தொலைதல்





பெருநகரங்கள்
எங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றன
தலைக் கவசம் அணிந்து தலைதெறிக்க
வண்டியில் பறக்கும் எங்களுக்கு
முகங்கள் முக்கியமில்லை.

மின்சாரத் தொடர் வண்டிகளில் விபத்தில் சிக்கி
முகம் சிதைந்து கிடக்கிற
 















சவத்தின் முன்கூடச் சாவகாசமாய்
சாக்லேட் சாப்பிட முடிகிறது

ரசித்தலுக்கு நேரமற்றுப் போனதால்
சன்னல்கள் எங்களுக்கு அவசியமில்லை
நிலைய நிறுத்தங்களுக்காக
வாயில்களுக்கருகேதான் காத்துக் கிடக்கிறோம்.

சக மனிதர்களின் அபய ஓலங்கள்
எங்கள் செவியுள் நுழையாதிருக்க
கருவியை மாட்டிக் காதுகளில்
இசையை இறுத்திக் கொள்கிறோம்.

பக்கத்து இருக்கை நண்பர்களைவிட
முகப்புத்தக அன்பர்களே எங்களுக்கு முக்கியம்
அவர்கள்தான் கைமாத்து கேட்க வரப்போவதில்லை

அன்னையர் தினத்திற்கு மறவாமல்
மின்னஞ்சலில் வாழ்த்தனுப்புகிறோம்

தவித்த வாய்க்குப் பெப்சியும்
பசியெடுத்தால் பீசாவும், போட்டுக்கொள்ள
அரை டஜன் அரை டிரவுசர்களும் தயார்
போதாதா பெருநகரத்தில் வாழ?
சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி



Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்