திருநெல்வேலியில் “மேலும் இலக்கிய அமைப்பு” நடத்திய புதுமைப்பித்தன் நினைவுநாள் கருத்தரங்கு





வண்ணார்ப்பேட்டை சாலைத்தெருவுக்குப் புதுமைப்பித்தன் சாலை என்று பெயரிடத் தீர்மானம் 

தமிழ்ச் சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் நினைவு நாளான ஜூன் 30  அவர் படைப்பிலக்கியங்கள் குறித்த கருத்தரங்கை “மேலும்” இலக்கிய அமைப்பு தொடர்ந்து  பல ஆண்டுகளாக நடத்திவருகிறது. 

இவ்வாண்டு புதுமைப்பித்தன் நினைவுநாளன்று மாலை 6 மணிக்கு திருநெல்வேலி சைவசபையில்  நடைபெற்ற  கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள், தமிழ்ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சுரண்டை கல்லூரி உதவிப் பேராசிரியர் ரமேஷ் வரவேற்றுப் பேசினார்.

 மேலும் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சிவசு கருத்தரங்கத்தைத் தொடங்கிவைத்துத் தலைமையுரையாற்றினார். “ அவர் தமது தலையுரையில் புதுமைப்பித்தனின் 97 சிறுகதைகளும் கருத்தாழம் மிக்கன. குறிப்பாக அவர் எழுதிய சாபவிமோசனம் கதை உலகத் தரம் மிக்க நவீன சிறுகதையாகத் திகழ்கிறது. புதுமைப்பித்தன் வாழ்ந்த திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டை சாலைத்தெருவைப் புதுமைப்பித்தன் சாலைத் தெரு என்று பெயரிட்டு அவரைச் சிறப்பிக்க மாவட்ட நிர்வாகத்தை மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்வதோடு மகாராஜ நகரில்  உள்ள புதிய நூலகத்திற்குப் புதுமைப்பித்தன் படிப்பகம் என்று பெயரிட்டுச் சிறப்பிக்க வேண்டும் என்று பேசினார். 


மேலும் அமைப்பின் தலைவர் பேராசிரியர் கட்டளை கைலாசம் புதுமைப்பித்தனின் திருநெல்வேலி மொழிநடை குறித்துப் பேசினார்.
மேலும் இலக்கிய அமைப்பின் செயலாளரும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவருமான பேராசிரியர் ச.மகாதேவன் புதுமைப்பித்தன் கதைகளும் கருத்தியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார். 

அவர் தனது உரையில், “ புதுமைப்பித்தன் கதைகள் யதார்த்தத்தின் நவீன வெளிப்பாடுகள். திருநெல்வேலி வாழ்வும்  அவரைப் பாதித்த மனிதர்களும் அவரை ஆவேசமாக எழுதத்தூண்டின. முப்பதுகளில் அவர் எழுதிய கதைகள் நுண்ணிய பார்வை உடையதாகவும் சமுதாய நிலையை எள்ளி நகையாடுவதாகவும் அமைந்தன. 14 ஆண்டுகளில் அவரால் 97 சிறுகதைகளையும் இரு குறுநாவல்களையும் பலநூறு கவிதைகளையும் மிகத்தரமான மொழிபெயர்ப்பு முயற்சிகளையும் செய்யமுடிந்தது வியப்புதான்.” என்று பேசினார்.


திருநெல்வேலி அகிலஇந்திய வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ஜாண் பிரதாப்குமார் “என்னைப் பாதித்த புதுமைப்பித்தன் கதைகள்” எனும் தலைப்பில் உரையாற்றினார். மாணவர் சுதர்சன் “புதுமைப்பித்தன் வாழ்வியல்” எனும் தலைப்பில் உரையாற்றினார். “நவீனத்துவமும்  புதுமைப்பித்தன் சிறுகதைகளும்” எனும் தலைப்பில் பேராசிரியர் சிவசு சிறப்புரையாற்றினார்.

நூல்வெளியீடு

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் நிதாஎழிலரசி எழுதிய “ ஆதவனின் நிறத்தை எட்டிப் பிடித்தேன்” எனும் கவிதைத்தொகுப்பை மேலும் சிவசு வெளியிட திருநெல்வேலி அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் கண்னையன் தட்சிணாமூர்த்தி அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

புதுமைப்பித்தன் வாழ்ந்த திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டை சாலைத்தெருவைப் புதுமைப்பித்தன் சாலைத் தெரு என்று பெயரிட்டு அவரைச் சிறப்பிக்க மாவட்ட நிர்வாகத்தை மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்வதோடு, மகாராஜ நகரில்  உள்ள புதிய நூலகத்திற்குப் புதுமைப்பித்தன் படிப்பகம் என்று பெயரிட்டுச் சிறப்பிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பேராசிரியர் ச.மகாதேவன் நன்றியுரையாற்றினார்.இக்கருத்தரங்கில் ஆய்வுமாணவர்கள், பேராசிரியர்கள்,தமிழ்ஆர்வலர்கள்,தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர்  திரளாகப் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்