இப்படியும் ஒரு மாமனிதர்ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவனர் திரு.இராமகிருஷ்ணன்





தன்னிடம் இருப்பதைத் தருவதன்று தானம்,தன்னையே தருவதுதான் தானம்.மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக்காகத் தன்னையே தந்த உயர்ந்த மனிதர் ஆயக்குடி அமர்சேவா சங்க நிறுவனர் திரு.இராமகிருஷ்ணன் அவர்கள்.வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் உன்னதமானவர்கள்,அவர் நம்பிக்கையின் வாழ்ந்துகாட்டி. சமூக சேவகர் திரு.பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள்தான் இராமகிருஷ்ணன் குறித்து எனக்குச் சொன்னவர்.1997 இல் எம்.ஏ மாணவனாய் பயின்றபோது பாலம் பாலம் கல்யாணசுந்தரம் அவர்களின் வாழக்கை வரலாற்றினை எழுதினேன்.அவர் விதைத்த விதைதான் சேவைநிறுவனங்களை நோக்கி வாழ்வைத் திருப்பியது.ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது “ குற்றாலத்திலிருந்து பத்துகிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் ஆய்க்குடி, அங்கே இராமகிருஷ்ணன் என்கிற ஒப்பற்ற மனிதர் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்குப் பாதுகாவலராக இருந்துகொண்டிருக்கிறார்.நான்காமாண்டு பொறியியல் பட்டப்படிப்புப் பயிலும்போது அவர் கடற்படை அதிகாரிக்கான பணிக்கான தேர்வில் கயிறுஏறும்போது கைதவறி கீழேவிழுந்தார்.தண்டுவடம் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழே உறுப்புகள் செயல்படா நிலையில் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிலைகுலைந்துபோன அவருக்கு நம்பிக்கை ஊட்டியவர் டாக்டர் அமர்.அவர் பெயரால் தன் சொந்தகிராமத்தில்  அமர்சேவா சங்கத்தை ஒரு கீற்றுக்கொட்டகையில் 1981 ஆம் ஆண்டில் தொடங்கினார்.இன்று 32 ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள அமர்சேவா சங்கவளாகத்தில் இன்று ஆரம்பப்பள்ளியும் நடுநிலைப்பள்ளியும் செயல்படுகிறது.மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி மையமும் சிறப்பாகச் செயல்படுகிறது.ஆசியாவிலேயே சிறப்பான முதுகுத்தண்டுவடச் சிகிச்சை மையம் இங்குச் செயல்படுகிறது.அவரோடு சேர்ந்து கழுத்துக்குக்கீழ் செயல்படாத எஸ்.சங்கரராமன் இணைந்து  மாற்றுத்திறனாளிகளுக்காக உழைத்து வருகிறார்கள்.1994 இல் அன்றைய பாரதப் பிரதமர் திரு.பி.வி.நரசிம்மராவ் அவர்களிடம் விக்யான் பவனில் விருது பெற்றபோது அந்த அரங்கில் திரு.ராமாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். மாற்றுத்திறனாளிகள் குறித்து இதழ்களில் நான் எழுதுவதற்குக் காரணம் அய்யாதான். 800 சேவைக் குழுக்களின் மூலம் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை செய்துவருகிறார். நேற்று ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திலிருந்து அழைப்பு. சேவை செய்வோருக்கு ஆளுமைப்பயிற்சி அளிக்க அழைத்துள்ளார்கள். 13.6.2016 அன்று நடைபெறஉள்ள ஆளுமைப்பயிற்சி முகாமில் உரையாற்ற ஆய்க்குடி செல்கிறேன்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்