அப்பாவின் சைக்கிள் : செளந்தர மகாதேவன்,திருநெல்வேலி



அப்பாவின் சைக்கிள்
அப்பாவைப் போல் அழகானது
பேபிசீட்டில் தங்கையை வைத்து
கேரியரில் எங்களை வைத்து
பாசத்தோடு அழூத்திக் கடந்திருக்கிறார்
அழுத்தமாக அழகாக ..
பெடல் இடுக்கில் அவர்
வைத்த துடைக்கும் துணி
இன்னும் கண்களில். .
குரங்குப் பெடல் போட்டு
நாங்கள் சைக்கிள் பழகியது
அவரது ராலி சைக்கிளில் தான்
டைனமோ மாட்டும் முன்
மண்ணெண்ணெய் முன் விளக்கோடு
அவர் வண்டியோட்டிப் பார்த்திருக்கிறேன்
பின்னாளில் பொரிகடலைப் பொட்டலம்
போன்ற கூம்பு வடிவ விளக்கை
சர்வஜாக்கிரதையாக மஞ்சள் துணி கட்டிக்
காத்த கதை தனியே எழுதலாம்
மின்சாரமற்றுப்போன நடுநிசிப் பொழுதில்
தீப்பெட்டி தேடக்கூட நாங்கள்
அதைப் பயன்படுத்தியதுண்டு.
காற்றடிக்கும் பம்பால் நாங்கள்
காதில்கூடக் காற்றடைத்துக் கொண்டதுண்டு
காய்கறி வாங்க மாடசாமி மூப்பனார் கடை
பலசரக்கு வாங்க சேவியர் பள்ளி செல்ல
எல்லாமே அவருக்கு ராலி வண்டிதான்
ஆயில் கேன் சைக்கிள் கம்பி இன்னும்
வீட்டில் உண்டு
ஓட்டமுடியா இயலாமையிலும்
அதே ராலி அன்பில் முகப்பிலமர்ந்து
பேப்பர் படிக்கும் அன்பு அப்பா

*
செளந்தர மகாதேவன் .




Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்