மரபின் வேரில் பூத்த நவீன நாடக்கலைஞர் முத்துசாமி : சௌந்தர மகாதேவன்

     மரபின் வேரில் பூத்த நவீன நாடக்கலைஞர் முத்துசாமி

சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

சங்கரதாஸ் சுவாமி, பம்மல் சம்பந்த முதலியார், தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், மதுரகவி பாஸ்கரதாஸ் , கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நவாப் ராஜமாணிக்கம், போன்ற கலைஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நாடகத் தமிழ் அதன்பின் கூத்துப்பட்டறை முத்துசாமி, இராமாநுஜம், ஞானி, மு.இராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, பூபதி, பிரசன்னா ராமசாமி, பார்த்திபராஜா போன்றோரால் அடுத்த நிலைக்கு நகர்த்தப்பட்டிருப்பதை மறுக்கஇயலாது. 

தன்னைப் பாதித்த நிகழ்வுகளை நாடகங்களாக மாற்றுவதில் தனித்துவமான படைப்பாளராக அரைநூற்றாண்டுக்காலமாய் இயங்கிக்கொண்டிருக்கும் முத்துசாமியின் நேர்காணல் இன்று ஆழமான பல வினாக்களுக்கு விடைதந்தது. 

அவர் நாடங்கள் மண்சார்ந்த பதிவுகளாகவும் சமூகத்தில் புரையோடிய மூடப்பழக்கவழக்கங்களைப் படிமங்கள் மூலம் சாடுவதாகவும் சிறுவயதில் கேட்ட பேய்க்கதைகள் உள்ளிட்ட சுவாரசியமான கதைகளின் வேறுபட்ட வடிவங்களைத் தன்னுள் கொண்டதாகவும் அமைகின்றன. 

தெருக்கூத்தைத் தமிழ் நாடகக்கலையின் வேராகக் கருதுபவர் முத்துசாமி. தான் தொலைத்த இளமைக்காலக் கிராமத்து நிகழ்வுகளிலிருந்து கதைகளை உருவாக்குவது அவரது பாணி. தன்னிலிருந்து உருவான பாத்திரங்களைத் தன்னிலிருந்து வேறுபடச்செய்து அதனதன் இயல்பில் உள்முரண்களோடு இயங்கச்செய்வதில் அவரது கூர்ந்த நாடக அறிவு புலப்படும். படுகளமும், நாற்காலிக்காரரும் இன்றும் மறக்க இயலாத அழகான நாடாகப் பிரதிகள். நவீன நாடக உத்திகளை படிக்கவும் அவற்றை அடுத்த தலைமுறை உள்வாங்கிப் பல நாடகங்களை எழுதவும் இயக்கவும் பயிற்சியளிக்கும் 1977 இல் அவர் உருவாக்கிய கூத்துப்பட்டறை நிறைய நாடகக்கலைஞர்களை உருவாக்கியிருக்கிறது. 

கூத்து மற்றும் நாடகக்கலை தொடர்பாக அவர் எழுதிய அன்று பூட்டிய வண்டி பல தன்னாட்சிக் கல்லூரிகளில் நாடகக் கோட்பாடுகள் படிக்கும் மாணவர்களுக்குப் பாடநூலாய் அமைந்துள்ளது. மரபு சார்ந்து நடித்து வந்த கூத்துக்கலைஞர்களுக்கு கூத்துப்பட்டறையில் வாய்ப்புகள் தந்து அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய உண்டு என்று உணர்த்தியவர். 

அவர் உருவாக்கிய படுகளம் இந்தியத் தொன்மங்களின் நவீன வடிவமாகத் திகழ்கிறது. கலை ஞாயிறு நேர்காணல் வழக்கமான சட்டக வினாக்களாக அமையாமல் அவரை ஊன்றி வாசித்த தன்மையோடு அமைந்த தேர்ந்த வாசகரின் சரியான வினாக்களால் கட்டமைக்கப்பட்டதும் அவரைப் பற்றிய அரிய தகவல்களைக் கொண்டிருந்ததும் நிறைவளித்தது. 

நவீன நாடகங்கள் பார்ப்பதிலும் புதிய கருவோடும் புதிய உருவோடும் வேறுபட்ட முறையில் உருவாக்குவதிலும் இன்றைய இளைஞர்கள் முனைப்பாக உள்ளனர் என்றால் முத்துசாமி போன்ற நாடக முன்னோடிகளின் அருமுயற்சி என்பதை மறக்க முடியாது. அந்த வகையில் தன் வாழ்வில் ஐம்பது ஆண்டுகளை நாடகத் தமிழுக்குத் தந்த தரமான, பாசாங்கில்லாத,நல்ல நாடகக் கலைஞருக்கு முழுப்பக்கம் தந்து கௌரவப்படுத்திய இந்து தமிழ் நாளிதழுக்கு நன்றியும் பாராட்டும். 

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்