பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் திரு.உதயசந்திரன் அவர்களின் அருமுயற்சி..EVALUATION FRAME WORK -SEMINAR ON DEVELOPING NEW CURRICULAM

பள்ளிக்கல்வித்துறை நடத்திய புதிய பாடத்திட்டக் கருத்தரங்கம்
பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக உதயசந்திரன் இ.ஆ.ப.வந்த பின் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. பத்தாம்வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட முறைமை நிறுத்தப்பட்டது.

 பதினொன்றாம் வகுப்பு ஆண்டுத்தேர்வு அரசுப் பொதுத் தேர்வாய் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்வு மதிப்பெண் 200 லிருந்து 100 ஆகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்களின் பொதுஅறிவுத் திறனை மேம்படுத்தவும் மொழித்திறனை வளப்படுத்தி வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் தமிழகமெங்குமுள்ள 31322 அரசுப் பள்ளிகளுக்கு ரூ 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் வாங்கப்பட உள்ளன. பள்ளிமாணவர்கள் போட்டித்தேர்வுகளில் பங்குபெறப் பயிற்சிதரும் நோக்கில் அனைத்து ஒன்றியங்களிலும் போட்டித் தேர்வுப்பயிற்சி மையங்களை அரசு ஏற்படுத்த உள்ளது.

பாடத்திட்ட மாற்றம்

 தேசிய அளவிலான தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறப்பாக எதிர்கொள்ள வைக்கும் நோக்கில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஜூலை 21,22  ஆகிய நாட்களில் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திலும் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் புதிய பாடத்திட்டக் கருத்தரங்கினை ஒருந்கிணைத்து நடத்தியது.

 தமிழக அளவில் சிறந்த கல்வியாளர்கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், மற்றும் 1120 பள்ளியாசிரியர்கள் என 1200 பேரை சென்னைக்கு வரவழைத்து புதிய பாடத்திட்டக் கருத்தரங்கினை 22 அரங்குகளில் நடத்தியது.

அமர்வுகள்

இரண்டு நாட்களும் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை எவ்வாறு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது? திறன் அடிப்படையில் மாணவர்களை எப்படி மதிப்பிடுவது? 

தேர்வு முறையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவருவது என்று காலை முதல் மாலை ஆறுமணி வரை விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தந்தப் பாடங்களை நடத்தும் ஆசிரியர்களிடம் எழுத்துப்பூர்வமான மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டது. 

ஒவ்வொரு அரங்கிலும் நெறியாளர்கள் தலைமையில் கருத்தாளர்கள் உரையாற்ற அவர்கள் முன்வைத்த கருத்தியலின் அடிப்படையில் ஆசிரியர்கள் தாங்கள் அனுபவப் பூர்வமாகச் சந்தித்த வகுப்பறைச் சவால்கள் குறித்து விவாதங்களை மேற்கொண்டனர்.

தமிழ்ப் பாடத்திட்டம்

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறைத்தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் ச.மகாதேவன் ஜூலை 22 அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கரிகாலன் அரங்கில் நடைபெற்ற புதிய பாடத்திட்டக் கருத்தரங்கில் கருத்தாளராய் பங்கேற்று உரையாற்றினார். அவர் தமது உரையில்..

“ பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப்பாடங்களை எவ்வாறு மாற்றம் செய்வது என்பது குறித்த கருத்துகளை 400 மாணவர்களிடம் சேகரித்து அதன் அடிப்படையில் என் உரையை வழங்கினேன். 

மனப்பாடம் சார்ந்த தமிழ் இலக்கியக் கல்வியைத் திறன்சார்ந்த கல்வியாக மாற்றவேண்டும் என்றால் பாடத்திட்டத்திலிருந்து மாற்றம் தொடங்கப்படவேண்டும். வாழ்வியல் சார்ந்த உயர்மதிப்பீடுகளை வழங்கி வாழ்வை ரசிக்கத் தூண்டுகிற வகையில் தமிழ்ப்பாடத்திட்டங்கள் எளிமையாக இனிமையாக வகுக்கப்படவேண்டும்.

தமிழ்ப் பண்பாடு, தமிழின் மொழிவளம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் அறிவியல் சிந்தனையோடு காலத்திற்கு இயைந்த வலுவான பயன்மிகுந்த பாடத்திட்டத்தை வகுக்கவேண்டும்.


செய்யுள் சார்ந்த இலக்கணப் பாடம் நடைமுறை சார்ந்த பயன்பாட்டு இலக்கணமாய் மாற்றப்பட வேண்டும். 

தமிழ்த் துணைவன்களை நம்பி மாணவர்கள் தேர்வு எழுதுவதைவிட ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை நம்பி மாணவர்கள் பாடங்கள் பயிலவேண்டும். 

தமிழக அரசின் அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பொதுத்தமிழ் தாளின் இலக்கணப் பகுதிகள் மேல்நிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டால் மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் குறித்த அறிமுகம் ஏற்படும். 

குடிமைப்பயிற்சி தேர்வுகள் குறித்த அறிமுகம் தமிழ்வகுப்புகளில் வழங்கப்படவேண்டும். சமகால எழுத்தாளர்களின் கவிதைகளை சிறுகதைகளைப் பாடத்திட்டத்தில் வைத்து மாணவர்களைத் திறனாய்வு செய்யக் கற்றுத்தரவேண்டும். தினமும் மாணவர்களுக்குத் தலைப்புகள் தந்து பேசுவதற்குப் பயிற்சி தரவேண்டும். 

பொலிவுறு வகுப்பறைகளில் இணையத்தின் துணைகொண்டு தமிழ் இலக்கியங்களைப் புதுமையாக  நடத்தவேண்டும். 

பிழையின்றித் தமிழை மாணவர்கள் எழுதும் நோக்கில் அவர்களுக்குப் படைப்பிலக்கியங்கள் எழுதும் பயிற்சிகள் பள்ளிகளில் தொடங்கப்படவேண்டும். 

அவர்களின் எழுத்துகளை வெளியிடும் நோக்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர் படைப்பேடு தொடங்கப் படவேண்டும். 

பள்ளிகளில் வாரம் ஒருநாள் நூலகநேரம் அட்டவணையில் ஒதுக்கப்பட்டு மாணவர்களுக்கு நல்ல நூல்களை வாசிக்கும் பயிற்சியை வழங்கவேண்டும். பதின்பருவத்தில் அவர்களை அறம்சார்ந்து ஆற்றுப்படுத்தும் நோக்கில் இலக்கியங்கள் பாடத்திட்டத்தில் இடம்பெறவேண்டும். 

அறிவியல் வகுப்புகளில் நடைபெறுவதைப் போல் தமிழ் வகுப்பிலும் மொழிஆய்வகங்கள் மூலம் சரியான உச்சரிப்போடு சொற்களை வாசிக்கவும் பேசவும் கற்றுத்தரவேண்டும். 


மொத்தத்தில் மேல்நிலைப் பள்ளியின் தமிழ்ப்பாடம் மாணவர்களிடம் தன்னம்பிக்கையையும் படைப்பாற்றலையும் தூண்டுவதாக இருக்கவேண்டும் என்று பேசினேன். அரங்கிற்கு வருகைதந்த பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் திரு.டி. உதயசந்திரனிடம் நேரில் எடுத்துரைத்தேன்” என்று பேசினார். 

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்