முனைவர் சௌந்தர மகாதேவனுக்கு ஸ்ரீ மகா சுவாமி ஜெயந்திவிருது



செயல் அதுவே சிறந்த சொல் என்று வாழ்ந்த மகான் காஞ்சி மகாபெரியவர் அவர்கள்.1992 இல் காஞ்சி பீடம் நடத்திய கட்டுரைப்போட்டியில் கலந்துகொண்டேன், ஆனால் பரிசு பெறவில்லை.அப்போது தூய சவேரியார் கல்லூரி முதல்வராக அருட்தந்தை இன்னாசிமுத்து அடிகளார் பணியாற்றினார்கள். நான் அப்போது சேவியர் கல்லூரியில் பி.எஸ்.சி.வேதியியல் மாணவன். வகுப்பில் இருந்தபோது கல்லூரி முதல்வராக அருட்தந்தை இன்னாசிமுத்து அடிகளார் அழைத்ததாக அலவலக ஊழியர் சொன்னார்.அவரது அறைக்குச் சென்றேன்.அங்கே காஞ்சிப்பெரியவர் அனுப்பியதாகக் காஞ்சி மடத்திலிருந்து ஒரு பெரிவர் நின்றிருந்தார். “போட்டியில்  வெற்றிதோல்விகள் சகஜம் உங்களுக்குப் பெரியவா பேனா தந்து அனுப்பியுள்ளார்கள்..தொடர்ந்து எழுதுவீர்களாம்” என்றவர் அருட்தந்தை அவர்களிடம் பேனாவைத்தந்து எனக்குத் தரும்படிப் பணித்திருந்தார். 

கண்ணீர் வந்துவிட்டது. “காஞ்சி மகான் வாழ்த்தியபடி நீ நிறைய எழுதவேணும்” என்றார் அருட்தந்தை அடிகளார். சரியாக  இரண்டுஆண்டுகளில் பாரதப் பிரதமரின் சத்பவனா கட்டுரைப்போட்டியில் தேசியமுதலிடம் பெற்றேன்.புதுடெல்லி விக்யான் பவனில் தேசியவிருது வழங்கும் விழா..நன்றாக நினைவிருக்கிறது..தமிழ்நாடு விரைவுத்தொடர்வண்டிக்காக சென்னை சென்ட்ரல் நிலையத்தில் காத்திருக்கிறேன்..

 அந்த நாள் சனவரி 8,1994.. மகா சுவாமிகள் ஜீவசாமதி அடைந்ததாகவும் அதில் கலந்துகொள்வதற்காக பாரதப்பிரதமர் திரு.பி.வி.நரசிம்மராவ் அவர்கள் சென்னை வருவதாகவும் தூர்தர்ஷன் செய்திசொல்லிக்கொண்டிருந்தது. விருது பெற்றபின் பெரியாவா அவர்களைச் சந்தித்து ஆசிபெறலாம் என்றிருந்தபோது அவர்கள் ஜீவசமாதியான செய்தி என்னை வெகுவாகத் தாக்கியது. 

அதன்பின் அதேஆண்டில் சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளியில் ஸ்ரீ ஜெயேந்த்ர சரஸ்வதி சுவாமிகளிடம் விருதுகள் பெற்றிருக்கிறேன்.நான் எப்போதும் மதிக்கும் அந்தக்காஞ்சி மகான் பிறந்த இந்த அனுசம் நன்னாளில் மதுரையில் உள்ள யுவகலாகேந்திரா அமைப்பின் சார்பில் நெல்லைபாலு இந்த நிகழ்ச்சியைச் சென்னையில் ஏற்பாடு செய்ததுதும் மகாபெரியவா அவர்களின் 123 ஆண்டு பிறந்தநாள் விழாவில் அவர் பெயரால் ஸ்ரீ மகா சுவாமி
ஜெயந்திவிருதினை காஞ்சி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருக்கரங்களால் துணைவியாரோடு மகன்களோடு பெற்றதும் மறக்கஇயலாத நிகழ்வாய் அமைந்தது. நான் எழுதி மலேசிய மண்ணில் கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார் நூல்களை மேடையில் அவர்களிடம் தந்ததும் புன்னகையோடு அதை வாங்கி எல்லோரும் பார்க்கும்படியாக உயர்த்திக்காட்டியதையும் “ இன்னும் நிறைய நூல்கள் எழுத என் ஆசிர்வாதம்” என்று சொல்லி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசிவழங்கியதும் மறக்கமுடியாத நிகழ்வுகள். அதே விழாவில் முகநூல் நண்பர்கள் திரு.லேனாதமிழ்வாணன்,திரு.ரவி தமிழ்வாணன்,பாவையர்மலர் ஆசிரியர் திரு.வான்மதி, இந்து நாளிதழ் செய்தியாளர் திரு.குள .சண்முகசுந்தரம், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிப் பேராசிரியர் திரு நெல்லை கவிநேசன் உள்ளிட்ட பெருமக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதும் அவர்களோடு பேசிமகிழ்ந்ததும் அந்தக்காஞ்சி மகான் தந்த அருட்கொடையன்றி வேறென்ன?

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்