சௌந்தர மகாதேவன் கவிதைத்தொகுப்பு : தண்ணீர் ஊசிகள்

                         சொல்லூசல்
கவிதை, கணநேர மொழியனுபவம். வாழ்க்கை அனுபவங்களின் நுண்பதிவு கடந்துசெல்ல முடியா மனிதர்களை இந்த வாழ்க்கை எனக்குத் தந்திருப்பது நான் பெற்ற பேறு. அவர்களை என் விருப்பக் கவிதைகளால்  நகலெடுத்துக்கொண்டிருக்கிறேன். 
முக்குத் திரும்ப முனகும் தேர் வாகையடி முக்கில் நின்று ரதவீதியை வெறித்துப் பார்ப்பதைப் போல் என் சாரிப் பாட்டியை, சைக்கிளில் வைத்து உலகைக் காட்டிய என் தந்தையை, என் அன்புப் பிள்ளைகளை, என் பாண்டிய வேளாளர் தெரு கிழக்கு உச்சினிமாகாளியை நான் பார்த்து அக்கணத்தில் மனம் எழுதிய கவிதைகள்தான் “மண்ணைத் தைக்கும் தண்ணீர் ஊசிகள்”.
இந்தப் பிள்ளையின் கவிப்பிரசவம் சிவசு அய்யா என்கிற படிப்புவாசியின் கையால் நடந்திருக்கிறது. வாசிப்பின் மீதும் இலக்கியத்தின் மீதும் நேசம்கொள்ள வைத்த மேலும் சிவசு அவர்களின் மேலும் வெளியீட்டகம் வெளியிட்டிருக்கிறது. மிகநுட்பமான நடையில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற அன்புக்குரிய எழுத்தாளர் திரு. வண்ணதாசன் அவர்கள், தெருக்களில் தையல் இயந்திரத்தோடு அலையும் தையல்காரனாய் என்னை உருவகப்படுத்தியிருக்கிறார். அவர் வாழ்த்துரை, நான் பெற்ற இன்னொரு பேறு. நன்றி என்ற ஒற்றைச் சொல் போதாதே அவருக்கு நான் சொல்ல. திசைகள் தெரியாமல் அலைந்துபோது தன் அன்பால் என்னைத் தன் பால் ஈர்த்து முகவரி வழங்கிய எங்கள் அன்புத் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி அவர்கள் ‘பொதிகைச் சாரல்’ இதழில் என் கவிதைகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தி இன்று இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி.

வண்ண நூல்களோடும் கிழிந்துபோனவற்றைத் தைக்கஉதவும் நினைவு ஊசிகளோடும் அலைபவனாகவே நானிருக்கிறேன். ஒட்டுப்போட்ட கால்சட்டைகளோடு மனகாவலன்பிள்ளை பூங்காவில் சறுக்கு விளையாடும் மரியாகேண்டீன் பிரியன்தானே இந்த மகாதேவன்! நினைவுகளை மிகத் துல்லியமாக ஏற்றியிறக்கும் நல்ல வாகனமாகக் கவிதை திகழ்கிறது. நான் எழுத எழுத அக்கவிதைகளை நான்காண்டுகளாய் தொடர்ந்து வெளியிட்ட “புதுப்புனல்” இதழ், கணையாழி இதழ், அம்ருதா, வடக்குவாசல், அம்சப்ரியாவின் புன்னகை இதழ், தி இந்து இதழ், தினமணி, தினமலர் நாளிதழ்கள், சிற்றேடு இதழ் இவற்றை மறக்கஇயலுமா? ஆனந்தவிகடன் சொல்வனத்தில் என் கவிதையை வெளியிட்டு ‘சொல்வனம்’ தொகுப்பில் இடம்பெறச்செய்த திரு. ரா. கண்ணனுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னை வியக்கவைக்கும் ஒளிப்படக்கலைஞர் எஸ்.ரஞ்சித் தன் கலையால் எங்களை அழகாக்கியிருக்கிறார்.

 நிஜம் தேடும் நிமிடங்களில் நிழலாடும் மனிதர்கள் என் கவிதை மாந்தர்கள். எழுதிப் பார்த்து வாங்குகிற பேனாப் போல எதையோ எழுதிப்பார்கிறது வாழ்க்கை நம் மீது. சமீபகாலக் குறுங்கவிதைகள் என் செல்பேசியின் தொடுதிரைகளில் ஒற்றைவிரலால் எழுத்துக்கோர்த்து எழுதியவை. முகநூலில் நான் வெளியிட்ட உடன் கருத்துரைக்கும் என் தந்தையார் ம.சௌந்தரராசன், என் தாயார் பொன்னழகி, என் அன்புத் துணைவியார் வெங்கடலட்சுமி, அன்பு நெறியாளர் வே.கட்டளை கைலாசம், நா.ராமச்சந்திரன், திரு.நவாப் ஹுசைன், முதல்வர் மு.முகமதுசாதிக், எஸ்.முகமது ஹனிப்,  அ.மு.அயூப்கான், அ.சே.சேக்சிந்தா, குமார், ஜாகிர் ஹுசைன், திரு.நாறும்பூநாதன், தினமலர் ஆசிரியர் திரு.ஜி.வி. ரமேஷ்குமார், சாகித்ய அகாடெமியின் திரு.சுந்தரம் இளங்கோவன், புதுப்புனல் சாந்தி,கிருஷ்ணமூர்த்தி வெங்கட்ராமன், ஹேமாஸ்ரீகுமார், பாண்டுரங்கன் நடராஜன், சாந்திமாரியப்பன், மாதவம் ஐயப்பன், காசி மானேந்தியப்பன், சக்திவேலாயுதம், பொன்.வள்ளிநாயகம், பாஷ்யம், ஹரிஹரன், முகில்சிவா, பீட்டர் துரைராஜ், ராஜேந்திரன், உமாகனகராஜ், சங்கரராம பாரதி, தாணப்பன், புலமி, செல்வமணி, முத்தமிழ், சப்தரிஷி. லா.ச.ரா, சுபாஷிணி, விஜிபூர்ணசிங், எம்.எம்.தீன், பிரபு, சுப்ரா, ஷேக் அப்துல்காதர், அருள்தாசன், சுதாகர், அப்துல்ரபி, முப்பிடாதி, மாசானமுத்து, முத்துகிருஷ்ணன், நாகமணி, பாலசந்தர், விஸ்வநாதன், ரஹ்மத் ராஜகுமாரன், தி இந்து முருகேஷ், சங்கரராம சுப்பிரமணியன், , கணபதி, குமுதம் சிநேகிதி லோகநாயகி, ஏர்வாடியார், இப்படி முகநூலில் தினமும் என் கவிதைகளை ரசித்து எதிர்வினையாற்றும் இவர்களை நான் எப்படி மறப்பேன்? ‘நத்தைகளுக்குத் தெரியாதுதான் நாயால் துரத்தப்பட்டவனின் வேகம்’ ஆனாலும் என் வாழ்வை எழுதிக்கொண்டேயிருக்கிறேன் நான் அறிந்தமட்டில்.

 நீர்மாலைகளையும் பன்னாட்டு நிறுவனங்களையும் ஒன்றாக எதிர்கொள்கிற என் தீராநதி தாமிரபரணியின் குறுகல் என்னை வெகுவாகப் பாதிக்கிறது. நெகிழிக் குவளை, நெகிழிப் பாய், நெகிழி முறம், நெகிழி அரிசி வரிசையில் நெகிழி மனிதன் வந்துவிட்டதைக் கண்டுமனம் சங்கடப்படுகிறது. 

கற்கரும்புவில் உடைக்கப்பட்ட கிருஷ்ணாபுரச் சிற்பங்கள், உதிரும் பூக்கள், வேரோடு அறுக்கப்பட்டுச் சாலையோரத்தில் சார்த்தப்பட்டிருக்கும் அகாலமான மரங்கள், காலத்தின் கால்களைக் கழுவிக்கொண்டிருக்கும் கடல்..இப்படி எல்லாவற்றையும் எழுத்துக்கூட்டி எழுதியிருக்கிறேன்

. ‘உத்திரத்துக் கொக்கி சித்திரத்தை விடப் பேரழகு’ எல்லாம் பார்வையில் இருக்கிறது. எழுதமுடிகிற என் அனுபவங்களோடும் என் பார்வையோடும் இருப்புக்கும் இழப்புக்கும் இடையே ஓசையின்றி ஆடிக்கொண்டே இருக்கிறது இந்தச் சொல்லூசல். சிவசு அய்யாவின் வழிகாட்டல் என் எழுத்துகளைத் திசைமாற்றி இருக்கிறது.  உங்கள் அன்போடு மேலும் மேலும் நன்றாக எழுதுவேன். நன்றி சிவசு அய்யா.

50, மகாவிஜி அன்பகம், கிரசண்ட் நகர், திருநெல்வேலி 627 011 
                                          அனைவருக்கும் அன்புடன்
                                                          




சௌந்தர மகாதேவன்    

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்