‘மேலும்” இலக்கிய அமைப்பின் சார்பில் மகாராஜநகரில் கணினித் தமிழ் வளர்ச்சிக் கலந்துரையாடல் மற்றும் இலக்கியக் கூட்டம்




திருநெல்வேலியில் உள்ள மேலும் இலக்கியஅமைப்பின் சார்பில் கணினித் தமிழ் வளர்ச்சிக் கலந்துரையாடல் கூட்டம் மற்றும், தி இந்து இணைப்பிதழ் ஆசிரியர் ஐ.அரவிந்தன் எழுதிய “பயணம்” நாவல் திறனாய்வுக்கூட்டம் மற்றும் 2013 ஆண்டுக்கான தமிழக அரசின் கணினித்தமிழ் விருது பெற்ற பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களுடன் நேர்காணல் ஆகிய நிகழ்வுகள் 24.10.2015 சனிக்கிழமையன்று 10.30 மணிக்கு மகாராஜநகர் வசந்தம் காலனியில் நடைபெற்றது. 
 
மேலும் இலக்கிய அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சிவசு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.  அமைப்பின் தலைவர் பேராசிரியர் கட்டளை கைலாசம் வரவேற்றுப் பேசினார். 

எழுத்தாளர் வண்ணதாசன், தமிழக அரசின் கணினித்தமிழ் விருது பெற்ற பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை மேனாள் துறைத்தலைவர் பேராசிரியர் தனஞ்செயன்,திருநெல்வேலி அகிலஇந்திய வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் பிரதாப்சிங், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன்,கழுகுமலை தமிழாசிரியர் அசின்தங்கராஜ்,குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்.கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் ந.சங்கரராம பாரதி,நெருப்புவிழிகள் வேலாயுதம் ஆகியோர் தற்காலக் கணினித்தமிழ் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தன் சிறப்புரையில்,

 தமிழகமெங்கும் ஒருங்குறிப் பயன்பாடு வரவேண்டும்
..........................................................................................................................................
“ உலகம் முழுக்க யூனிகோட் எனும் ஒருங்குறிப்பயன்பாடு வந்தபின்பும்கூட அரசாணை பிறப்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆனபின்னும்கூட அரசு அலுவலகங்களில் இன்னும் வானவில் எனும் ஒருங்குறியல்லாத எழுத்துருவே பயன்படுத்தப்படுகிறது.
 
மொழியியலோடு கைகோர்த்து உலகெங்கும் கணினி ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்க நாம் இன்னும் எழுத்துருவில் நின்றுகொண்டு பின்தங்கியிருக்கிறோம். சிங்கப்பூரில் மென்தமிழ் எனும் தமிழ்மென்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்படும் சூழலில் தமிழகத்தில் கணினிப் பயன்பாட்டில் ஒரே எழுத்துருவைப் பயன்படுத்தாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு எழுத்துருவைப் பயன்படுத்தும் நிலையே உள்ளது. 

கணினிப்பயன்பாட்டில் தமிழ் பரவலாகப் பயன்படுத்தப்படும்போது தமிழ்மென்பொருளுக்கான சந்தை ஏற்படும்.அப்போது உலகின் முன்னணி நிறுவனங்கள் தமிழ்ப் பயன்பாடிற்கான புதிய ஆய்வுகளை மேற்கொண்டு புதிய மென்பொருட்களைத் தமிழுக்குத் தருவர். தமிழக முதல்வரிடம் பரிசுபெறக் காரணமாக அமைந்த மென்தமிழ் மென்பொருளில் லட்சக்கணக்கான தமிழ்ச்சொற்களுக்கான அகராதி உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் சந்திப்பிழை திருத்தி அதில் உள்ளதால் நீங்கள் ஒருங்குறியில் பிழையோடு தட்டச்சு செய்வதை அதுவே திருத்தித் தரும். எம்.எஸ்.வோர்ட் போன்று அனைத்து செயல்பாடுகளையும் இதன்மூலம் மேற்கொள்ளலாம். முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு உதவும்பொருட்டு பல உதவுகருவிகள் இதில் உள்ளன.ஒருங்குறியல்லாத 15 எழுத்துருகளை ஒருங்குறியாக மாற்றும் எழுத்துரு மாற்றி இதில் இடம்பெற்றுள்ளது.

இதனால் இதழ்களுக்கோ இணையத்திலோ எழுதும்போது பிழையில்லாமல் எழுத முடிகிறது. கணினித் தமிழைப் பரவலாக தமிழக அரசின் இணையக் கல்விக் கழகம் சார்பில் நிதியுதவி செய்யப்பட்டு கல்லூரிகளில் கணினித் தமிழ் மன்றங்கள் ஏற்படுத்தப்பட உதவிகள் செய்யப்படுகின்றன.” என்று பேசினார்.

நாவல் திறனாய்வு நிகழ்ச்சி
தி இந்து இணைப்பிதழ் ஆசிரியர் ஐ.அரவிந்தன் எழுதிய “பயணம்” நாவல் திறனாய்வுக்கூட்டம் நடந்தது.மேலும் தமிழ்இலக்கிய அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் மேலும் சிவசு, எழுத்தாளர் ஐ.அரவிந்தன் எழுதிய “பயணம்” நாவல் குறித்த தன் திறனாய்வு உரையை முன்வைத்து உரையாற்றினார்.அர்விந்தனின் ராமநாதன் பாத்திரத்தின் கருத்தியல் நிலைகுறித்து மேலும் சிவசு விளக்கிப் பேசினார்.

நேர்காணல் 

தமிழக அரசின் கணினித் தமிழ் விருது பெற்ற பேராசிரியர் ந.தெய்வசுந்தரத்தோடு நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் அமைப்பின் செயலாளர் சௌந்தர மகாதேவன் நன்றிகூறினார்.நிகழ்சிக்கான ஏற்பாடுகளை மேலும் இலக்கிய அமைப்பு சிறப்பாகச் செய்திருந்தது.

படத்தில்: தமிழக அரசின் கணினித் தமிழ் விருது பெற்ற சென்னைப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் ந.தெய்வசுந்தரத்தோடு மேலும் அமைப்பின் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள்

                       பேராசிரியர் சௌந்தர மகாதேவன்,செயலாளர்,
                        மேலும் இலக்கிய அமைப்பு,திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்