பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் கல்யாண்ஜி கவிதைகள்



சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

மதியம் கொளுத்தும் வெயில் பாபநாசம் நோக்கிப் பயணித்தேன். காருக்குறிச்சி தாண்டியதும் முகத்தில் சில்லென்ற காற்று.வெயிலையும் மீறி முகத்தில் அறைந்தது.நெல்வாசம் நாசியை வருடியது. 

பாபநாசத்தில் வெயில் வறுத்தெடுத்தது. பாபநாசம் கோவிலுக்கு எதிரே சலசலத்தபடி தாமிரபரணியின் கம்பீரம் கல்மண்டபங்களுக்கிடையே தெளிவாகத் தெரிந்தது. 

முத்துநகர் வாசகர் வட்டமும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியும் இணைந்து  நடத்திய தாமிரபரணிக் கவிஞர்கள் கருத்தரங்கில் கல்யாண்ஜி கவிதைகள் குறித்துப் பேச அழைக்கப்பட்டிருந்தேன். 

எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் மிக உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார். கவிஞர் நெல்லை ஜெயந்தா முன் வரிசையில். கல்யாண்ஜி கவிதைகள் குறித்துப் பேசியதில் மகிழ்ச்சியே!

  புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, இன்னொரு கேலிச் சித்திரம், உறக்கமற்ற மழைத்துளி, நிலா பார்த்தல்,  கல்யாண்ஜி கவிதைகள், மணல் உள்ள ஆறு, கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள்,  என் ஓவியம் உங்கள் கண்காட்சி, நொடிநேர அரைவட்டம் ஆகியன கல்யாண்ஜியின் உயிர்த்துடிப்புள்ள கவிதைத்தொகுப்புகள். இப்போது தன் கவிதைகளை அவர் தன் முகநூல்பக்கத்தில் பதிவிட்டபின் தொகுப்பாக மாற்றுகிறார்.நீர்க்கருவைக் காட்டில் போய் விழுகிறது கிரிக்கெட் பந்து.
சூரியனைக் குனிந்து எடுத்து வீசுகிறாள் வெள்ளாடு மேய்க்கும் பதின்மி. எனும் கவிதை முகநூலில் அவர் எழுதியுள்ள கவிதை. கல்யாண்ஜியையும் வண்ணதாசனையும் விட்டுநகர முடியாத வாசகர்களாக  அவர் படைப்புகள் மாற்றிக்கொண்டிருக்கின்றன. அவர் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் வணிகவியல் பயின்றபோது மரபின் சாயலில்

அழகுக் கவிதை செய அட்சரங்கள் கோர்த்தது போல்
    அந்திக் கரைவானில் அஞ்சனத்தைக் குழம்பாக்கி
    அள்ளிப் பரப்பி அங்கிங்கே விட்டெறிந்து
    புள்ளி சேர்த்துப் புனைகின்ற கோலமென

மரபின் சாயலில்  என்று எழுதிய கவிதையை என் முனைவர் பட்ட ஆய்வில் தேடிக்கண்டுபிடித்ததைப் பகிர்ந்து கொண்டேன். தொடர்ந்து அறுபது ஆண்டுகளாய் ஒரு கவிஞர் கவிதை வடிவத்தையும் சிறுகதை வடிவதையும் சிறப்பாகக் கையாள்வது அபூர்மானது என்று பேசினேன்.

“சக்கடா வண்டிச் சக்கரங்களின் கீழ்
சீனிக் கற்கள் பொடிந்து மாவாகும்
நரநரப்பு நல்லோசை கனவில்.
சிதம்பரம் நகர் படுக்கையிலிருந்து
சிவசைலத்தில் ஓடுகிறது பின் திரும்பும் கடிகாரம்.
நீலமலையில் எரியும் தீ பார்த்துத் திகைக்கிறது
உச்சிக் கிளைப் பொதிகைக் குரங்கு.
நன்னீர்ப் பெருமீன் நடமிட்டுத் துள்ளும் 
பாணதீர்த்தத்தில்
மிதந்துகொண்டே இருக்கிறது என் ஒற்றை வரிப் பூ.

எனும் கவிதையில் சக்கடா வண்டியும் சீனிக் கற்களும் சிவசைலமும் கல்யாண்ஜியால் மிகநுட்பமாய் காட்சிப்படுத்தப்பட்டிகிறது. இசைத்தன்மையோடு, உணர்வின் பிழிவாய் கல்யாண்ஜி கவிதைகள் அமைகின்றன. 

கல்யாண்ஜிக்கு சொற்கள் வெறும்  தகவல்களைக் கடத்தும் மொழி ஊடகமன்று,அதைத் தாண்டிய நுண்குரலை அவர் உட்பொதிந்து எழுதுகிறார். கதைகளைக் கவிதைபோல் சுருக்கமாய் சுருக்கென்று தைக்குமாறு எழுதுவதும் கவிதைக்குள் கதை எழுதுவதும் கல்யாண்ஜியால் வெகுஇயல்பாய் செய்ய முடிகிறது.

தன் ஆசிரியரின் இறப்பை நெஞ்சை நெகிழ வைக்கும் கவிதையாக்குகிறார்

அவர் வேலை பார்த்த
பள்ளிக்கூடம் வழியாகத்தான்
அருணாசலம் வாத்தியாரைத்
தூக்கிக்கொண்டு போனார்கள்.
காரை பெயர்ந்த
கரும்பலகைக்கு உள்ளிருந்து
எட்டிப் பார்த்தன
அகர முதல் எழுத்தெல்லாம்.
ஒன்பதுக்கு ஒன்பது எண்பத்தொன்று
ஒப்பிக்கிற வாய்ப்பாட்டில்
தப்பிருக்கிறதா எனக் கவனிக்க
தலை சற்று அசைந்து
சாய்ந்தது போல் இருந்தது.
உருவாய் அருவாய் ... 
உதடசைத்து அவர் பாடுவதற்குள்
திருப்பணி முக்கு திரும்பிவிட்டிருந்தது
தெருவெல்லாம் பூ உதிர்த்த
அவருடைய தேர்.” 

இது கவிதையா? அல்லது சிறுகதையா? என்று சிந்திக்க வைக்கும் உத்தியை கல்யாண்ஜி கையாள்கிறார். அவருக்கு உயர்திணை அல்திணை எனும் வேறுபாடு இல்லை.

மெல்லிய புன்னகையோடு நான் வாசித்த கவிதைகளைப் பாராட்டிய எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் ஏன் சௌந்தர மகாதேவன் என்று எழுதுகிறீர்கள் என்று கேட்டார்.லா.ச.ரா.விடம் பேசியதாக உணர்ந்தேன்.


 கவிஞர் நெல்லை ஜெயந்தா நிறைவுரையாற்றும்போது “ நெல்லை புத்தகத் திருவிழாவில் சௌந்தர மகாதேவன் கல்யாண்ஜி கவிதைகள் குறித்துப் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது இப்படி சிலாகிக்க ஆசிரியர்கள் இருக்கும்வரை நாங்கள் எழுதிக்கொண்டே இருப்போம்” என்றார்.

 மாலையில் ஆறுமணிக்கு அதே பாதையில்தான் பேருந்தில் திரும்பினேன். அமலி பள்ளியும் டானாவும்  அதே அம்பை கல்யாணி தியேட்டரும் வண்டிமலைச்சி அம்மனும் கல்லிடைக்குறிச்சி ஆற்றுப்பாலமும் வேறாகத்தான் தெரிந்தது. கல்யாண்ஜி கவிதைகளும் அப்படிதான்.




Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்