சாகித்ய அகாதெமியும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து சமயமும் இலக்கியமும் உரையரங்கு












மனம் நிறைந்த தினம்
சாகித்ய அகாதெமியுடன் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து நடத்திய சமயமும் தமிழும் எனும் உரையரங்கில் பேராசிரியர் சிற்பிபாலசுப்ரமணியம் அவர்களும் எழுத்தாளர் திரு.மாலன் அவர்களும் மிக ஆழமாகப் பேசினார்கள். சாகித்ய அகாதெமி விருது பெற்ற மூன்று எழுத்தாளர்கள் ( திரு.சிற்பி, திரு.தோப்பில் முகமது மீரான்,திரு.வண்ணதாசன்) ஒரே அரங்கில்..எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் விழாவுக்கு வருகைதந்து பெருமை சேர்த்தார்கள். மிக நேர்த்தியாக நிகழ்வை ஒருங்கிணைத்த  எழுத்தாளர் திரு.மாலன் அவர்களுக்கு இனிய நன்றிகள்.

சாகித்ய அகாதெமியும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து சமயமும் இலக்கியமும் உரையரங்கு

"தமிழ் இலக்கியம் சமய நல்லிணக்கத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது"

சாகித்ய அகாதெமியின் ஒருங்கிணைப்பாளர் பேரா. சிற்பி பாலசுப்பிரமணியம் பேச்சு:

சாகித்ய அகாதெமியும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து சமயமும் இலக்கியம் எனும் உரையரங்கினை இன்று (28.08.2018) காலை 9.30 மணியளவில் நடத்தியது. கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி உரையரங்கைத் தொடங்கி வைத்து தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக், அரசுதவி பெறா பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹ{சைன் மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

        சாகித்ய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளரும் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளருமான பேரா. சிற்பி பாலசுப்பிரமணியம் வரவேற்புரை மற்றும் உரையரங்கில் மையக்கருத்துரை வழங்கும் போது

இந்தியாவின் பன்முக அடையாளத்தை சாகித்ய அகாதெமி மொழியின் மூலமாக நிலை நிறுத்தி வருகிறது:-

        “ஜவர்ஹர்லால் நேரு பாரதப் பிரதமராக இருந்த போது உருவாக்கப்பட்ட சாகித்ய அகாதெமி, இந்திய மொழிகளுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கி வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணன் சாகித்ய அகாதெமியின் இலக்கிய முயற்சிகளுக்குப் பெரிதும் துணை நின்றார். தரமான படைப்புகளுக்கு விருது வழங்குவதோடு மட்டுமல்லாமல் முப்பத்தைந்து வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை நூலாக வெளியிட்டு யுவ புரஸ்கார் எனும் விருதினை வழங்கி வருகிறது. எழுத்து வடிவம் கூட இல்லாத வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த மலைவாழ் மக்களின் வாய்மொழி இலக்கியங்களை ஊக்குவித்து வருகிறது. குழந்தை இலக்கியங்கள் படைப்பவர்களுக்குப் பால சாகித்ய அகாதெமி விருதை வழங்கி வருகிறது. வருடத்திற்கு அறுபது புதிய நூல்களை வெளியிட்டு தேசிய ஒருமைப்பாட்டிற்குத் துணை நிற்கிறது. இந்தியாவின் பன்முக அடையாளத்தைச் சாகித்ய அகாதெமி மொழியின் மூலமாக நிலை நிறுத்தி வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை எனும் கொள்கைப் படி பல்வேறு கலாச்சாரங்களை மொழியால் ஒன்றிணைத்து ஒற்றுமையை நிலை நாட்டி வருகிறது. தமிழ் இலக்கியத்தில் வள்ளலாரின் சமரச சன்மார்க நெறியும் திருவள்ளுவரின் அறக்கோட்பாடும் புதிய பாதையை வகுத்தன. நால்வகை வருணங்களுக்கு எதிராக திருவள்ளுவர் எல்லோரும் சமம் என்ற கருத்தியலை முன்வைத்தார். நல்லவனுக்குத் தொடர்ந்து சோதனைகள் வருவதும் நீதிநெறி வழுவியவர்கள் சிறப்பாக வாழ்வதன் காரணத்தை வள்ளுவரால் கூற இயலவில்லை. 

        தமிழ் இலக்கியங்களால் சமயங்கள் வளர்ந்ததும் சமயங்களால் தமிழ் வளர்ந்ததும் தமிழகத்தில்தான். சங்க காலத்தில் இயற்கையைக் கொண்டாடிய ஆதி மரபும் வேதங்களைக் கொண்டு யாகங்களைச் செய்த வைதீக மரபும் இயற்கையைக் கொண்டாடிய புதிய மரபும் நிலவி வந்தது. சங்க இலக்கியங்கள் புதிய பாடுபொருளோடு பாடப்பட்டன. தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரம் பெண்களுக்கு முதன்மை அளித்தது. குன்றக் குறவர்கள், வேட்டுவர்கள், ஆயர்கள், நெய்தல் நில மக்களைச் சிலப்பதிகாரம் முன்னிறுத்தியது. கண்ணகிக்குச் சிலை வடிக்க இமயத்திலிருந்து கல்லெடுத்த நிகழ்வைச் சிலப்பதிகாரம் அழகாக விளக்கியது. தமிழைச் சமணம் ஆயிரமாண்டுகள் ஆட்சி செய்தது. தொல்காப்பியமும் பெருங்கதையும் சமணம் தந்த அருட்கொடைகள். புத்த சமயம் தமிழுக்கு மணிமேகலையைத் தந்தது.  காஞ்சியிலே பிறந்த போதி தர்மர் சீனா வரைச் சென்று தமிழரின் புகழை நிலைநாட்டினார். வள்ளலாரின் திருவருட்பாவுக்கு ஆதரவாக கோயில்களில் சென்று உரையாற்றியவர் சதாவதானி செய்குத் தம்பி பாவலர்.  சீறாப்புராணம் உருவாவதற்கு  காரணமாக உமறுப்புலவருக்கு நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றைச் சொன்னவர் மாஞானி சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள். மஸ்லா, முனாஜத் போன்ற இலக்கிய வகைமைகளை இஸ்லாம் தமிழுக்குத் தந்தது. சைவ வைணவ இலக்கியங்கள் தமிழின் செழுமைமிக்க இலக்கிய வகைமைகளைத் தமிழுக்குத் தந்தனஎன்று பேசினார். 

சாகித்ய அகாதெமியின் பொதுக் குழு உறுப்பினர் எழுத்தாளர் திரு. மாலன் அறிமுகவுரையாற்றும்போது 

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழர்களுக்குத் தந்த இடம் நெல்லை. சாகித்ய அகாதெமியின் முதல் விருது இராஜவல்லிபுரம் பி. சேது பிள்ளை அவர்களுக்குக் கிடைத்தது. சென்ற ஆண்டு நெல்லையைச் சார்ந்த எழுத்தாளர் வண்ணதாசன்  அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்களின் அதிகமானவர் நெல்லை எழுத்தாளர்கள். தமிழ்நாட்டைச் சார்ந்த சர்வபள்ளி இராதா கிருஷ்ணனும், கோடகநல்லூர் இராமசாமி ஸ்ரீனிவாசனும் சாகித்ய அகாதெமியின் தலைவராக இருந்தனர். நெல்லை சைவ வைணவ கிருத்தவ இஸ்லாமிய சமண பௌத்த இலக்கியங்களின் கருவூலமாகத் திகழ்கிறது. கழுகுமலையில் சமணர்கள் பள்ளிகள் அமைத்து சமயப் பணிபுரிந்தார்கள். திருநெல்வேலி சமய நல்லிணக்கம் உள்ள பகுதியாகத் திகழ்கிறது. தமிழ் சமயத்தின் மொழியாகத் திகழ்கிறது. திருஞானசம்பந்தர் தன்னைத் தமிழ் ஞானசம்பந்தர் என்று அழைத்துக்கொள்கிறார்.என்று பேசினார்.

உரையரங்க அமர்வுகள்:-

சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர் திரு. தோப்பில் முஹம்மது மீரான், இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழுக்கு அளித்த கொடைகள் எனும் தலைப்பிலும், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மகாதேவன், சமண இலக்கியங்கள் தமிழுக்கு அளித்த கொடைகள் எனும் தலைப்பிலும், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரித் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஏ.உம். சோனல், கிருத்தவ சமய இலக்கியங்கள் தமிழுக்கு அளித்த கொடைகள் எனும் தலைப்பிலும், எழுத்தாளர் மாலன் பௌத்த சமய இலக்கியங்கள் தமிழுக்கு அளித்த கொடைகள் எனும் தலைப்பிலும், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அ.சே. சேக் சிந்தா ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர். மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி சனோபர் உரையரங்க அறிக்கை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மகாதேவன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.மு. அயூப்கான் நன்றி கூறினார். உரையரங்கிற்கான ஏற்பாடுகளை சாகித்ய அகாதெமியும் கல்லூரித் தமிழ்த்துறையும் சிறப்பாகச் செய்திருந்தது.



Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்