புதுமைப்பித்தன் என்கிற காலத்தச்சன்



புதுமைப்பித்தன் பிறந்ததினம்: ஏப்ரல் 25
புதுமைப்பித்தன் என்கிற காலத்தச்சன்
.................................................................................................................................................................
·         முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி
·         mahabarathi1974@gmail.com,9952140275



மனம் எனும் வெளியில் தினம் அலைகிற மனிதன் கலைக் கண்கள் பெற்றிருந்தால் அவன் தன்னைப் பாதிக்கிற யாவற்றையும் படைப்பாகப் பதிவுசெய்வான்.

பொசுக்கி எரிக்கிற சமூகஅவலத்தை அங்கதநடையில் பதிவுசெய்து எள்ளிநகையாடியவர் சொ.விருத்தாசலம் என்கிற இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன் (1908-1948). புதிதாய் எழுதத் தொடங்குகிற எழுத்தாளர்கள் அனைவருக்கும் அவரே ஆத்மகுரு.

 சுடலைத் தீ கக்க பஸ்பமாவதற்காகச் சதை பொசுங்கி நிண நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் திருநெல்வேலி வெள்ளக்கோவில் சுடுகாட்டில் மருதாயிப் பாட்டிக்கு முன் எமனைக் கொண்டுநிறுத்தி “காலனும் கிழவியும்” என்று எள்ளிநகையாடியவர். 

பத்திரிகையாளனாய் வாழ்வைத் தொடங்கி வாழ்வின் போலித்தனமான முகங்களின் குரூரமுகமூடிகளைக் காணச் சகியாமல் அவர்களைப் படைப்புகளாக மாற்றித் தன் படைப்பு வெளியில் உலவவிட்டு ஆறுதலடைந்தவர்.

கடவுளைக் கந்தசாமிப் பிள்ளை வீட்டில் கொண்டுவந்துவிட்டு அவரோடு காபிகடைக்கும் கடவுளை அனுப்பிப் பகடிசெய்தவர்.திருநெல்வேலியும் சென்னையும் இவரது படைப்புக்களங்கள்.மணிக்கொடி இவரது எழுத்தாற்றலுக்குத் தொடக்கத்தில் களம்அமைத்துத் தந்தது.இலக்கியத்தைப் புனிதமாகப் பார்த்த பார்வைக்கு மாறுபட்டவர்.


வேதாந்திகளின் கைக்குச் சிக்காத கடவுள்மாதிரி எதற்குள்ளும் அவர்கதைகளை அடக்கவோ அளக்கவோ இயலாக் கதைகளாகத் திகழ்கின்றன.   அழுகிய மலர்களுக்கருகிலும் அயராது தேன்குடித்துக்கொண்டிருகிற வண்ணத்துப்பூச்சிகளாய் அவர் பாத்திரங்கள் சோகத்துக்கருகிலும் இயல்பு மாறாமல் சொர்க்கசுகத்தைக் கொண்டாடுவனவாகவே திகழ்கின்றன.ஸ்டோர் குமாஸ்தா ராமன்,பால்வண்ணம்பிள்ளை,எப்போதும் எங்கும் பேரம்பேசும் பிரமநாயகம் போன்றோர் அவர்களுள் சிலர். நூறுக்கும் மேற்பட்ட கதைகளைத் தந்த புதுமைப்பித்தன் அங்கதக் கவிதைகளும் எழுதியுள்ளார்.

 “கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான் ஐயா பொன்னகரம் “ என்று பொன்னகரம் கதையில் அவர் எழுதியதைப் படிக்கும்போது அவர் ரணவரிகளை உணரமுடிகிறது.ஓடும்நதியில் உருண்டு செல்கிற நீர்க்குமிழி சட்டென்று உடைந்து நதியோடு சங்கமமாவதைப் போல் அவர் முன்னிறுத்துகிற ஆதங்கங்கள் கதைவெளிக்குள் காணமல் போகிற வித்தை நடக்கிறது.

அவர் தீர்வுசொல்கிற தீர்க்கத்தரிசி இல்லை.எந்த வரையறைக்குள்ளும் அவரை நாம் எளிதாக அடக்கிவிட முடியாது.ஊரின் எல்லைக் கல்லைப்போல ஒதுங்கிநின்று சிரித்துக்கொண்டிருக்கும் அங்கதக் கல் அவர்.குழைந்து நடக்கிற குழந்தையின் காலடித் தடம்போன்ற மென்மையை அவர் கதைகள் முன்மொழிவதில்லை.

கொத்துப்பூவைக் குனிந்து முகர்கிற நாசியைப்போல் அவர் கதைகள் வாசகனை மயக்கத்தில் ஆழ்த்துகின்றன.காஞ்சனை தந்த எதிர்பார்ப்பில் வாசகன் இன்னும் மீளவில்லை.ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புக் கதைகளைத் தந்துள்ளார்.வாணிதாஸபுரத்தை பூலோக சுவர்க்கமாய் வர்ணித்து அவர் எழுதியுள்ள கலியாணி கதை அழகான கதை. “ கள்ளிப்பட்டியானால் என்ன? நாகரிக விலாசமிகுந்தோங்கும் கைலாசபுரமானால் என்ன? கங்கையின் வெள்ளம்போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறது.. ஓடிக்கொண்டேயிருக்கும். 

தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிறமாதிரி,நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு திங்கள்,செவ்வாய்க்கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே.” என்று கயற்றரவு கதையை அவர் தொடங்கும் உத்தி அலாதியானது. 

நாகரிகத்தின் உச்சியைக் காண வேண்டுமென்றால் ஒரு நகரத்தை இரவில் காணவேண்டும் என்று கவந்தனும் காமனும் கதையில் சொல்வார் புதுமைப்பித்தன்.

அவர் கதைகளில் கட்டில் பேசும்.சுடுகாடும் மணம் வீசும்.களங்கத்தோடு பெண்ணாக வாழ்வதைவிட கல்லாகக் கிடக்க அவர் அகலிகை விரும்புவாள்.அவர் மனநிழல் விஸ்வரூபம் எடுக்கும்.அவருக்கு நகரைப் பிடிக்காது, எப்போதும் நகரப்பிடிக்கும்.அவர் காலத்தில் வாழ்ந்த லக்ஷ்மிகாந்தங்களை “நானே கொன்றேன்” கதையாகத் துணிச்சலாக  அவரால் எழுத முடிந்தது.

புதுமைப்பித்தன் கதைகள் சமுதாயத்தின் சாளரங்களாகத் திகழ்கின்றன.ஊதுகிற பலூன் சட்டென்று உடைந்துவிட்ட அதிர்ச்சிதாங்க முடியாமல் அதிர்கிற குழந்தைகளாகிறோம் அவர் கதைவெளிக்குள் நாமும்.

இயந்திரமாந்தர்களை அவர் கதைகள் எள்ளி நகையாடுகின்றன. 


அவர் படைப்பு வெளியில் நடிப்பில்லை.அவர் கதைகள் நிகழ்வுகளின் நிகழ்கால நிஜங்கள்.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்