திருநெல்வேலி புத்தகத்திருவிழாவில் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் உரை

     
 திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் ச.மகாதேவன் சிறப்புரை 
மக்கள் வாசிப்பு இயக்கம் பாளையங்கோட்டை செல்வி மகால் திருமணமண்டபத்தில் நடத்திக்கொண்டிருக்கும் நெல்லை புத்தகத்திருவிழா-2017 இரண்டாம் நாள் நிகழ்வு மழையின் காரணமாக இரவு எட்டுமணிக்குத் தொடங்கியது. மக்கள் வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வீரபாலன் வரவேற்றுப்பேசினார். வரலாற்றறிஞர் செ.திவான் நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்துத் தலைமையுரையாற்றினார். நிலா இலக்கியவட்டப் பொறுப்பாளர் ராஜகோபாலுக்கு மக்கள் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ச.மகாதேவன், செ.திவான் ஆகியோர் பாராட்டுக் கேடயம் வழங்கினர். விழாவில் பங்கேற்று “மாணவர் வாசிப்பு இயக்கமும் எதிர்காலமும்” எனும் தலைப்பில் பேசிய கருத்துகள்..
         “வாசிக்காத நாள், இப்புவியில் நாம் வசிக்காத நாள். வாசிப்பதை நிறுத்தும் சமுதாயம் மனிதர்களின் நேசிப்பையும் நிறுத்தத்தான் செய்யும்.வாசிக்க மறுப்பது சுவாசிக்க மறுப்பதைப் போன்று ஆபத்தானது. வாசிப்பின் வாசனையை உணர்ந்தவர்கள் அதை ஒரு நாளும் நிறுத்தமாட்டார்கள். நம் அறிவுவாசலின்படிகள் நூல்களால் கட்டமைக்கப்படுகின்றன.

வாழும்கலையைக் கற்றுத்தருவதே வாசிப்புப் பழக்கம்தான். வாசித்தல், காலையில் நம் வீட்டுக்கதவில் செருகப்பட்டிருக்கும் செய்தித்தாளிலிருந்து தொடங்குகிறது. ஓராண்டில் சராசரியாக ஓர் இளையோர் இரண்டாயிரம் பக்கங்கள் வாசிக்க வேண்டும்” என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் நிர்ணயித்துள்ள நிலையில், நம் தமிழக இளையோர் ஆண்டுக்கு 32 பக்கங்கள் கூடப் படிப்பதில்லை என்பது எத்தனைத் துயரமானது?

தனிமைக் கொடுமையை நீக்கும் உயர்வரம் நூல்களே. மன அழுத்தம் குறைக்கும் மாமருந்தும் நல்ல நூல்கள்தான். அலெக்ஸ்சாண்டரும், பாபரும், அக்பரும், பாரசீக மன்னர் அப்துல்காசிமும் கலீல்ஜிப்ரானும் போற்றிப் பாதுகாத்த அறிவுக்கருவூலங்கள் நூல்கள். “வாசிப்பதுதான் ஒரு மனிதனை முழுமையானவனாக்கும்” என்ற அறிஞர் பேகனின் பொன்மொழி எத்தனைப் பொருள் பொதிந்தது! 
வீடியோ கேம்களிலும், இணையதள விளையாட்டுக்களிலிருந்தும், செல்பேசிகளின் சமூக வலைதளங்களிலிருந்தும்,தொலைக்காட்சியின் சோட்டா பீம்களிலிருந்தும் அவர்களை நாம் மீட்கத் தவறிவிட்டோம்.கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாய் உடைந்துபோன சோகத்தின் சாட்சிகளில் கதைசொல்லிகளான பாட்டிதாத்தாகளுக்குப் பதிலீடாய் தனிமையை விரட்டத் தொலைக்காட்சிப் பெட்டிகளில், இணையதளங்களில் தொண்ணூறுகளில் தொலைந்துபோன அந்த ஆறுவயதுக் குழந்தைகள்தான் இன்று வாட்ஸ்அப்களில்,முகநூலில் முகம்புதைத்துக் கொண்டிருக்கக் கூடிய இளைஞர்கள்..அவர்களை மீட்டெடுத்து வாசிப்பு எனும் தியானத்தின் பெருமகிழ்வை கற்றுத்தரவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
 புத்தகம் என்பது வெறும் அச்சடித்த தாளும் அட்டையும் கொண்டதல்ல. அது பண்பாட்டின், அறிவு வளர்ச்சியின் ஆவணம், சமுதாயத்தின் கண்ணாடி. கிழிந்து போன சமுதாயத்தைத் தைக்கும் ஊசியே நாம் படிக்கும் நூல்கள். தமிழகத்தின் ஆக்ஸ்போர்டாக நூற்றுநாற்பது ஆண்டுகளுக்கு முன்பே திகழ்ந்த பகுதி பாளையங்கோட்டை பகுதி. சாகித்ய அகாடெமி விருது பெற்ற மிகச் சிறந்த தமிழ்இலக்கியப் படைப்பாளர்களையும் தடம்பதித்த இலக்கியத் திறனாய்வாளர்களையும் கொண்ட திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லூரிகளிலும் மாவட்ட மத்திய நூலகத்திலும் இல்லாத நூல்கள் இல்லை. சிந்தனை சார்ந்த  வாசிப்பு இயக்கத்தின் முன்னோடிகளாக நெல்லை மாணவர்கள் திகழ்ந்தார்கள்.
தமிழ்ச்சிறுகதை மன்னனாகத் திகழும் புதுமைப்பித்தன், தமிழ்ப் புதுக்கவிதைகளைத் தொடங்கிவைத்த மகாகவி பாரதியார், சுதந்திர உணர்வை நாடுமுழுக்கப் பரப்பிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை, பி.ஸ்ரீ. ஆச்சார்யா, அ.சீனிவாசராகவன், வல்லிக்கண்ணன், தி.க.சி,  மீ.ப.சோமு, சு.சமுத்திரம், வண்ணதாசன் ஆகியோர் திருநெல்வேலிக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களாகப் பயின்றவர்கள்.
உன்னதமான படைப்பாளிகளைத் தமிழுக்குத் தந்த நெல்லைக்கல்வி நிறுவனங்களில் மீண்டும் மாணவர் வாசிப்பை இயக்கமாக மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மிகப் பழைய இலக்கிய மரபைத் தன்னகத்தே கொண்ட தொன்மையான தமிழ் மொழியை மாணவர்களை வாசிக்க வைப்பதன் மூலமே அடுத்தபடிநிலை வளர்ச்சியை நோக்கி நகர்த்தமுடியும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர் வாசகர் வட்டங்களை ஏற்படுத்தி சமகால எழுத்துகளின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் நாம் மாணவர் வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்க முடியும்.மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கும் ரகசியம் அவர்களின் இடைவிடாத தொடர்வாசிப்புதான். வாசிப்பது ஒன்றே நாம் இந்த உலகில் வசிப்பதற்கான அடையாளம். ஆழமாய் வாசிக்கும்  மாணவ சமுதாயமே நாளைய மாற்றத்தின் ஆணிவேராகத் திகழப்போகிறார்கள்.

நாம் மேலிருந்து கீழாக நூல்களை வாசிப்பது கீழிருந்து மேலாக நம்மை உயர்த்தத்தான். நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டில் சமூக ஊடகங்களை விரும்பும் மாணவர்களுக்கு வாசிப்பின் சுகத்தை ஆசிரியர்களால் ஏற்படுத்த முடியும், நூல்கள் வாசிக்கும் பழக்கம் மாணவர்களின் மன அழுத்தம் குறைக்கும் அருமருந்து. தற்படம் எடுத்துக் கொள்வதைவிடத் தன்னகத்தே நூல்களோடு இருப்பது சாலச்சிறந்தது.
தொடர்ந்து தரமான எழுத்துகளை வாசிக்கும் மாணவர்கள் காலப்போக்கில் எழுதத்தொடங்கி எழுத்தாளர்களாய் மாறிப்போவார்கள். அது அவர்களின் ஆளுமையை அழகாக மாற்றிவிடும். நெல்லையைத் தன் எழுத்துகளால் படம்பிடித்து அந்த மாணவர்கள் இன்னும் பல உன்னதமான படைப்புகளை நாளை தருவார்கள். எண்பதுகளில் தமிழகப் பள்ளிகளில் இருந்ததுபோல் மீண்டும் நூலாக நேரம் கொண்டுவரப்படவேண்டும். நூல்கள் வாசிக்கும் பழக்கம் பள்ளிவகுப்பறைகளிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும். பள்ளிகளில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் நூலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்