்பு குறிப்புகளை இணையத்தில் உள்ளிடும்போது அது உலகச்சொத்தாக மாறும்.  அச் சுவடிகளைத் தூய்மையாக்க அதிநவீன பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துகிறோம். அவற்றை கணினியில் சேமிக்கவும் தெளிவாக வாசிக்கவும் சிறந்த மென்பொருள்களை பயன்படுத்திவருகிறோம். எனவே அரியசுவடிகளை அருகில் உள்ள சுவடிப் பாதுகாப்பாளர்களிடம் தரலாம்” என்று பேசினார்.
திருநெல்வேலி அரசினர் சித்தமருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள்,மருத்துவ மாணவமாணவியர் கலந்துகொண்டனர். அரிய சுவடிகளை எண்மப்படுத்த தந்த இரு மருத்துவர்களுக்கு விழாவில் நினைவுப் பரிசும் எண்மப்படுத்திய அவர்களின் சுவடிக் குருந்தட்டையும் பாண்டிச்சேரி பிரஞ்சு நிறுவன மருத்துவ மானுடவியல் முதன்மை ஆய்வாளர் டாக்டர் பிரிகிட்டி செபாஸ்டியா வழங்கிப் பாராட்டினார். உலகப் புத்தகதினத்தில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் ச.மகாதேவன் எழுதி மலேயாப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் நூல்களை டாக்டர் பிரிகிட்டி செபாஸ்டியாவுக்கு திருநெல்வேலி அரசினர் சித்தமருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் சுபாஷ்சந்திரன் வழங்கினார்.
படத்தில் : பாண்டிச்சேரி பிரஞ்சு நிறுவனத்தால் எண்மப்படுத்தப்பட்ட அரிய ஓலைச்சுவடிகளின் குறுந்தட்டை பிரஞ்சு நிறுவன மருத்துவ மானுடவியல் முதன்மை ஆய்வாளர் டாக்டர் பிரிகிட்டி செபாஸ்டியா பாரம்பரிய மருத்துவருக்குத் தருகிறார்.அருகில் திருநெல்வேலி அரசினர் சித்தமருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் சுபாஷ்சந்திரன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் ச.மகாதேவன் ஆகியோர் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்