தி இந்து கலை ஞாயிறு சௌந்தர மகாதேவன் கட்டுரை

எழுத்து ஆன்மாவின் நுண்மொழி. அது எப்போதும் கிளம்பிவரும் கடலலை அன்று, 
 எப்போதோ வெளிக்கிளம்பும் புதுப்புனல். உயர்ந்த எழுத்து ஒவ்வொரு தலைமுறைக்கும்  ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு உள்ளார்ந்த  பொருளை மௌனமாய் பிரதிவழியே தந்துகொண்டேயிருக்கும். அதேபடைப்பு அதே  வாசகனுக்கேகூட வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பொருளைத் தந்து கொண்டேஇருக்கும்.

 ஊடக கவனம் இல்லா நாட்களில் மௌனி எழுதியது 24 கதைகள்தான், சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் எழுதியது நூற்றுக்கும் குறைவான கதைகளைத்தான். ந. பிச்சமூர்த்தி எழுதாமலேயே பலஆண்டுகள் இருந்திருக்கிறார்.

அச்சு எந்திரத்தின் விரைவோடு போட்டிபோட்டு எழுதவேண்டிய சூழல், புத்தகத் திருவிழாவுக்கும், பதிப்பகங்களின் விருப்பத்திற்கும் இதழ்களின் தொடர்களுக்கும் எழுதவேண்டிய நிர்பந்தம் இவற்றால் காலம்கடந்து நிற்கும் தரத்தை இழந்துவிடவேண்டிய நிலைக்கு உட்படுகிறார்கள்.
சந்தர்ப்பத்தினாலோ நிர்ப்பந்தத்தினாலோ எழுதிக் குவிக்கப்படும் எழுத்துகள் எப்படித் தரமுடையதாய் அமையும்? ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதியதில் காலஓட்டத்தில் எஞ்சி நிற்கப்போவது தரமான சிலநூறு பக்கங்கள்தான். எவ்வளவு எழுதினார்கள் என்பதைவிட எழுதியதில் எழுத்தாக மிஞ்சியது எது

எழுத்து சுயஅனுபவத்தின் திரட்சி. மொழியின் சுருக்கெழுத்து படைப்பு, மிதமிஞ்சி எழுதப்படும் படைப்பு ஏற்கனவே அதே படைப்பாளியால் எழுதப்பட்ட இன்னொரு படைப்பின் வேறுவிதமான நகல் என்பதை வாசகன் உணரும் நேரத்தில் அப்படைப்பாளியின் படைப்புகளைவிட்டு  வாசகன் அப்பால் நகர்கிறான்.

 மௌனியோடு கி. அ.சச்சிதானந்தம் நடத்திய நேர்காணலில் இலக்கியத்திற்கான வரையறையை மௌனி, “ எதைச் சொல்லுகிறோம் என்பது, எப்படிச் சொல்லுவது என்ற உணர்வுடன் கலந்து உருவாவதுதான் இலக்கியம். ஒன்றைவிட்டால் இரண்டும் கெட்டு ஒன்றுமே இலக்கியமெனத் தோன்ற உண்டாகாது” என்கிறார்.

சுபமங்களா நேர்காணலில் வண்ணநிலவன், “ இலக்கியம் என்பது சங்கீதம்.ஓவியம் மாதிரி கலை சம்பந்தப்பட்டதுதான். இது வாழ்வு சம்பந்தப்பட்டது என்கிறோம். இதில் நாட்டுப் பிரச்சனையோ வீட்டுப் பிரச்சனையோ இருக்கலாம்.சமூகப் பிரச்சனையைச் சொல்வதுதான் அதற்கு அளவு என்று சொல்லமுடியாது.இலக்கியத்தில் முதலும் முடிவுமானது ரசனைதான்” என்று சொன்னார்.ரசனை இல்லாமல் இலக்க்கியம் படைக்கவோ படிக்கவோ முடியாது.

யாரலும் நகல் எடுக்கமுடியாத படைப்பைத் தர எழுத்தாளன் வெகுகாலம் காத்திருக்கவேண்டியிருக்கிறது. விருதுகளாலும் ஊடக ஊக்குவிப்புகளாலும் ஒரு படைப்பு கவனம் பெறுமே தவிர அதன் தரமும் உண்மைத்தன்மையும் அதை காலம் கடந்து நிலைக்க வைக்கும். எழுத்து என்பது பக்கக் குவிப்போ புத்தகத்தை எழுதிக்குவிப்பதோ இல்லை.அது சுருக்கத்தின் நெருக்கத்தில் நிற்கும் சுகஅனுபவம். ஒரு படைப்பை இன்னொரு படைப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இன்று சிரமப்படத் தேவையில்லை, கணினியின் சுட்டியாலும் தேடுபொறிகளின் உதவியாலும்  ஒரு வினாடிக்குள் எந்தப்படைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்துவிடமுடியும். இணையம் தந்திருக்கிற கட்டற்ற சுதந்திரத்தில் இன்று படைப்பாளி தன் படைப்பைத் எழுதியபின் தானே மீண்டும் வாசித்து தொகுத்து வகுத்து வெட்டி சரியான முழுமையான பிரதியாக அச்சுக்குத் தருவதே எழுத்து அறமாகும்.அப் படைப்பே காலம் கடந்து நிற்கும். தன்னைப் பற்றிய மிதமிஞ்சி பிம்பம் தன் படைப்புகுறித்த போலி பிம்பத்தைக் கட்டமைத்துவிடும். முழுமையை நோக்கிய கவனமான நகர்த்துதலை மேற்கொள்ளாத எந்தப் படைப்பையும் தரமான வாசகன் புறந்தள்ளி விடுவான்.எனவே படைப்பு நேர்த்தியோடு இயைந்த நுண்கவனத்தோடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இல்லையேல் சிறுதொடுகையால் உட்சுற்றிக்கொள்கிற ரயில்பூச்சியைப்போல் உட்சுற்றிக் கொள்ளவேண்டி வரலாம்.பல படைப்பாளிகளின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கும் திறமான தரமான வாசகன் எழுத்தின் உண்மைத்தன்மையை உய்த்துணர்ந்து விடுவான்.எழுதவேண்டும் என்று உள்ளுணர்வு கிளர்ந்தெழுந்தால் மட்டுமே எழுதவேண்டுமே தவிர எப்போதும் எழுதிக்குவிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. க.நா.சு.வோ, சி.சு.செல்லப்பாவோ, பி.எஸ்.ராமையாவோ, புதுமைப்பித்தனோ படைப்பாளியாக இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எது நிராகரிக்க வேண்டிய படைப்பு என்பதை வெகு துணிச்சலாக தயவுதாட்சண்யமின்றிக் காரணங்களோடு எழுதிய திறனாய்வாளர்களாக இருந்தார்கள். 

அதனால் ஒரு படைப்பின் விமர்சனம் அடுத்த படைப்பைக் கவனமாகப் படைப்பதற்கான ஒர்மையைப் படைப்பாளிகளுக்குத் தந்தது. தன்னை மங்கலாக்கித் தான் சொல்லவந்த கருவை அவர்களால் அழுத்தமாகத் தரமுடிந்தது. இன்று படைப்பைவிடத் “தான்” துருத்தி நிற்பதால் படைப்பு படைப்பாளியின் கண்முன்னே நீர்த்துப்போகிறது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் மொழிநடையாலும் கருவாலும் எடுத்துரைக்கும் நேர்த்தியாலும் இன்றுள்ள தலைமுறைக்கும் வெகு நெருக்கமாக இருக்கிறது.அப்படிப்பட்ட படைப்புகள் இன்று எத்தனை தேறும்? என்று எண்ணிப்பார்த்தால் கிடைக்கும் பதில் என்னவாக இருக்கும்?

 

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்