தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்


        தமிழ் இலக்கியப் பதிவுகளில் சூரசம்ஹாரம்


            பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி


சஷ்டியில் விரதமிருந்தால் அகம் எனும் பையில் அருள்சுரக்கும்! அந்த அளவு வலிமை மிகுந்த கந்தர் வழிபாடும் சூரசம்ஹாரமும் பல நூறு ஆண்டுகளாகத் தமிழகத்தில் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டதைத் தமிழ் இலக்கியம் பாடல்வரிகளால் பதிவுசெய்துள்ளது.  தேவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்களைத் தந்துவந்த சூரபத்மனின் அகந்தையை அழிப்பதற்குச் சிவபெருமான் தன் அதோமுகத்தைக் காட்ட அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளிருந்து ஆறுமுகங்கள் ஆறு குழந்தைகளாய் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் தாமரை மலர்களில் எழுந்தருள, அவர்களை ஆறுகார்த்திகைப் பெண்கள் வாரியணைக்க ஈசன் சில காலத்தில் ஆறுமுகப்புதல்வர்களை ஒன்றாக்கினார்.

முருகப்பெருமான் சூரனை அழிக்க நூறுமுகங்களின் ஒளிப்பிழம்போடு ஆறுமுகமாய் அவதரித்தார். அன்னை பராசக்தி தன் சக்தியை ஒன்றுதிரட்டிச் சக்திவேலை தந்தாள். தாய் தந்த வேலை சூரபத்மன் மீது திருமுருகன் வீச அவன் மாமரமாய் மாயத்தோற்றம் எடுத்தான். முருகனின் சக்திவேல் அம்மரத்தைப் பிளக்க, மயிலாகவும் சேவலாகவும் சூரபத்மன் மறுவடிவம் எடுக்கிறான். செந்தில்நாதன் அம் மயிலைத் தன் வாகனமாகவும் சேவலைத் தன் கொடியாகவும் மாற்றி ஜெயந்திநாதனாய் காட்சிதந்தான். செந்தில்நாதன் சூரபத்மனை வேலாயுதத்தால் அழித்துப் போரில் வென்றபின் செந்தில் எனும் பெயர் பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் ஜெயந்திநாதனாய் வெற்றிக்கோலத்தோடு எழுந்தருளியதைத் தமிழ் இலக்கியப் பதிவுகளில் காணமுடிகிறது.

கந்தபுராணம்: சூரசம்ஹாரத் தத்துவம்

 “நாதவிந்து கலாதீ நமோ நம” என்று அருணகிரிநாதர் திருப்புகழில் சொல்வதைப் போன்று இறைவனிடமிருந்து வந்த நாம் மீண்டும் இறைவனையே சென்றடைய வேண்டும் என்பதைக் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் சூரசம்ஹாரத்தின் தத்துவமாக  உணர்த்துகிறது. திருமுருகனின் வீரவேல் சக்திவேலாய் புறப்பட்டு அவன் தலையை அறுக்கிறது. தாரகாசூரன் உலகமே உண்மை என வாழ்ந்து பின்னர் அதைப் பொய் எனத் தெளிந்தழிகிறான், மாயா மலம் அவன்! கன்ம மலமாய் சிங்கமுகாசூரன் மீண்டும் தலையசைத்து வருகிறான், செந்திலம்பதியில் கன்மமலத்தின் கழுத்தை முருகன் அறுத்தெறிகிறார். அடுத்து அலைவாய்க் கரையில் கண்களை உருட்டியபடி ஆணவத்தின் அடையாளமாய் சூரபத்மன் செந்தில்வேலன் முன் நின்று ஆர்ப்பரிக்கிறான்.  அவன் இறுமாப்பை சக்திவேல் அழிக்கிறது.

 ஆணவம், மாயை, கன்மம் எனும் மும்மலங்களையும் அலைவாய்க்கரையில் அழித்து ஜெயந்திநாதனாய் முருகன் காட்சி தரும் திருவிழாவே சூரசமஹாரம் என்று கந்தபுராணம் விளக்குகிறது. எல்லா அறிவும் பெற்றும் மூன்று அசுரர்களும் இறைவனின் வலிமையுணராமல் தான் என்ற அகந்தையால் தங்களை அழித்துக் கொண்டார்கள்! 

திருமுருகனின் சக்திவேல் அவர்களை அழித்துத் தமதாக்கியது என்பதை “  தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்/  தூயவராகி மேலைத் தொல் கதி அடைவர்/ என்கை ஆயவும் வேண்டுங்கொல்லோ அடுசமர் இந்நாட் செய்த மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள் பெற்று உய்ந்தான்"   
கந்தபுராண வரிகள் பகைவனுக்கும் அருள்புரியும் கந்தவேளின் உயர்நெஞ்சத்தை உணரவைக்கிறது. “திருமுருகா! உன் திருவடிகள் சரணம்!” என்று சரணாகதியடைந்தால் அவர்களைத் தூயவர்களாய் உருமாற்றி தன் கைக்குள் வைத்துக் கொண்டாடுவான் குமரன் என்பதையே ஒவ்வோராண்டும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஆறுநாட்கள் தொடரும் கந்தசஷ்டித் திருவிழாவும் சூரசம்ஹாரமும் நமக்கு உணர்த்துகிறது.

கந்தர் அலங்காரம்

அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரத்தில் ஓசைநயத்தோடு போர்க் கோலம் பூண்டுவந்த செந்தில்நாதனைக் காணமுடிகிறது,  சூர்மீது கதிர்வேல் எறிந்தவனாய், சுவர்ண கிரௌஞ்சகிரி ஊடுருவத் தொளைத்த வைவேல் உடையவனாய், அசுரர்களை அச்சுறுத்தும் சூரபயங்கரனாய் திருமுருகன் காட்சிதருகிறார். சூரனை அழிக்க வேலாயுதம் விரைகிறது, அவன் சேவலாகவும் மயிலாகவும் போர்க்களத்தில் உருமாறுகிறான், விடவில்லை வேலன், எதிரியின் அகந்தையை அழித்து தன் வெற்றியின் சின்னமாய் அவனைச் சேவற்கொடியாக்கித் தன் கைக்குள் வைக்கிறான். வேலாயுதம் பட்டவுடன் அச்சேவல் வேகமாய் தன் சிறகை அடித்துக் கொண்டபோது செந்தூர்க் கடலானது உடைந்து போயிற்று! அண்டத்தின் முகடுகள் இடிந்து உதிர்ந்தன, நட்சத்திரக் கூட்டங்கள் தடுமாறின, ஏனையமலையும் மகாமேருவும் இடிபட்டன என்று அச்சத்தோடு   “வேலவன்பால் வந்த வாகைப் பதாகை என்னும்/ தடைபட்ட சேவல் சிறகடிக்கொள்ளச் சலதி கிழிந்து/  உடைபட்டது அண்டகடாகம் உதிர்ந்தது உடுபடலம்/ இடைப்பட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே” அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் சூரசம்ஹாரக் காட்சியை வர்ணிக்கிறார்.

திருப்புகழ்

அருணகிரிநாதரின் திருப்புகழ் திருச்செந்தூர் சூரசம்ஹாரக் காட்சியை அழகான ஓசைநயத்தோடு நேரலை போல் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. ரிஷிகளைத் துன்புறுத்திய அரக்கனை அழிக்க ஆறுமுகத்தான் கிளம்பிவருவதைப் பார்க்கிறார் அருணகிரியார், “ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே/ ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே/ கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே/ குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே/ மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே/ வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே/ ஆறு முகம் ஆன பொருள் நீ, அருளல் வேண்டும்/ ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!” என்று மனமுருகிப் பாடுகிறார். மாறுபடு சூரரை வதைத்த முருகனின் திறத்தைத் திருப்புகழில் விளக்குகிறார்.

திருமுருகாற்றுப்படையில் செயந்திநாதன்

மாறுபடு சூரரை வதைத்து ஜெயந்திநாதனாய் திருச்சீரலைவாயில் ஆறுமுகங்களோடும் பன்னிருகரங்களோடும் முருகன் அருள்பாலிப்பதைத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் அழகாகப் பாடியுள்ளார். சூரபத்மனை வென்ற அலைவாய்க் கரையில் தங்குவதற்காக பிணிமுகம் எனும் யானையின் மீதேறி முருகப்பெருமான் வருகிறார். அவரது திருமுடியில் ரத்னக்கிரிடம் ஜொலிக்கிறது. அவர் காதில் மகரக் குழைகள் அசைகின்றன. ஆறுமுகங்களும் ஆறுசெயல்களைச் செய்கின்றன என்று விளக்குகிறார்.

கந்தர் கலிவெண்பா

குமரகுருபரசுவாமிகள் அருளிய கந்தர்கலிவெண்பாவில் முருகக் கடவுளின் திருவிளையாடல்களை விளக்குமிடத்து சூரசம்ஹாரக் காட்சிகளை முன்வைக்கிறார். “கொன்னெடுவேல் தாரகனும் மாயத் தடங்கிரியுந் தூளாக வீர வடிவேல் வடித்தோனே! சிங்கமுகனை வென்று வாகை முடித்தோய்! மாவாய்க் கிடந்த நெடுஞ் சூருடலங்கீண்ட சுடர் வேலோய்! என்று விளக்குகிறார்.

சிலப்பதிகாரத்தில் செந்திலதிபன்

தமிழின் முதல்காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இச்செந்திலதிபன் பற்றிய குறிப்புகள் உண்டு.  சிலப்பதிகாரக் காப்பியத்தில் இளங்கோவடிகள், “ சீர்கெழு செந்திலும் நீங்கா இறைவன்” என்று பதிவுசெய்துள்ளார். 

புறநானூறு

பாண்டியன் இளவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை புறநானூறு- 55 பாடலில் புகழ்ந்துபாடிய மதுரை இளநாகனார் திருச்செந்தூர்க் கடற்கரையில் பெருங்காற்றுத் திரட்டிக் குவிந்திருக்கும் மணலினும் காட்டில் நெடுநாள் புகழுடன் நீயும் வாழ்வாயாக! என்று “வெண்டலைப் புனரி யலைக்குஞ்செந்தில் நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை” எனும் பாடலில் வாழ்த்துகிறார். வெற்றித்தலமான திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள மணலைக் காட்டிலும் பாண்டியன் நன்மாறனை அதிக ஆண்டுகள் வாழ்வாயாக என்று வாழ்த்திய முறைமையைக் காண்கிறோம்.

அகநானூறு

நீடூர் தலைவனாகிய எவ்வி என்பவனின் போர்மறத்தைச் சிறப்பித்து சங்கப் புலவர் பரணர் பாடிய அகநானூற்றுப் பாடலில் முருகனின் போர்ச் சிறப்பை விளக்கி “அழகிய மணிவிளக்குகளையுடைய அலைவாய் எனும் இடத்தில் வீற்றிருந்தருள்புரியும், போர் வலிமை மிகுந்த முருகனோடும் பொருத்தி, என்னை மணந்தபோது செய்த சூளுறவே எனக்குத் துன்பம் தருவதாகும்” என்று தலைவனை மறுத்துத் தலைவி கூறுவதாய் அமைகிறது. மாபெரும் வெற்றிவீரனான செயந்திநாதன்மீது சூளுரைத்துப் பின்னர் மீறிய தலைவன் செயலைத் தலைவி “திருமணி விளக்கினலைவாய் செருமிகு சேஎயொடு உற்ற சூளே” எனக் கடிந்துரைப்பதாய் எழுதப்பட்ட இப்பாடல் முருகனின் சிறப்பை அழகாக விளக்குகிறது.

அறுபடைவீடமர் அருள்முருகன்: திருச்செந்தூர் படைவீடு
திருப்பரங்குன்றம், திருவாவினன்குடி எனும் பழனி, திருவேரகம் எனும் சுவாமிமலை, குன்றுதோறல் எனும் திருத்தணி, திருமாலிருஞ்சோலை எனும் பழமுதிர்ச்சோலை என்று குன்றுதோறாடும் குமரக்கடவுளின் மற்ற ஐந்துபடைவீடுகளும் மலைப்பகுதியிலிருக்க அறுபடைவீடுகளுள் இரண்டாம் வீடாகத் திகழும் திருச்சீரலைவாய் எனும் பெயர் பெற்ற திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ளது. சூரனை அழிப்பதற்காகத் திருமுருகன் படைவீடு அமைத்துத் தங்கிய இடம். பிறவி எனும் பெருங்கடலைக் கடக்க உதவும் தெப்பமாக முருகப்பெருமானின் திருவடிகள் உதவுகின்றன என்பதால் அவன் பாதார விந்தங்களில் விழுந்து பரவ உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள்.
அநீதி அகன்று நீதி என்றும் நிலை பெறும் என்பதை உணர்த்தும் நிகழ்வே சூரசம்ஹாரம்!

 கட்டுரையாளர் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர்


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்