சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி பேச்சு





                       பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 
சீதக்காதி தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா மற்றும் மின்னோவியம் குறும்படத் தயாரிப்பு மன்றத் தொடக்க விழா

சக மனிதர்கள் மீதான அக்கறையில்லாதவர்கள் 
படைப்பாளியாக இருக்க முடியாது 


பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதித் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா இன்று 25.09.2018 காலை 11 மணிக்கு நடைபெற்றது. 

கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுத் தமிழ்த்துறை உருவாக்கியுள்ள இன்பத் தமிழ் எனும் நூலை வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மகாதேவன் வரவேற்புரையாற்றினார். 

கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ. மீரான் முகைதீன், அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசைன் மற்றும் கல்லூரியின் அரசுதவிபெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர், கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் அ.ச. ராமையா, சிறுகதை எழுத்தாளர், வழக்கறிஞர் திரு. எம்.எம். தீன் ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி அவர்கள் மின்னோவியம்எனும் குறும்படத் தயாரிப்பு மன்றத்தைத் தொடக்கி வைத்து, “நானும் என் கவிதைகளும்என்ற பொருளில் சிறப்புரையாற்றும்போது, 

நான் ஒரு எழுத்தாளன் என்பதை விட சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் மாணவனாகவோ அல்லது பேராசிரியராகவோ இருந்திருக்கக் கூடாதா என எண்ணுகிறேன். இங்கே கவிதை குறித்துப் பேசுவது கோபுரப் புறாக்களுக்கு தானியம் வீசுகிறவனைப் போன்று எனக்குத் தோன்றுகிறது. இளைய மாணவ கவிஞர்களுக்கிடையில் என் கவிதைகளைப் பகிர்வது எனக்கு மகிழ்வளிக்கிறது. வேட்டைச் சமூகம் சார்ந்த நம் தொல்குடியில் பிறந்த குழந்தையைச் சுற்றி அதன் உறவினர்கள் தங்கள் போர்க்கருவிகளை வைப்பது போல, என் தந்தையும் என் சகோதரனும் என்னைச் சுற்றி பேனாவை வைத்து என்னை எழுத வைத்தார்கள். ஒரு குழந்தை எதிரில் தோன்றும் பொருட்களைத் தம்பால் ஈர்க்கும் தருணத்தில் எப்பொருளைத் தொடுகிறதோ அதிலே சிறந்து விளங்குவது போல எனக்குக் கிடைத்த பேனா, நூல்கள் போன்ற பொருட்கள் தான் என்னைக் கவிஞனாக்கியது. 

நான் எழுதிய பதினைந்து கவிதைத் தொகுதிகளில் என் வாழ்வை நான் முன்வைத்திருக்கிறேன். கருப்பு வளையல் கவிதைக்குப் பின்னால் ஆயிரம் கவிதைகளை நான் எழுதி இருக்கிறேன், ஆனால் அவற்றைச் சொல்கிறவர்கள் அக்கவிதையையே மேற்கோள் காட்டுகிறார்கள். நீங்கள் எப்போதும் கவிஞர்களைத் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். இன்னும் ஒருபடி மேலாய் அவர்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். என் கவிதை வரி உண்மையானது, பாசாங்கற்றது. மத்தியான வெயிலில் அமர்ந்திருக்கும் மீன்கொத்தி போன்றது. என் கவிதையின் மொழி எளியது. பேனா என்னும் ஆறாவது விரலோடு ஐம்பத்தாறு ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வருகிறேன். கவிஞன் அவனது படைப்புகளோடு தொடரப்படவேண்டும். அந்தச் சுதந்திரத்தை அவன் வாசகர்களுக்குக் கொடுப்பான். என்னுடைய கவிதை மொழி பறவையின் மொழியல்ல, பறவை உதிர்த்த சிறகின் மொழி. அது வனத்தின் மொழியல்ல, வீட்டுத் தாவரத்தின் மொழி. அது சர்வதேச மொழியல்ல, என் தெருவின் மொழி. அந்தத் தெருவிலிருந்து தான் எனது கவிதைகள் தோன்றியுள்ளன. என் மொழி பிரபலமானவனின் மொழியல்ல எளிய மனிதர்களின் உண்மையான மொழி. நான் வெளிச்சங்களில் நிற்பவன் இல்லை. என் மொழி, முடிதிருத்தகங்களின் பழைய, காலாவதியான இதழ்களின் மொழி. நெருக்கடி மிகுந்த கடைவீதிகளில் குடும்ப அட்டைக்கான உறைகளை விற்பவனின் மொழி என் மொழி. இன்றைய சூழலில் ஆடம்பரங்களை விட எளிமையைப் பத்திரப்படுத்துவதுதான் மிகுந்த சிரமமாக இருக்கிறது. நீ இருக்கும் திசைக்குத் தேடி வராது பூ. நீ தான் பூக்களைத் தேடிச் செல்ல வேண்டும். பூப் பூப்பது அதன் இஷ்டம். போய்ப் பார்ப்பது உன் இஷ்டம். தேக்கும் பூக்கும் என்று ஒரு கவிதையை எழுதியிருக்கிறேன். இவ்வளவு தானா கவிதை? கவிதை நுட்பமானது. கடிதங்களின் காலம், தபால்காரர்களின் காலம் அநேகமாகக் கடந்துவிட்டது. துருப்பிடித்து, சிகப்பு வண்ணம் பூசப்பட்ட அஞ்சல்பெட்டி இன்னும் எங்கள் வீட்டில் வெறுமையாக இருக்கிறது. ஒரு பறவை தன் சிறகை அப்பெட்டிக்குள் கடிதமாகப் போட்டுவிட்டுச் சென்றது. அ முதல் ஃ வரை தெரியும் எனக்கு, ஆகாயம் முழுதும் தெரியும் குருவிக்கு. ஒரு கவிதையை ஒரு கவிஞன் தன் குரலில் தரும்போது வாசகனை அவன் கட்டித் தழுவிக் கொள்கிறான்.

ஒரு யானையை ரசித்துக்கொண்டே மண்புழுவையும் தேடுபவன் தான் கவிஞனாக இருக்கமுடியும். சக மனிதர்கள் மீதான அக்கறையில்லாதவர்கள் படைப்பாளியாக, ஏன் மனிதனாகக் கூட இருக்க முடியாது. மனிதனாக இருக்கவும் கூடாது. மின்னோவியம் என்ற குறும்படங்களின் அமைப்பு மூலமாக மனிதத்தை முன்னெடுத்துச் செல்வதுதான் மாணவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். மனிதத்தைப் பேசுவது தான் படைப்பாளிகளின் வேலைஎன்று பேசினார். 

இறுதியில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்களின் தயாரிப்பான வண்ணம் எனும் குறும்படம் திரையிடப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர் பேரவைத் துணைத் தலைவர் ஆர். மரியம் பாத்திமாள் நன்றி கூறினார்.
படத்தில்: பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் சீதக்காதி தமிழ்ப்பேரவையில் மின்னோவியம் எனும் மாணவர் குறும்பட மன்றத்தை தொடங்கி வைத்து எழுத்தாளர் வண்ணதாசன் பேசுகிறார். அருகில் கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி, கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள்.



Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்