பேனா என்கிற இனிய நண்பன்: சௌந்தர மகாதேவன்


                   பேனாயணம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1813601

தலை குனிந்தாலும் தன்னால் எழுத்தைத் தந்து தன்னைக் கரம்பிடித்தவரைத் தலைநிமிரவைக்கமுடியும் என்று காட்டிய பேனாக்களின் மீது எனக்குக் காதல் வரக் கற்றுத்தந்தவர் என் அப்பாதான்.

 நீர்மையின் நீட்சியாய் நீலநிற,கருநிற,செந்நிற எழுத்துகளைத் தந்த, அந்த மையூற்றுப் பேனாக்களை உயர்திணையில் வைத்துப் பார்த்தவர் என் அப்பா. 

கனமான கருப்புப் பிரேம் போட்ட கண்ணாடியை மாட்டிகொண்டு, அப்பா நீலநிறப் பேனாவால் பக்கம் பக்கமாய் எழுதுவதைக் கண்டால், இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரைப் பார்த்தது போல் இருக்கும். 

அப்போது எங்கள் வீட்டில் மேசை நாற்காலியெல்லாம் கிடையாது. குட்டையான மோடாவில் அமர்ந்து கொண்டு நீளமான கட்டிலில் பரீட்சை அட்டைக் கிளிப்பில் நீள் காகிதத்தைச் செருகி அவர் தன்னை மறந்து பேனாவால் எழுதத் தொடங்குவதை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

பேனா அவருக்கு உயிர்.ஒரு கைக் குழந்தையைப்போல் அதை அவர் பராமரிப்பார். காலையில் அகில இந்திய வானொலியின் மாநிலச் செய்திகள் கேட்டுக்கொண்டே அந்த நீலநிறப்பேனாவை, பழைய பத்திக் குழலுக்குள் இருந்து நேர்த்தியாய் அவர் எடுப்பார்.அப்போது அந்தப்பேனாவும் அவர் எழுதும் எழுத்தும் மணக்கும். பேனாவைப் போட்டுவைப்பதற்கென்றே மாதாமாதம் அலுமினிய பத்திக்குழல் ஊதுபத்தியைத்தான் பாளையங்கோட்டை மாடசாமி மூப்பனார் பலசரக்குக்கடையிலிருந்து கேட்டுவாங்கி வருவார்.


பேனா அவருக்குப் பதினோராம் விரல். ஊதுபத்தி மணத்தோடு பிரில் இங்க் பாட்டிலை அதன் அட்டைப்பெட்டியோடு எடுத்து வெளியே வைப்பார். இளம்பச்சைநிற இங்க் பில்லரை இங்க்பாட்டிலுக்குள் முக்கிஇருவிரல்களால் அமுக்கிப் பேனா மையை அவர் உறிஞ்சிப் பேனாவில் விட்டுமுடிப்பதற்குள் ஜெயாபாலாஜி மாநிலச் செய்திகளை வாசித்து முடித்திருப்பார். மையடைத்தபின் அந்த இங்க் பில்லரை அலுமினிய வாளி நீரில் முக்கிக் கழுவும்போது டெல்லி அஞ்சலில் ஆகாஷ்வாணி காலைச் செய்திகளை சரோஜ்நாராயண்சாமி வாசித்துக் கொண்டிருப்பார்.

மைக்கூடு அவரைப் பொறுத்தவரை நிம்மதிக்கூடு. மையடைப்பது அவருக்குத் தியானம் செய்வது மாதிரி. லயித்துச் செய்வார். 

மைபாட்டில் காலியானவுடன் தூரஎறிய மாட்டார்.அதன் மூடியில் ஓட்டைபோட்டு ஸ்டவ் திரியை உள்ளே நுழைத்து காலிமைப்புட்டியில் மண்ணெண்ணெய் ஊற்றி அடுத்த ஒருமணி நேரத்தில் அதை விளக்காக மாற்றிவிடுவார். 

மின்சாரம் போன பொழுதுகளில் மைகூடு விளக்கில் அப்பா எழுதத் தொடங்குவது, ஏதோ எழுத்தே தன்னைச் சுடரேற்றி எரிகிறமாதிரி தோன்றும். மையடைக்கும்போது வெளியே கசியும் மையை அவர் பழைய பனியன் துணியால் துடைத்து அப்பேனாவை மெருகூட்டுவார்.

எதையும் பயன்படுத்திவிட்டுத் தூர எறிவது அவருக்குப் பிடிக்காது.தேய்ந்து போன குட்டைப் பென்சிலைக் கூடத் தூர எறியமாட்டார். அதைப் பயன்படுத்திய பழைய பேனாவில் செருகிச் சிலநாட்கள் எழுதுவார்.

 அதனால் எதற்காவது பயன்படும் பழையபேனாக்கள் என்றால் அவருக்கு உயிர். எழுதாமல் போனது என்பதற்காக எந்தப் பேனாவையும் அவர் தூரஎறிந்து நாங்கள் பார்த்ததில்லை. பத்திரமாக அதை பழைய ஜியாமென்றிபாக்சில் போட்டுமூடிவைப்பார். 

அவர் தன் பேனாவைத் தரையில் வைத்து நாங்கள் பார்த்ததில்லை.அதற்கென உத்திரக்கட்டைக்கு இடையில் குறுக்கே பலகை அடித்து வைத்த அந்தஇடத்தில்தான் வைப்பார்.

பவுண்டன் பேனாவால் எழுதும்போது, பனையோலையில் குத்தூசியால் அழுத்தமாய் எழுதுகிற பழைய புலவனாய் அப்பா மாறியிருப்பார்.

எடுத்து எழுதும்போது காகிதத்தில் வழுக்கிச்செல்லாமல் கரகரவென இழுக்கும்போதே அவருக்கு யாரோ தொட்டது உறுதியாகிவிடும். சட்டென்று கோபம் வந்து, யார் என்பேனாவைத் தொட்டது? என்று கேட்பார். 

பேனாவின் கழுத்துமறைகள் இறுகிவிடாமல் இருக்கப் பழைய ரெமிபவுடர் டப்பாவிலிருந்து ஈர்க்குச்சியால் சிறிதுகிரீஸ் எடுத்துத் தடவிமெதுவாய் அதன் கழுத்தைமறையில் அதை அவர் வைத்துத்திருப்பி முடிக்கும்போது ஒரு கவிதை எழுதிமுடித்த திருப்தி அவர் முகத்தில் தெரியும்.


 காட்டாறாய் ஓடும் பேராறு, மலையிலிருந்து கீழே இறங்கும்போது அருவியாய் கொட்டுகிற மாதிரி எழுதும்போது நிப்பிலிருந்து இங்க் நீலஅருவியாய் ஊற்றெடுக்க அதற்கென்று வைத்திருக்கும் முனைமழுங்கிய பிளேடால் நிப்பின் மேல்பகுதியைக் கீறிவிடுவார்.

 உடன் எதையாவது எழுதிப் பார்த்துவிடவேண்டும் அவருக்கு. சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் அவர் பயின்ற வகுப்பறையில் மேசையிலேயே மைபுட்டி வைப்பதற்கென்று செதுக்கப்பட்டிருந்த வட்டவடிவப்பள்ளத்தை எங்களுக்குக் காட்டியிருக்கிறார். 

மைபுட்டியில் மையை முக்கிப் பருமனான பவுண்டன் பேனாவால் அவர் அன்று எழுதிய நினைவுகளைச் சொல்வார்.

ஒருபக்கம்மட்டுமே எழுதியிருந்த பயன்படுத்தப்பட்ட வெள்ளைக் காகிதங்களை ஆரெம்கேவி கவரில் இருந்துஎடுத்து எழுதிப் பார்ப்பார்.காகிதங்களை தேவையில்லாமல் பாழாக்குவது அவருக்குப் பிடிக்காது. 

இங்க் அடைத்த பேனாவால் முதன்முதலாய் எழுதும் எழுத்து அவருக்கு முக்கியமானது. 

ஒவ்வொருநாளும் நம்பிக்கையோடு எதையாவது எழுதிவிடவேண்டும் அவருக்கு. பேனாவால் சில நாட்கள் முப்பதுநாற்பது பக்கம் கூட எழுதித் தள்ளிவிடுவார். அவர் மறுநாள் நடத்தும் தமிழ்ச்செய்யுளைத் தன் கைப்பட எழுதிப் பாடக்குறிப்பு நோட்டை ஒன்பது மணிக்குள் தயார்செய்து வைத்திருப்பார். 

பாடல் வரிகளை எழுதுவதற்கென்றும் விடைத்தாள் திருத்தவென்றும் சிவப்புமைப் பேனாவைப் பயன்படுத்துவார். 

ஹீரோபேனா வந்தபோது ஹீரோவானது பேனா. மைபுட்டிக்குள் அதன் தலையை நுழைத்து தலையால் மையை உறிஞ்சமுடியும் என்பது அன்று அதிசயம்.ஆனால் ஏனோ தங்கமூடி போட்ட அந்த ஹீரோபேனாக்களை அப்பாவால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை

மேட் இன் சைனா என்று இருப்பதாலோ என்று கேட்டிருகிறேன்,பதில் ஏதும்சொல்லாமல் இருந்துவிட்டார். கிங் ஆப் கிங்ஸ் ரீபில் முப்பத்தைந்து பைசாவுக்குக் கிடைத்தபோது அதிசயமாயிருந்தாலும் நீர்மைஇல்லாததால் எழுதுவதற்கு அப்பாவுக்கு என்னவோபோல் இருந்தது. எவருக்கோ தைத்துவைத்த சட்டைக்குள் நம் உடலைச் சமபந்தமின்றி நுழைக்கிறமாதிரி என்னால் அன்று ரீபில் பேனாக்களைப் பற்றிய நினைப்பு இருந்தது. அதில் மைகாலியானபின் மையடைக்க முடியாத காரணத்தாலும் பயன்படுத்தித் தூரஎறியச் சம்மதமில்லாமலும் அவர் அதையும் எழுதப்பயன்படுத்தவில்லை.

மையூற்றுப் பேனாவின் மீது மதிப்பு வந்தது அப்பாவால்.முதன்முதலில் அவர் வாங்கித்தந்த பேனா எனக்குப் பொக்கிஷம்.என் எழுத்துக்கள் தனியே தெரியவேண்டும் என்பதற்காக பேனா மையோடு ஸ்கெட்ச்மை சேர்த்து அடைத்து எழுதிய காலம் உண்டு.

பேனாவை வைத்து எழுதிக்கொண்டிருந்தபோதே மறந்து மூடாமல் அப்படியே பைக்குள் போட்டுத் திட்டுதிட்டாய் மையோடு வகுப்பிற்கு வந்த செல்வராஜ் சார்வாள் இன்றும் எங்கள் மதிப்பிற்குரிய ஆசிரியர். எழுவதும் எழுதுவதும் எழுச்சிக்காக என்பார் மரியராஜ் சார்வாள்.

அந்தப் பேனாவால் ஏப்ரல்பூல் செய்ய சட்டையில் அடிக்கமுடிந்தது. ஆட்காட்டிவிரலின் பக்கவாட்டிலும் நடுவிரலின் பக்கவாட்டிலும் நீலமையோடு வந்து வெள்ளைச் சுவற்றில் உரசிக்கழுவ முடிந்தது.
ஆறு போல் நீண்டுகொண்டே செல்லும் மையடைக்கப்பட்ட பேனா.மூடிமாறிப்போன பேனா தலைமாற்றி ஓட்டப்பட்ட உடலாய் காட்சிதரும். எப்படி விட்டோம் அந்த அழகியல் உற்சவத்தை.
பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறி என்பதா நம்பண்பாடு? 

எப்படி நெறித்தோம் அந்த நீர்மை வழிந்த எழுத்தின் கழுத்தை. எழுதித்தீர்ந்தபின் எறிந்துவீசுகிற வேண்டாக் கழிவல்ல பேனாக்கள். மூடியைத் திறந்தால் காற்றில் காணாமல் போகிற கற்பூரம் மாதிரி காணமல் போகிறோம் பழைய பேனாக்கள் கண்டால்.
ஆன்மாவின் அழுத்தமானபதிவு எழுத்து.

தெளிவின் அடையாளம் எழுத்து.கம்பியில் குத்தப்பட்ட பழைய கடிதங்கள் சொல்கின்றன நம் மூதாதையரின் பேனாக்கள் வரைந்த எழுத்தின் சுவட்டை. என் எழுத்து என் ஆளுமை,என் எழுத்து என் தனித்துவம்.நான் எழுதிய எழுத்தில் என் முகம் காட்டும் கண்ணாடி.என் எழுத்தை என் கண்களால் காண்பது எத்தனை அழகானது.

காட்டாறாய் ஓடும் பேராறு, மலையிலிருந்து கீழே இறங்கும்போது அருவியாய் கொட்டுகிற மாதிரி என் அப்பாவின் மையூற்றுப் பேனாக்கள் எழுதின. அதில் சிந்திய மை சிந்தனையைத் தூண்டியதை மறுக்க முடியுமா ?

 அன்று அதன் எந்தப் பாகம் பழுதுபட்டாலும் ஒருரூபாய்க்குள் மாற்றிவிட முடிந்ததால் ஒரு பேனாவைப் பத்தாண்டுகள்கூட வைத்து எழுதிவிடமுடிந்தது. அதனால் எழுதிக்கொண்டே இருந்தோம் எதையாவது. அன்று எழுத்தில் ஈரமிருந்தது,நமக்கு எழுதவும் நேரமிருந்தது.

அதனால்தான் அன்று எழுதிய கடிதங்களும் இலக்கியமானது. அஞ்சலட்டையில் அச்சடித்ததைப் போல் எழுதிய அந்தக்கால எழுத்துக்களில் காலம் உறைந்திருக்கிறது புழுதிபடிந்த பழைய நினைவுகளின் படிக்கட்டில். அதனால்தான் காலம் காப்பாற்றி வைத்திருக்கிறது அதன் ஒச்சமாகித் தீர்ந்த மிச்சவினாடிகளையும்.
பத்தாயிரம்ரூபாய்க்குக்கூட இன்றைக்குப் பேனாக்கள் வந்துவிட்டன..

ஆனால் எழுத விரல்கள் இன்றிக் கணினியின் தட்டச்சு விசைப்பலகைக்கருகேயும், கல்லூரியில் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடத் தோதாய்.. சட்டைப் பையைக் கவ்வியபடியும் ஒற்றைக்காலில் தன்னந்தனியே தவம்செய்துகொண்டிருக்கிறது பாவப்பட்ட பயன்குறைந்து போன பரிதாபப் பொருளாய்.








Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்