திருநெல்வேலி மேலும் அறக்கட்டளையின் திறனாய்வாளர் விருது

உலகஅளவில் சிறந்து விளங்கும் சிறந்த தமிழ் இலக்கியத் திறனாய்வாளருக்கு திருநெல்வேலி “மேலும்” அறக்கட்டளையின் சார்பில் ஒருலட்சரூபாய் விருது

 பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர் பேராசிரியர் நா.சிவசுப்பிரமணியன் (70) எண்பதுகளில் மேலும்என்கிற இலக்கிய இதழைத் தொடங்கி நவீன கோட்பாடுகளைக் கல்விப் புலத்திற்கு அறிமுகப்படுத்தி நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களை உருவாக்கியவர்.
படைப்புலகக் கருத்தரங்குகள்
வல்லிக்கண்ணன், வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்களின் தடம்பதித்த இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர். மேலும்வெளியீட்டகம் மற்றும் மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் படைப்புலகக் கருத்தரங்கினை திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும், கவிஞர் கலாப்ரியா படைப்புலகக் கருத்தரங்கினை குற்றாலம் பராசக்தி கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குருஸ் படைப்புலகக் கருத்தரங்கினை தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரித் தமிழ்த்துறையோடும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் படைப்புலகக் கருத்தரங்கினை திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரித் தமிழ்த்துறையோடும் எழுத்தாளர் வண்ணநிலவன் படைப்புலகக் கருத்தரங்கினை பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரித் தமிழ்த்துறையோடும் இணைந்து நடத்தியவர்.
“மேலும்” இலக்கிய அமைப்பு
தமிழகத்தின் சிறந்த இலக்கியத் திறனாய்வாளருக்கான மேலும்இலக்கியத் திறனாய்வாளர் விருதினை நான்காண்டுகளாக வழங்கிவருகிறார். கடந்த ஆண்டுமுதல் சிறந்த இளம்படைப்பாளர் விருதையும் வழங்கிவருகிறார்.
தன்னிடம் சவேரியார் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயின்ற தன் மாணவர்கள் வே.கட்டளை கைலாசம், சௌந்தர மகாதேவன் ஆகியோருடன் இணைந்து மேலும் இலக்கிய அமைப்பை ஐந்தாண்டுகளுக்கு முன்தொடங்கி ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமைகளில் பாளையங்கோட்டை சைவசபையில் நவீனத் தமிழ்இலக்கியக் கருத்தங்குகளை நடத்திவருகிறார். பெங்களூரில் இருக்கும் திறனாய்வாளர் தமிழவனுடன் இணைந்து சிற்றேடு எனும் காலாண்டிதழை நடத்தி தொடர்ந்து இலக்கியக் கட்டுரைகளை எழுதிவருகிறார்.
இலக்கிய நிகழ்வுகள்
மண்சார்ந்த இலக்கியங்களை மண்சார்ந்த இடங்களில் சென்று பேசுவோம் என்கிற திட்டத்துடன் திருப்புடைமருதூரில் தாமிரபரணி நதிக்கரையோரம் வண்ணதாசனுடன் அவரது சாகித்ய அகாடெமி விருது பெற்ற சிறுகதைத்தொகுதியான ஒரு சிறுஇசைநூல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை சனவரி 5, 2017 இல் நடத்தினார். நெஞ்சினிக்கும் நெய்தல் என்ற பொருளில் நெய்தல் சார்ந்த இலக்கிய நிகழ்வை திருச்செந்தூர் மணப்பாடு கடற்கரையில் ஜூன்,10,2017 இல் நடத்தினார்.

ஒரு லட்சரூபாய் பரிசுத்தொகை
அவர் குடும்பத்தார் சார்பில் திருநெல்வேலியில் மேலும் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு உலக அளவில் சிறந்து விளங்கும் சிறந்த தமிழ்இலக்கியத் திறனாய்வாளருக்கு வரும் ஜூன் 29,2018 ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் “மேலும்” அறக்கட்டளையின் “மேலும்” திறனாய்வாளர் விருதும் ஒரு லட்சரூபாய் பரிசுத்தொகையும் திருநெல்வேலியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பாளையங்கோட்டை சைவசபையில் 16.8.2017 புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற மேலும் இலக்கிய அமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேராசிரியர் மேலும் சிவசு வெளியிட்டார்.
இலக்கியக் கோட்பாடுகள் குறித்த கருத்தரங்கு
மேலும் வெளியீட்டகமும் மேலும் இலக்கிய அமைப்பும் இணைந்து 16.8.2017 புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற இலக்கியக் கோட்பாடுகள் குறித்த கருத்தரங்கில் மதிதா இந்துக் கல்லூரித் தமிழ்த்துறையின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கட்டளை கைலாசம் வரவேற்றுப் பேசினார். சுரண்டை அரசினர் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ரமேஷ் நாட்டுபுறப்பாடல் பாடினார்
முதல் அமர்வு
முதல் அமர்வில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் “கணையாழி படைப்புகள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றியபோது.. “ முப்பதுகளில் தமிழில் தொடங்கிய இலக்கிய இதழ்களின் இயக்கம் எண்பது ஆண்டுகள் கடந்தும் நீடிப்பது நவீன இலக்கியப் படைப்பாளிகளின் வரவுக்கு அடித்தளமிட்டது. புதுமைப்பித்தனில் தொடங்கி இன்று வரை எண்ணற்ற தமிழ்ப் படைப்பாளர்கள் மணிக்கொடி, எழுத்து, கணையாழி, தீபம், கசடதபற போன்ற இதழ்களால் உருவானார்கள். தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் புதிய சோதனை முயற்சிகளையும் தமிழ்ப்பண்பாடு சார்ந்த கலைவடிவங்களையும்  சிறுபத்திரிகைகள் முன்னெடுத்தன. தமிழ்ப் புதுக்கவிதைகளைக் கல்விப்புலத்திற்குள் கொண்டுசெல்லும் பணியையும் புதிய இலக்கிய வடிவங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் பணியையும் கணையாழி  இதழ் செய்தது.” என்று பேசினார்.
இரண்டாம் அமர்வு:
இரண்டாம் அமர்வில் “பன்மைத்துவம் ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய மேலும் சிவசு, “  தற்கால இலக்கியத்தை மாணவர்களிடம் கொண்டுசெல்லும் பணியைத் தமிழாசிரியர்கள் செய்யவேண்டும். பன்மைத்துவக் கலாச்சாரம் உடைய இந்திய நாட்டில் ஒருமைப் படுத்தப்பட்ட கலாச்சாரத் திணிப்பு என்பது ஆபத்தானது. செம்மொழி நிறுவனத்தைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லும் முயற்சி நடக்கிறது.தேசிய நெடுஞ்சாலைகளில் மைல் கற்களில் இந்தி இடம்பிடித்து தமிழை வெளியே தள்ள முயற்சி நடக்கிறது. தமிழ்ச்சிறுகதைகள்,தமிழ் நாவல்களில் இன்றுள்ள பல குரல்கள் நாளை ஒரு குரலாக்கப் படலாம். இந்தியா போன்ற பன்மைத்துவம் பேணப்படும் நாட்டில் எல்லாவற்றையும் ஒருமைப்படுத்த நினைப்பது ஆபத்தானது.” என்று பேசினார்.




Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்