கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழாவில்




சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி

திலகர் பிறந்தநாளைப் பள்ளி ஆண்டுவிழாவாய் கொண்டாடும் பள்ளி தமிழ்நாட்டில் அதுவும் கல்லிடைக்குறிச்சியில் அதுவும் 105 ஆண்டுகளாக வெகுசிறப்பாக சுதந்திரப் போராட்ட நினைவுகளோடு இயங்கிவருகிறது.மாணவர் சேர்க்கையிலோ ஆசிரியர் பணியமர்த்துதலிலோ ஒருபைசா கூடப் பெறாமல் நூறாண்டுகளைக் கடந்தும் இன்றும் நேர்மையாக, அதுவும் மாவட்ட, மாநில அளவில் சாதனை புரியக்கூடிய சாதனைப்பள்ளியாக செயல்பட்டுவருகிறது என்பதைச் சுமார் 18 ஆண்டுகளாகக் கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். 




அம்பாசமுத்திரம் தொகுதியில் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராய் பணியாற்றிய சுதந்திரப்போராட்ட வீரர் திரு.கோமதிசங்கர தீட்சிதர் அவர்களின் பெயரர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரின் மேனாள் கணிதவியல் துறைத்தலைவராக இருந்தார்,அவர்தான் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியின் சிறப்பு குறித்தும், தொடர்ந்து 50 ஆண்டுகளாய் பள்ளிச் செயலாளராய் 80 வயதிலும் சுறுசுறுப்பாய் பணியாற்றிக்கொண்டிருக்கும் திரு.கே.எஸ்.சங்கரசுப்பிரமணியன் குறித்தும் `பெருமையாகச் சொல்லியிருக்கிறார். 


திலகர்மீதும் சுதந்திரப் போராட்டவீரர்கள் மீதும் அளவுகடந்த மரியாதை கொண்டவர்,சாதி,மத இனம், மொழி பேதமற்று அனைவரிடமும் எளிமையாகப் பழகுபவர், காரியம்சாதிக்கவேண்டி அவரிடம் எந்த அரசியல்வாதியும் நெருங்கமுடியாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தக் கலிகாலத்தில் இப்படி ஒரு உத்தமரா என்றுகூட எண்ணியதுண்டு. என்னிடம் முனைவர் பட்ட ஆய்வுமேற்கொள்ளும் அப்பள்ளியின் தமிழாசிரியர் திரு.சந்தோஷ் அவர்கள், ஜூலை 23 அன்று லோகமான்ய பால்கங்காதர திலகர் அவர்களின் 161 ஆவது பிறந்தநாள் விழாவை கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழாவாகக் கொண்டாடவுள்ளதாவும் நீங்கள் சிறப்புவிருந்தினராய் பங்கேற்றுத் திலகர் குறித்து விழாவில் சிறப்புரையாற்ற வேண்டும் என்று பள்ளித்தாளாளர் திரு. கே.எஸ்.சங்கரசுப்பிரமணியன் விரும்புவதாவும் தெரிவித்தார். மட்டற்ற மகிழ்ச்சி.திரைநட்சத்திரங்களைப் பள்ளிஆண்டுவிழாக்களுக்கு அழைத்து விளம்பரம் தேடிக்கொண்டிருக்கும் பல பள்ளிகளை நாளும் காணும் எனக்கு முகநூலில் என் பதிவுகளைக் கண்டு மாணவர்களிடம் பேச அழைக்கும் அந்த நேர்மையான தாளாளர் மிகஉயர்வாகத் தோன்றினார்.


பள்ளிக்குள் அரைமணிநேரத்திற்கு முன்பே நுழைந்தேன். தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், முருகதாஸ்தீர்த்தபதி போன்றோர் இந்தப்பள்ளியில் பயின்றிருக்கிறார்கள். அறுபத்தைந்தாண்டுகளுக்கு முன் பயின்று தற்போது தொண்ணூறு வயதை எட்டியிருக்கும் திரு.சேக்பீர்மைதீன் அவர்களை பள்ளித்தலைமையாசிரியர் அறையில் சந்தித்தேன்.அந்தப் பள்ளிக்கு வருகைதந்த கேப்டன் லட்சுமிசாகல், திலகரின் கொள்ளுப்பேரன் தீபக்திலக்  போன்றோரின் படங்களைக் காட்டினார்.மகாத்மா காந்தி தொடங்கி அனைத்து சுதந்திரப்போராட்ட வீரர்களின் படங்களையும் பள்ளித் தலைமையாசிரியர் அறைக்குள் மாட்டிவைத்து மரியாதை செய்திருந்தார்கள். 

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நூற்றாண்டுவிழாவை இப்பள்ளி கொண்டாடியுள்ளது. யார் வந்தாலும் வராவிட்டாலும் குறித்த நேரத்தில் விழாவைத் தொடங்கச்சொல்லிவிடுவாராம்.மாணவர்கள் இசைக்கருவிகள் முழங்க வரவேற்றார்கள்.உள்ளே கம்பீரமான மீசையுடனும் அழகான தலைப்பாகையுடனும் லோகமான்ய பாலகங்காதர திலகர் அவர்களின் உருவச்சிலை.கம்பீரமாய் பள்ளிக்குள் நுழைந்த அந்த எண்பது வயது தாளாளர் நேராகத் திலகர் சிலைநோக்கி நடந்தார். காலணிகளைக் கழற்றிவிட்டு திலகர்சிலைக்கு மாலையணிவித்தார்.மேடையிலும் திலகர்படம் மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.இரண்டாயிரம் மாணவமாணவியர் மிக அமைதியாக அமர்ந்திருந்தனர். பத்துவயதில் தாயாரை இழந்து நம்பிக்கையோடு கல்விகற்று வழக்கறிஞராய்,கேசரி,மராட்டா இதழ்கள் மூலம் ஆங்கிலேயரை கிடுகிடுக்க வைத்த திறம்குறித்துப் பேசினேன்.


திலகரின் பிறந்தநாள் சுப்ரமணியசிவாவின் நினைவுநாளும் என்பதால் இரட்டை ஆயுள்தண்டனை பெற்று சிறைச்சாலையைவிட்டு வெளியேவந்த வ.உ.சிதம்பரனாரை வரவேற்க உடலெல்லாம் தொழுநோயோடு போர்வை போர்த்தியபடி சிறைச்சாலை வாசலில் நின்ற  சுப்ரமணியசிவாவைப் பற்றி நான் பேச அவர் நெகிழ்ந்து போனார். சேலம் மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவில் கட்டவேண்டும் என்று சுப்ரமணியசிவா கிளம்பினார்.ஆனால் தொழுநோயைக் காரணம் காட்டி அவரைப் பேருந்தில் பயணிக்க ஆங்கில அரசு தடைவிதித்தது.மனம் தளாராமல் சிவா சென்னையிலிருந்து பாப்பாரப்பட்டிக்கு நடந்தே போனார்.

அவர் கனவு இன்னும் நனவாகவில்லை. மிகஅமைதியாக இரண்டாயிரம் மாணவ மாணவியரும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். நல்லவற்றைக் கேட்க அவர்கள் தயார்தான்..நாம்தான் கபாலியை மட்டுமே அவர்களின் காதுகளுக்குத் தந்துகொண்டிருக்கிறோம்.திலகரும் சிவாவும் இன்றும் நம்மோடு வாழத்தான் செய்கிறார்கள் சங்கரசுப்பிரமணியன்களாக சேக்பீர்மைதீன்களாக பாவம் அவர்களைப் பார்க்கத்தான் நமக்குக் கண்கள் இல்லை. தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம்! கருகத்திருவுளமோ..

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்